‘ப.சிதம்பரம் ஒரு பார்வை’ என்ற புத்தகத்தின் வெளியீடு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நூலில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் புராணம் பாடப்படுகிறது.
இந்தியாவில் காப்ரட் கம்பனிகள் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட யுத்தத்தை உள்துறை அமைச்சராக இருந்த போது சிதம்பரமே வழி நடத்தினார். ஆயிரக்கணக்கான பழங்குடிப் பெண்கள் சாரி சாரியாகப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதை நெறிப்படுத்தியவர் சிதம்பரம்.
இதே காப்ரட் கம்பனிகளின் நலனுக்காக இலங்கையில் இனப்படுகொலையே நடத்தப்பட்டது. அந்த நேரத்தில் இலங்கையில் பயங்கரவாதம் அழிக்கப்படுகிறது என்று கூறியவர் சிதம்பரம்.
இந்த நிலையில் விழாவில் பேசிய கருணாநிதி பின்வருமாறு குறிப்பிடுகிறார். ‘தமிழனை வாழ்விக்க ப.சிதம்பரம் எடுத்த முடிவு கல்வெட்டில் இடம்பெறும். அதை நிறைவேற்ற சூளுரையை நாம் எடுக்க வேண்டும். நாம் என்றால் அதில் ப.சிதம்பரமும் இருக்கிறார். எனவே, இந்த திட்டத்தை நிறைவேற்றித்தரும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.’
அவர் மேலும் பேசுகையில்,
ப.சிதம்பரம் ஒரு புத்தகத்தில், வாணிபத்தால் எந்த நாடும் அழிந்து போனதில்லை என்று பெஞ்சமின் பிராங்கிளின் கூறியிருக்கிறார் என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறார். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு வாணிபமே முக்கியம் என்பதை ப.சிதம்பரம் அழுத்தமாக கூறியிருந்தார். வாணிபம் இந்தியாவில், தமிழகத்தில் வலிமைபெற வேண்டும் என்று அண்ணா, காமராஜர் போன்றோர் விரும்பினார்கள். அதையே ப.சிதம்பரமும் விரும்புகிறார் என்பதை நம்மால் உணர முடிகிறது.
அண்ணா வெளியிட்ட அறிக்கையில், நாம் சேது சமுத்திர திட்டத்தை உருவாக்க வேண்டும். அதனால் கிடைக்கும் நன்மைகளை எண்ணிப்பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். தமிழன் நலன் பேணும் அனைவரும் சேது சமுத்திர திட்டம் நிறைவேற குரல் கொடுப்பார்கள்.
தமிழகம் முழுவதும் 27-3-1967-ல் அண்ணா எழுப்பிய குரல், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், தூத்துக்குடி துறைமுக திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதாகும். அதை காமராஜர் வரவேற்றார். இப்போதுள்ள நிலையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால், 1200 கிலோ மீட்டர் தூரம் இலங்கையை சுற்றி வரவேண்டும். திட்டத்தை நிறைவேற்றினால், சுற்றி வர வேண்டியது இருக்காது. ஆனால், அந்த திட்டம் இன்றும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அப்போது, தி.மு.க., அ.தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் எல்லாம், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று கூறப்பட்டுவந்தது. தமிழனுக்கு உள்ள தலையெழுத்து, அன்று சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று உறுதியாக கூறியவர்கள் எல்லாம், இன்று அந்த திட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்துகிறார்கள். இது சாபக்கேடாகும்.
சேது சமுத்திர திட்டத்தால் வாணிபம் பெருகும். வியாபாரம் செழிக்கும். பொருளாதாரம் வளரும். எனவே, இந்த திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும். சேது சமுத்திர திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். சோனியாகாந்தி முன்னிலை வகித்தார். ஆனால், திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. திட்டம் நிறைவேறினால் தமிழனுக்கு நிறைய பலன்கள் கிடைக்கும். அந்த திட்டத்தை தனது 67-வது பிறந்தநாளில் நிறைவேற்றி தருவதாக ப.சிதம்பரம் உறுதி அளிக்க வேண்டும்.’