நேற்று கேரளாவில் இருந்து வந்த ரயில் கோவை அருகில் உள்ள மதுக்கரை என்ற இடத்தில் யானைகள் மீது மோதியதில் இரண்டு குட்டியானைகள் உயிரிழந்தன.இது பலத்த அதிர்ச்சியை உருவாய்க்கியது.
யானைகள் மரணம் பலகாலமாக சர்ச்சைகளை உருவாக்கிய நிலையில் தமிழ்நாடு வனத்துறை ரயில்வேதுறையிடம் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது. யானைகள் வழித்தடங்களில் ரயிலை இயக்கும் போது மெதுவாக இயக்க வேண்டும் என்பதுதான் அந்த ஒப்பந்தம். அந்தவகையில் கேரள மாநிலம் வாழையாற்றில் இருந்து மதுக்கரை வரை ரயிலை 30 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஆனாலும் யானைகள் நேற்று ரயில் மோதி இறந்த நிலையில் ரயிலை இயக்கிய சுப்பைய்யர், அகில் என்ற இரண்டு ரயில் டிரைவர்களை விசாரணைக்காக வனத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றதோடு ரயில் எவ்வளவு வேகத்தில் இயக்கப்பட்டது என்பதைக் கண்டறிய இயந்திரத்தில் உள்ள சிப்பையும் கைப்பற்றினர்.
இந்த சிப்பைக் கொண்டு ரயில் வேகத்தைக் கணக்கிட தமிழக வனத்துறை அதிகாரிகள் ஆறுபேர் கேரள மாநிலம் பாலக்காடு சென்றனர். அப்போது அவர்களை சுற்றி வளைத்த பாலக்காடு கோட்ட ரயில்வே அதிகாரிகள் அவர்களை சிறைவைத்தனர். மேலும் அவர்கள் மீது திருட்டு வழக்கு போடுவதாகக் கூறி அவர்களை கைது செய்யும் திட்டத்தோடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.இந்த செய்தி கேள்விப்பட்ட அதிகாரிகளின் உறவினர்களும் தொழிற்சங்கத்தினரும் பாலக்காட்டில் அவர்கள் சிறைவைக்கப்பட்டிருக்கும் இடத்தில் குழுமியுள்ளார்கள்.