தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் ஆயுள் தண்டனைக் கைதிகள் உள்ளனர். இந்தியாவில் பொதுவாக ஆயுள் தண்டனை என்பது 13 ஆண்டுகள். இந்த 13 ஆண்டுகளுக்குப் பிறகு சிறைக் கைதி ஒருவரின் நன்னடத்தை விதி சரியாக இருந்தால் அவர் விடுதலை செய்யப்பட்டு விடுவார்.
ஆனால் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்றோர் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். அதே போன்று இஸ்லாமிய சிறைக்கைதிகளும் 20 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளார். இந்த குழு தொடர்பாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அக்கடிதத்தில்,
“ஒரு மனிதனை 8 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வைத்திருப்பதே அதிகப்படியானது என்றார் மறைந்த நீதியரசர் வி.ஆர். கிருட்டிணய்யார். ஒரு நாடு நாகரீகமடைந்துவிட்டது என்பதை, ‘சிறைவாசிகளை அவ்வரசு எவ்வாறு கையாள்கிறது’ என்பதில் தான் அடங்கியிருக்கிறது என சொல்லப்படுகிறது. ஆயுள் சிறை என்பது அரசின் தண்டனை குறைப்பு அதிகாரித்திற்கு உட்பட்டதே என்று மாண்புமிகு உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் தெளிவுபடுத்திவிட்டது.
சிறை விதிகளின்படி இவ்வதிகாரத்தை பயன்படுத்தி, முன்விடுதலை பெற தகுதி பெற்றும் சிறை சீர்த்திருத்தங்கள் குறித்து புரிதலற்ற அதிகாரிகள் கடந்த காலங்களில் விடுதலைக்கு தடையாக இருந்தனர். இதனையெல்லாம் உணர்ந்தவராக ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை தொடர்பில் முதலமைச்சரின் அறிவிப்பு, தமிழக வரலாற்றில் ஒரு மைல் கல்.
முதல்வரின் ஆணைப்படி ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் உளவியலாளர், மனநல மருத்துவ இயக்குநர், மருத்துவ கல்வி இயக்குநர், மூத்த வழக்கறிஞர், தலைமை நன்னடத்தை அலுவலர் மற்றும் சிறைத்துறை துணைத்தலைவர் என அமைக்கப்பட்டுள்ள குழுவின் தன்மையே முதல்வரின் மனித நேய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
முதல்வரின் கனிவுமிக்க இந்த மனிதநேய அறிவிப்பிற்கு, 31 ஆண்டுகளாக சிறைவாசிகள் துன்பங்கள் குறித்து நன்கு அறிந்தவள், நேரடி சாட்சி என்ற முறையில் என் அன்பு கலந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக்கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளின் தாய் அற்புதம்மாள், மகனை விடுவிக்க பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார்.