உலகப்புகழ் பெற்ற இந்திய சிந்தனையாளர்அமர்த்தியா சென் எழுதிய கட்டுரைகள், சொற் பொழிவுகளை தொகுத்து சமீபத்தில் ஒரு நுhல் வெளிவந்துள்ளது. ‘வாதிடும் இந்தியன்’ (The Argumentative Indian )என்ற தலைப்பில் இந்தியாவின் தொன்மையான அறிவுலகத்தை அவர் அறிமுகம் செய்துள்ளார். நமது பண்பாட்டு பரிமாணங்களை ஆழமாக இந்த நூலில் அமர்தியாசென் விளக்கியுள்ளார்.
பல்லாயிரக்கணக்கான வருடங்களாக ‘வாதிடும் இந்தியன்’ எதையும் சந்தேகிப்பவனாக, எதையும் கேள்வி கேட்பவனாக, மறுப்புரை நிகழ்த்தி வாதிடுபவனாக இருந்து வந்துள்ளான். இந்த மேன்மையான உண்மையை பல ஆதாரங்களோடு அமர்த்தியா சென் விளக்குகிறார்.
இத்தகைய கேள்வி கேட்டு வாதிடும் தன்மைதான் தொன்மை இந்தியாவில் பல அறிவியல் சிந்தனைகளுக்கும் வழிவகுத்தது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே ஆயுர் வேதம் எனும் பெயரில் மருத்துவம் வளர்ந்திருந்தது. 5ம் நுhற்றாண்டில் ஆர்யபட்டர், 6ம் நுhற்றாண்டில் வராகமிகிரர், 7ம் நுhற்றாண்டில் ஆர்யபட்டா போன்றோர் இயற்கையை விளக்குபவர்களாக, இயற்கையின் மர்மங்களை துவக்குபவர்களா, கிரகண சஞ்சாரங்களையும், சூரிய,சந்திர கிரகணங்களையும் கணக்கிட்டு கூறுபவர்களாகவும் இருந்தனர். விஞ்ஞானப் பார்வைக்கு துவக்கமாக இருந்தனர்.
இந்திய சிந்தனைச் சிறப்பு :
பல்வேறு சிந்தனைகள் தழைத்து ஓங்கிய களமாக தமிழகத்தின் சிந்தனைத்தளமும் இருந்து வந்துள்ளது.
ஆனால், ஒவ்வொன்றும் தனித்தனியாக தொடர்பற்று வளர்ந்திட வில்லை. ஒவ்வொரு தத்துவ சிந்தனையும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. ஒவ்வொரு தத்துவாசிரியரும் மக்களிடம் தனது தத்துவத்தை பதிய வைக்க முயற்சித்தார். ஏற்கெனவே மக்களின் சிந்தனையில் குடிகொண்டிருக்கும் சிந்தனைகளோடு போராடி, அவற்றினை தகர்த்து, தங்களது சிந்தனைகளை கொண்டு சென்றனர்.
பரபக்க வாதங்கள் மூன்று படிகளைக்கொண்டது. முதல் படியாக ஆசிரியர் எதிரியின் கருத்துக்களைக் தொகுத்து அவன் சொல்லுவது போல கூறிடுவார். இதுவே பரபக்கம் எனப்படும்.
இரண்டாவது படியாக, எதிரியின் கூற்றுகளில் உள்ள ஊனங்களையும், ஓட்டைகளையும் அம்பலப்படுத்தி சண்டப் பிரசங்கம் செய்வார் ஆசிரியர். எதிரியின் கருத்துப்பிரவாகத்திற்கு தடைச்சுவர்கள் எழுப்பிடும் வேலை இது. இதனை பரபக்க நிராகரணம் அல்லது பரபக்க நிக்ரகம் என்று அழைக்கின்றனர்.
இந்தியாவில் தருக்க முறை: (டுடிபiஉ)
ஆதிகாலத்திலிருந்தே தருக்க நியதிகளை வைத்து தத்துவங்களை நிரூபிக்கும் முறை இந்தியாவில் இருந்தது. பிற்காலத்தில் வேதக்கூற்றுக்களை நியாயப்படுத்தும் கருவியாக மாறியதால், தருக்க நியதிகள் வளர்வது தடைபட்டது.
உண்மையை அறிய, நான்கு கருவிகளைப்பற்றி நியாயத் தத்துவம் பேசுகிறது. ஐம்பொறிகளால் உணருவது, அனுமானித்து அல்லது ஊகித்து அறிவது, மிகவும் தெரிந்த உண்மையோடு ஒப்பிட்டுப் பார்ப்பது, வாய்மொழியாக சொல்லப்படுவதிலிருந்து அறிவது என்ற முறைகளில் உண்மையை அறியவேண்டுமென நியாயா கூறுகிறது.
ஒரு கருத்து உண்மையா ? என்று அறிய 1). அந்தக்கருத்தை கிரகித்தல், 2).அதையொட்டிய தகவல்களை சேகரித்தல், 3). அந்த தகவல்களைக் கொண்டு சொல்லப்பட்ட கருத்தை பரிசோதனைக்கு உள்ளாக்குதல், 4). அக்கருத்தை மேலும் சரிபார்த்து உறுதிபடுத்துதல் – ஆகியனவற்றை நியாயா வலியுறுத்துகிறது.
எனினும், கடுமையான தருக்கம் கடவுள் மறுப்புக் கொள்கைக்கு இயல்பாக இட்டுச் சென்றிடும் என்பதால், ஆன்மீகவாதிகள் எதிர்த்தனர். இதனால், இந்திய தருக்க வளர்ச்சி தடைபட்டது.
எனினும், ஆன்மீக தத்துவவாதிகள் கூட தருக்கமுறையைப் பயன்படுத்தியே தங்களது தத்துவங்களை நிரூபிக்க முயன்றனர். இது, பழமை இந்தியாவில் தருக்க முறை மிகுந்த செல்வாக்கோடு திகழ்ந்ததையே எடுத்துக்காட்டுகிறது.
தருக்க படி முறையை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்திய தத்துவயியலாளர்கள் கடைபிடித்தனர். பரபக்கம் என்பது தத்துவங்களை மரபாக இந்திய சிந்தனை வரலாற்றில் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. இதனால்தான் ஆயிரமாயிரம் வேறுபட்ட தத்துவக் கருத்துக்கள் மலர்ந்து செழித்த தளமாக இந்திய சிந்தனைக்களம் விளங்கியது. இது மனிதநேய, பகுத்தறிவு சிந்தனைகள் நிரம்பி வழிந்த மலர்வனமாகவும் இருந்தது ; அதே நேரத்தில் பல்வகை பிற்போக்குத் தனங்களும், சாதி, மதம் எனும் பெயரில் பல அறிவியல் விரோத மூடக்கருத்துக்கள் கொண்ட முட்புதர்களாகவும் விளங்கியது. வெறும் தர்க்கத்தின் மூலம் உண்மையை அறிய முடியாது என்பதை நடைமுறை மூலம் அறிய வேண்டும் என்பதும் ஆதிகால சிந்தனை மரபானது.
ஆனால், ஒன்று நிச்சயமானது. இந்திய சிந்தனை எப்போதும் ஒரே சிந்தனையாக, வேத பழமைவாதம் மட்டுமே நிலைத்து நின்றதாக கருதுவதற்கு எங்கும் இடமில்லை. இதனை இந்துத்துவவாதிகள் மறைத்தாலும் இதுவே உண்மை வரலாறு.
இந்திய ஞானிகள் ஆன்மீகவாதிகளா?
இந்த தத்துவ அறிவியல் வளர்ச்சிப் போக்கினை மூடிமறைக்க இந்துத்துவா சக்திகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். இந்திய சிந்தனை வேதமரபு சார்ந்த ஒரே வகை சிந்தனையாக இருந்து வந்துள்ளது என அவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்து மதப் பாரம்பரியமே இந்திய பண்பாடு, இதர மதங்கள் இவற்றை அழிக்க வந்தவை எனும் வகையில் அவர் எழுதுவது வழக்கம். துக்ளக் இதழின் ஆக°டு 10,2005 இதழில் அவர் எழுதியுள்ளார்.
“முதலில் இ°லாமிய அரசுகளும், பின்பு ஆங்கிலேய அரசும் நமது பாரம்பரியத்தையும், தேசியத்தையும் அழிக்க எவ்வளவு முயற்சி செய்த போதும், அதில் அவர்களுக்கு வெற்றி கிட்டவில்லை. காரணம் எண்ணற்ற சித்தர்களும், ஞானிகளும் மக்களுக்கு சரியான திசை காட்டி வந்தனர். இன்றும் அதே நிலைதான். மதச்சார்பற்ற அரசாங்கம், அரசியல் நம் நாட்டின் பாரம்பரியத்தையும், ஆன்மீகத்தையும் அழிக்க எவ்வளவு முயன்றாலும், ஞானிகளும், சித்தர்களும் தோன்றி வழிகாட்டிக் கொண்டே இருப்பார்கள்.”
அதாவது, நமது ஞானிகள் ஆன்மீக பாரம்பரியத்தை மட்டுமே வளர்த்து வந்தார்கள் என்றும் இ°லாமும், இதர சமயங்களும் அதனை அழிக்க வந்தவை என்றும் அவர் எழுதி உள்ளார்.
“மதசார்பற்ற அரசாங்கம், அரசியல் என்பது இந்திய பண்பாடல்ல” என்று சோ எவ்வளவு கைவலிக்க எழுதினாலும் அது உண்மையாகி விடாது என்பதற்கு பழைய இலக்கியங்களே சான்று பகரும்.
நமது தத்துவம் மற்றும் பண்பாட்டில், ஒரு பக்கத்தை மட்டும் முக்கியத்துவம் பெறச் செய்து தங்களது வர்க்கத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முயல்கின்றனர் இந்துத்துவவாதிகள். இந்து ஆன்மீகத்தை உள்ளடக்கமாகக் கொண்ட பிராமணியம், நால்வருண சமூக ஒழுங்கு முறை, அன்றைய உழைப்பாளி மக்களையும் ஒடுக்கியது. இன்றைய உழைப்பாளி மக்களை ஒடுக்கிடவும், இந்த தத்துவத்தையும், பண்பாட்டையும் பயன்படுத்த முனைகிறது இந்துத்துவா கூட்டம்.
வேறுபட்ட பல்வகைச் சிந்தனைகள் :
நமது பண்பாடே வேத மரபு சார்ந்த பண்பாடுதான் என்ற இந்த பொய்யுரையை, ஒரு அரசியல் நோக்கத்தை அடைய, ஓயாது அவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்தக் கூற்றை மறுத்திட, ஆயிரமாயிரம் சான்றுகள் நமது பாரம்பரியத்திலும், பண்பாட்டிலும் உள்ளன. தமிழ் இலக்கியத்திலும் பல சான்றுகள் உள்ளன.
மணிமேகலையிலும், நீலகேசியிலும் பூதவாதம் என்று அழைக்கப்படும் உலகாயுதம் உள்ளிட்ட தத்துவங்களின் தாக்கத்தைக் காணலாம்.
பேராசிரியர் நா.வானமாமாலை, பூதவாதம் உள்ளிட்ட பல்வேறு வகை தத்துவங்களும் தொன்மையானவை என்பதற்கான ஆதாரங்கள் சங்ககாலப் பாடல்களிலேயே உள்ளன என்று நிறுவுகிறார். அகம், புறம் என்ற இருவகை வாழ்க்கை முறைகளை விளக்கும் புறப்பாடல்களே, தமிழக தத்துவப் போக்குகளுக்கும், உலகாயுதம் வளர்ச்சியுற்று இருந்ததற்குமான முதல் ஆதாரம் எனவும் மணிமேகலை, நீலகேசி ஆகிய நூல்கள், இரண்டாவது ஆதாரம் என்றும் நா.வானமாமலை எழுதுகின்றார்.
சிலப்பதிகாரம், சிந்தாமணி, வளையாபதி, மூன்றும் சமணக் கருத்துக்களைக் கொண்டன. . மணிமேகலையும், குண்டலகேசியும் பௌத்த சமயக் கருத்துக்களை கூறுகிற காவியங்கள்.
பௌத்தத்தை பரப்பும் நுhல்தான் மணிமேகலை எனினும் அதில் அன்று தமிழக தத்துவ உலகில் மோதிக்கொண்ட பல்வேறு தத்துவங்களை அறிய அது உதவுகிறது. இதனை 27ம் அத்தியாயமான ‘சமய கணக்கர் தம் திறன் கேட்ட காதை’ எனும் பகுதியில் காணலாம்.
பல சமய அறிஞர்கள் கூடி, தத்தம் கருத்துக்களை எடுத்துரைப்ப தாகவும், அதனை வஞ்சிமாநகர் சென்ற மணிமேகலை கேட்பதாகவும் இந்தப்பகுதி அமைந்துள்ளது. மழைக்கு அதிபதி என்று கருதப்படும் இந்திரனுக்கு காவிரிப்பூம்பட்டிணத்தில் 28 நாள் விழா எடுக்கப் படுகிறது. பல சமயவாதிகள் அங்கு கூடுகின்றனர். பட்டி மண்டபத்தில் அமர்ந்து அவர்கள் தங்கள் கொள்கைகளை எடுத்துரைக்கின்றனர்.
இவ்வாறு எடுத்துரைக்கும் தத்துவங்கள் பல்வேறுபட்டவை. அளவை வாதி, சைவவாதி, பிரம்மவாதி, வைணவவாதி, வேதவாதி, ஆசிகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேடிகவாதி, பூதவாதி ஆகிய சமய தத்துவவாதிகள் தங்களது தத்துவங்களின் நுண்பொருட் களை விளக்குகின்றனர்.
ஒரே சிந்தனையிலும் பல பிரிவுகள் :
இந்து சமயம், பௌத்தம் என்று நாம் குறிப்பிடும் சமயங்கள் ஒரே வகை சார்ந்தது அல்ல. இந்து சமயம் ஒரே ஒரு குறிப்பிட்ட வழிபாடோ அல்லது கடவுளோ கொண்டதல்ல என்பதை நாம் அறிவோம். பௌத்தத்திலும் பல்வேறுபட்ட பிரிவுகள் மணிமேகலை காலத்திலேயே நிலவி வந்திருக்கிறது.
இதன் மூலம் அவர் நிலைநாட்ட விரும்புவது வேதப்பண்பாடு என்று“இந்துத்வா அரசியலுக்கு” சாயம் பூசும் முயற்சியே தவிர வேறல்ல. பல பண்பாடுகளை இந்தியா வளர்த்தது. சான்றாக அவை அவையெல்லாம் அந்நியமானவை என்பது அபத்தம். மணிமேகலை ஒரு பௌத்த காவியமாகும். அது உருவான காலத்தில் பௌத்த தத்துவக் கருத்துக்களும், தருக்கவியலும் தமிழ்நாட்டில் வளர்ச்சி யடைந்த காலம்.
இதில் தெ.போ.மீனாட்சிசுந்தரனார், மணிமேகலை காட்டும் பௌத்தம், தேரவாத பௌத்தம் என்று பல சான்றுகளோடு நிறுவுகிறார்.
அவர் கூறும் மற்றொரு கருத்து பௌத்தர்கள் பிற மதத்தின ரோடன்றி தம்முள் தாமே வாதாடினர்.
அத்துடன் பௌத்தத்திற்குள் சௌந்திராந்திரகர், வைபாஹிகர், யோகாசாரர், மாத்யாத்மிகர் போன்ற முக்கிய பிரிவுகளோடு மேலும் பல சிறு பிரிவுகளும பௌத்தத்திற்குள் உலா வந்ததை தெ.பொ.மீ எடுத்துக்காட்டுகிறார். அத்துடன் 4ம் நுhற்றாண்டில் பௌத்த தத்துவ ஞானிகளான புத்த நந்தியோடும், சாரி புத்தரோடும் ஞான சம்பந்தர் வாதிட்டு வென்றார் என்ற செய்தியை குறிப்பிடுகிறார். ஞான சம்பந்தரும் தேரவாத பௌத்தத்திற்குள் ஆறுவகை இருந்ததை குறிப்பிடும் வகையில் “அறுவகைத்தேரர்” என்ற சொற்பிரயோகம் செய்துள்ளதை தெ.பொ.மீ சுட்டிக்காட்டுகிறார்.
மயிலை.சீனி-வேங்கடசாமி கி.மு.358க்கு முன்னரே பௌத்த பிக்குகள் தமிழ்நாட்டில் சேவைப்பணிகளிலும், மருத்துவப் பணிகளிலும் ஈடுபட்டதை ஆதாரங்களோடு விளக்குகிறார்.
மணிமேலையில் கூறப்பட்டுள்ள பௌத்தம் ஹீனயான பௌத்தம் (தேரவாதம்) என்றும், பௌத்தத்தின் பெரும் பிரிவான மகாயான கொள்கைகள் பரவுவதற்கு முன்பு எழுதப்பட்ட நூல் என்றும் அவர் சான்றுகளோடு நிறுவுகிறார்.
இதே கருத்தோடு உ.வே.சாமிநாதய்யர் அவர்களும் உடன்பட்டு மணிமேகலையின் பௌத்தம் தேரவாதமே என்கிறார்.
பழங்காலத்தில் இருந்து கருத்து மோதல்கள், வாதப்போர்கள் இந்தியாவில் நிகழ்ந்து வந்துள்ளது என்ற அமர்த்தியா சென் கருத்து, தமிழகத்திற்கும் சாலப்பொருத்தமானது என்பதையே மேற்கண்டவை உணர்த்துகின்றன.
இரு பெரும் பிரிவுகள்:
இதற்கும் மேலாக மற்றொன்றையும் நாம் கண்ணுறுதல் வேண்டும். இந்தியாவின் தொன்மையான தத்துவத் தளத்தில் பல்லாயிரக் கணக்கான வேறுபட்ட சிந்தனைகள் முகிழ்ந்துள்ளன. கருத்தாலும், வடிவத்தாலும், தரத்தினாலும், சிந்தனை ஆழத்தாலும் வேறுபட்ட இந்த சிந்தனைகள், கடல் போல் பரந்துபட்டவையாக உள்ளன. இவற்றை வகைப்படுத்துதல் கடினம்.
எனினும், இரண்டு வகைகளாக இவற்றை நாம் படிக்கவும் ஆராய்ந்திடவும் இயலும். ஒன்று, அதிகார வர்க்க சார்பு கொண்டு, உடைமை வர்க்கங்களின் குரலாக ஒலிக்கும் சிந்தனைகள். மற்றொன்று, அடிமைப்பட்டு, உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகி வாழ்ந்து வந்துள்ள அடக்கப்பட்ட மனிதர்களின் குரலாக ஒலிக்கும் சிந்தனைகள். இவர்களே சமூகத்தின் பெரும்பான் மையினராய் இருந்தனர்.
தத்துவம் எனும் துறையை எடுத்துக் கொண்டால், உபநிடதம், வேதங்கள், அத்வைதம், துவைதம் என்று விரியும் ஏராளமான ஆன்மீகத் தத்துவங்கள் பிற்காலத்தில், உழைப்போரைச் சுரண்டி வாழும் சிறு கும்பலின் நலன் காப்பவையாகவே இருந்து வந்துள்ளன. இந்தத் தத்துவங்களுக்கு இடையே ஆயிரம் முரண்பாடுகள், கருத்து வேற்றுமைகள், சண்டைகள் இருக்கலாம். ஆனால், சமூகத்தில் நிலவிய வர்க்க முரண்பாட்டில் இவை அதிகார வர்க்கத்தினரிடம், குறிப்பாக நிலவுடைமை வர்க்கங்களின் பால் துணை நிற்கின்றன. மன்னராட்சி முறையை தெய்வாம்சமாக நிலைநாட்டின.
இதற்கு நேர் எதிரான தத்துவங்களில் முதன்மையானது, உலகாயத வாதம். தமிழ் இலக்கியங்களில் பூதவாதம் என குறிப்பிடப்படுகிறது. மனிதனின் உணர்வைத் தாண்டி உலகம், பூதம் எனப்படும் பொருள் உளது என்றும், அதுவே நிஜமானது என்றும், பூதவாதம் விளக்கு கிறது. இந்தப் பொருளுக்கு அப்பாற் பட்டதும், அதனைக் கட்டுப் படுத்துவதும், அதன் படைப்பு உருவாக்கத்துக்கு காரணமானதுமான கடவுளை உலகாயதவாதம் ஏற்றுக்கொள்ளவில்லை. அது மனிதனால் உருவாக்கப்பட்ட கற்பனை என்றும், மனிதனது சிந்தனையில் தான் அது உதித்தது எனவும் உலகாயதவாதம் வாதிடுகிறது.
இந்திய நாத்திகத்திலும் பன்முகம்:
இந்திய தத்துவங்களில் ஆன்மீக தத்துவங்களுக்கிடையே பல பிரிவுகள் கருத்துவேறுபாடுகள், கருத்து மோதல்கள் இருந்து வந்துள்ளன. இது மட்டுமல்ல.
இவர்கள் பொருள், உலகு, பிரபஞ்சம் அனைத்தையும் படைத்தது கடவுள் இல்லை என்று வாதிட்டவர்கள் தங்களது பொருள் முதல்வாதக் கருத்துக்களை நிறுவிட அவர்கள் நீடித்த போராட்டத்தை மேற்கொண்டனர்.
பொருள்கள் குறிப்பிட்ட அளவில் ஒன்றுசேரும் போது ஒரு புதிய பொருள் உருவாவது போலவே, மனித உடலில் உள்ளடங்கிய பொருட்களின் சேர்க்கையில்தான் உயிரும் உணர்வும் தோன்றுகிறது என்று அவர்கள் வாதிட்டனர். அதாவது, அறிவியல் ரீதியாக, பொருட்களின் தன்மையை விளக்க முயன்ற முதற்பெரும் அறிவியலாளர்கள் சார்வாகர்களே.
மணிமேகலையில் சமய கணக்கர் தம் திறன் கேட்ட காதையில் பூதவாதி தனது விளக்கத்தைக் கூறுகிறார். அதில் ஒரு பொருள் வேறு பொருளோடு சேரும் போது புதிய பொருள் உருவாகிறது எனும் கருத்திற்கு சில உதாரணங்களை அளிக்கின்றார்.
“தாதகிப் பூவும் கட்டியும் இட்டு
மற்றுங் கூட்டத்து மதுக்களி பிறந்தாங்கு…”
தாதகி பூவையும், கருப்புக் கட்டியையும் சேர்த்து கொதிக்க வைத்தால் மது எனும் புதிய பண்புள்ள ஒரு பொருள் உருவாவது போல், ஐம்புலன்களின் சேர்க்கையால் உணர்வு வருகின்றது என்கிறார் பூதவாதி.
சார்வாகர்களின் அறிதல் கொள்கை :
சார்வாகர்களது அறிதல் கொள்கையும் சுயசிந்தனை சார்ந்தது. இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி ஏதும் இல்லை என்று வாதிட்ட அவர்கள், பொருளைப் பற்றியும், அதன் தன்மைகளைப் பற்றியும் அறிய முடியும் என்று வாதிட்டனர்.
மணிமேகலையில் ‘சமயக் கணக்கர் தம் திறன் கேட்ட காதை’யில் எல்லாத் தத்துவவாதிகளின் தத்துவங்களையும் மணிமேகலை கேட்டு அறிகின்றாள். கடைசியாக பூதவாதியின் முறை வருகின்றபோது, பூதவாதியின் பொருள் முதல்வாத கருத்தினை கேட்டு முடித்த பிறகு பூதவாதியிடம் கேள்வி ஒன்றை கேட்கிறாள்.
“உனக்கு தாயும் தந்தையுமான பெற்றோரை எவ்வாறு அறிவாய்? அனுமான அளவையில் அறிவதே அன்றி எவ்வாறு அறிவாய்? மெய்மையான பொருள்யாவும் அனுமானம் முதலிய அளவையில் அன்றி அறிதற்கு அரியனவாம்.”
(மணிமேகலை உரை)
இது கேள்வி என்றும் கூறமுடியாது. மணிமேகலையை எழுதிய பௌத்தரான சீத்தலைச் சாத்தனார், பூதவாதியின் அளவை கொள்கைகளை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை மணிமேகலையின் கேள்வி மூலம் குறிப்பால் உணர்த்துகிறார்.
வெறும் கண்களாலும், இதர ஐம்புலன்களாலும் காண்கின்ற காட்சியே உண்மை என்றால், இன்னார்தான் உனது தாய் தந்தையர் என்பதை காட்சியால் மட்டும் உணர முடியுமா என்பதே கேள்வி. இதற்கு அனுமானம் தான் துணைபுரியும் என்பது மணிமேகலையின் கருத்து.
அதாவது, கண்ணால் காண்பதே மெய் என்ற கூற்று எல்hவற்றுக்கும் பொருந்தாது. சிலவற்றை அனுமானித்துத்தான் உணர முடியும். பானையை பார்க்கிற போது, அதனை உருவாக்கிய குயவன் உண்டு என்பதை அனுமானிக்க முடியும்.
இந்த வாதங்களைச் சொல்லி, பூதவாதிகள் அனுமானம் என்ற அறிதல் கருவியையே ஒதுக்குகின்றனர் என்ற குற்றச்சாட்டு இந்திய பொருள் முதல்வாதத்தின் மீது உண்டு. இந்தக் குற்றச்சாடை சங்கரர் தனது பிரம்மசூத்திர உரையில் வலுவாக சுமத்துகிறார். அன்று நிலவிய இந்தக் கருத்தைத்தான் சீத்தலைச் சாத்தனாரும் மணிமேகலையில் எழுதுகிறார்.
ஆனால், உண்மையில், சார்வாகர்கள் அனுமானம் எனும் அளவை முழுக்க நிராகரிக்கவில்லை. இதை அறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா ஆதாரங்களோடு, ‘லோகாயதம்’ உள்ளிட்ட தனது புத்தகங்களில் நிரூபித்துள்ளார்.
அனுமானம் என்ற அளவையைப் பற்றி சார்வாகர்களின் உண்மை நிலை என்ன?
பானை இருப்பதனால் குயவன் என்பவன் உண்டு எனும் வகையில் அனுமானிக்கிற முறையை சார்வாகர்கள் எதிர்க்கவில்லை. அதேபோன்று தாய் தந்தையரை ஏற்றுக் கொள்ளுகிற வகையிலான அனுமானத்தையும் அவர்கள் மறுக்கவில்லை.
இந்த வகை அனுமானங்களை நடைமுறை வாழ்க்கையில் நிரூபிக்க முடியும். சார்வாகர்களின் ஆட்சேபணை எங்கு எழுகிறது என்றால், பானை – குயவர் அனுமானத்தின் மூலம் கடவுள் இருக்கிறார் என்று நிரூபிக்க முயலும் போதுதான். பானை இருந்தால் குயவன் என்பது போல், இந்த உலகம் இருப்பதால் அதனைப் படைத்த இறைவன் உண்டு என்று வாதிடும் ஆன்மீக தத்துவத்தைத்தான் சார்வாகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. குயவனை கண்டறிய இயலும். ஆனால், இறைவனை எங்கே கண்டறிவது?
எனவேதான், சார்வாகர்கள் காட்சி அளவையும், அனுமான அளவையும் இணைத்து உண்மைகளை அறியும் கொள்கையை வலியுறுத்தினர். இந்த அறிவியல் பார்வையை முளையிலேயே கிள்ளி எறிந்த “பெருமை” இந்திய கருத்து முதல் வாத தத்துவங்களுக்கும், நால்வருண முறைக்கும் உண்டு. இன்று தமிழகத்தின் தத்துவ வளர்ச்சி இரண்டு பண்புகளை வளர்த்து வருகிறது. 1.பன்முகத்தன்மை, 2. பொருள் முதல்வாத அறிவியல் சிந்தனை. இந்த இரு வழியும் பிற்போக்குத் தத்துவங்களை எதிர்த்து போராட ஆயுதங்களாக உள்ளன.
This is indeed a good article. I greatly appreciate your effort to prove that our Tamil tradition has always been “argumentative”, and multi-positional philosophically. While fundamentalism is prowling to gulp up such healthy traditions with its monolithic tyranny, efforts like yours has a great value in saving our secular Tamil tradition.