தமிழக உளவுத்துறையின் டி ஐ ஜி அந்தஸ்தில் ஆசியம்மாள் என்ற பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத்துறையின் உயர் பொறுப்பில் முதன் முதலாக பெண் காவல்துறை அதிகாரி நியமிக்கப்படுவது இதுவே முதன் முறை.
மாநில அரசு இயந்திரத்தில் உளவுத்துறை மிக முக்கியமானது. நாட்டை பாதுகாக்கும் பணியில் முன் கூட்டியே தகவல்களை அறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பதும். முன்கூட்டியே திட்டமிடுதலும்தான் உளவுத்துறையின் முக்கிய பணியாகும், பொதுவாக உளவுத்துறை உயரதிகாரிகளாக பெண் அதிகாரிகள் நியமிக்கப்படுவதில்லை. தமிழக காவல்துறையில் மிக மிக திறமையானவர்களையே அந்த பதவிக்கு அமர்த்துவார்கள்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் உளவுத்துறை டிஜிபியாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட அவருக்குக் கீழ் பணியாற்றும் இரண்டாம் நிலை உயரதிகாரியாக ஆசியம்மாள் நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயக் குறிச்சியில் பிறந்த ஆசியம்மாளுக்கு வயது 56. மதுரையில் வரதட்சணை கொடுமைப் பிரிவில் திறம்பட பணியாற்றிய ஆசியம்மாள் மகாபலிபுரம், திருவொற்றியூர் பகுதிகளில் சட்டம் ஒழுங்கு உதவி ஆ|ணையராகவும், புலனாய்வு பிரிவு உதவி ஆணையராகவும் பணி செய்தவர்.
நீண்ட அனுபவம் கொண்ட ஆசியம்மாள் நேர்மையான அதிகாரி என காவல்துறையில் பெயர் எடுத்தவர். அவரை உளவுத்துறையின் முக்கிய பதவிக்கு தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.