இந்தியாவில் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநரை வைத்து அந்தந்த மாநில அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் மாற்றப்பட்டு ஆர்.என். ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டார். சர்ச்சைக்குரிய நபராக அறியப்படும் ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டது பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கிய நிலையில் அப்போதே காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ரவியின் நியமனத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.
ஆனால், ரவி தமிழ்நாட்டில் நியமிக்கப்பட்ட பின்னர் சத்தமின்றி அவர் நேரடியாக தமிழ்நாட்டின் அரசுத்துறைகளில் தலையிட்டு அதிகாரிகளுடன் பேசி சில கோப்புகளைக் கேட்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான செய்திகள் சில ஆங்கில ஊடகங்களில் வெளியானது. இப்போது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசு நலத்திட்டங்களின் விபரங்கள் அதற்காக எவ்வளவு நிதிகள் ஒதுக்கப்படுகின்றன? பயனடைந்த மகக்ளின் விபரங்களை ஆளுநர் ரவிக்கு அனுப்பி வைக்க தயாராக இருக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு அரசுத்துறை செயலாளர்களுக்கு சுற்றரிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றது முதல் பாஜக அரசை தனிப்பட்ட முறையிலும் கலவரங்களை தூண்டும் வகையிலும் பேசி வருகிறது. இன்னொரு பக்கம் அதிமுக ஆளுநரிடம் தமிழக அரசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி வருகிறது. இன்னொரு பக்கம் நாம் தமிழர் கட்சியினர் வன்முறையை தூண்டும் நோக்கோடு பேசி வருகிறார்கள். இதற்கிடையில் ஆளுநரும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் மீது தலையிட்டு வருகிறார்.