மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அறிமுகப்படுத்த மாட்டோம் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
கல்வியை தனியார் மயமாக்கும் விதத்திலும் ஆரம்பக் கல்வியை கட்டுப்படுத்தி கிராமப்புற, ஏழைகளை மீண்டும் குலத்தொழிலுக்கே அனுப்பும் விதத்திலும் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இக்கல்வி ஆரம்பக் கல்வி கற்கும் குழந்தைகளை வளர்த்தெடுப்பதற்கு பதில் வடி கட்டி குலத்தொழிலுக்கும், இந்தியாவில் வளர்ந்து வரும் தனியார் கார்ப்பரேட் தொழிற் சாலைகளுக்கு குறைந்த கூலிக்கு அனுப்பும் படியுமான மிக மோசமாக வடிவமைக்கப்பட்டது. இந்த கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அண்ணா பலகலைக்கழகத்தில் நடத்தப்பட்ட பருவத் தேர்வுகளை மறுபடியும் நடத்த உத்தரவிட்டார். மேலும் அவர் பேசும் போது “தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை நிறைவேற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை” என்றார். அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு கல்வியாளர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.