தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் இடமில்லாமல் மக்கள் அல்லல்படும் சூழலும் உருவாகியுள்ளது.
இன்று ஒரே நாளில் 31,892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 31 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது.
ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் 1,95,339 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை17 ஆயிரத்து 056 ஆக அதிகரித்துள்ளது.
முன்னர் சென்னை போன்ற பெருநகரங்களில் பரவி வந்த வைரஸ் தொற்று இம்முறை அனைத்து சிறு நகரங்களையும் கூட கடுமையாக தாக்கி வருகிறது.இதனால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு அறிவித்திருந்த நிலையில் நாளை முதல் காலை 10 மணி வரை மட்டுமே கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மளிகை , காய்கறி , இறைச்சிக் கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே செயல்படும். தேநீர் கடைகள் தெருவோரக் கடைகள் செயல்பட இனி அனுமதியில்லை. அதே போன்று 17-ஆம் தேதி முதல் தமிழகத்திற்குள் நுழைய இ பாஸ் முறை அமலாகிறது. மாவட்டத்தில் இருந்து மாவட்டம் செல்லவும் இ பாஸ் அவசியம் என்பதால் முழு ஊரடங்கை நோக்கி தமிழகம் செல்கிறது.