ஜனாதிபதி தேர்தல் பிரசார வேளையின்போது தப்பியோடிய கிளர்ச்சியாளர்கள் தன்னைப் படுகொலை செய்ய முயற்சிப்பார்கள் என்று தான் அச்சம் கொண்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் சுமார் ஆயிரம் புலிப் போராளிகள் உயிர் தப்பியிருக்கக் கூடும் என்று ஏஎவ்பி செய்திச் சேவைக்கு ஜெனரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
புலிகளின் தலைவர்கள் யாவரும் கொல்லப்பட்டிருக்கின்ற போதும் தப்பியோடிய தற்கொலைக் குண்டுதாரிகளால் கடுமையான ஆபத்து இருப்பதாக அவர் கூறியுள்ளார். “புலிகள் தற்போதும் சர்வதேச ரீதியான கட்டமைப்பை கொண்டுள்ளனர். இடம்பெயர்ந்த மக்களுடன் சுமார் ஆயிரம் பேர் கலந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“எனது உயிருக்கு ஆபத்து இருப்பதை நான் அறிவேன். ஆனால், மக்கள் பலரும் இராணுவம், பொலிஸில் இருப்பவர்களும் அவர்களை வெற்றிக்கு இட்டுச் சென்றவன் நான் என்று நம்புகின்றனர். நான் இராணுவத்தில் இருந்தபோது எனது பாதுகாப்புப் பிரிவில் 25 வாகனங்கள் இருந்தன. இப்போது அது இரண்டு அல்லது மூன்றாக குறைக்கப்பட்டுள்ளது. இப்போது நான் தேர்தலில் போட்டியிடுவதால் ஆபத்து மிகவும் அதிகமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு கறுவாத்தோட்டத்தில் அமைந்துள்ள தனது தேர்தல் அலுவலகத்திலிருந்து ஏஎவ்பி செய்திச் சேவையுடன் உரையாடிய பொன்சேகா, தான் தெரிவு செய்யப்பட்டால், மிகவும் அதிகாரமுள்ள ஜனாதிபதி பதவியின் அதிகாரத்தை தடுத்து பாராளுமன்றத்திற்கு வலுவூட்டப் போவதாக கூறியுள்ளார். “நான் சர்வாதிகாரியாக இருக்க மாட்டேன். இன்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளன.ஜனநாயகம் வீழ்ச்சி கண்டு வருகிறது. மாற்றத்தை ஏற்படுத்தும் மனிதனாக இருக்க விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதியே பாதுகாப்பு அமைச்சராகவும் முப்படைகளின் தளபதியாகவும் உள்ளார். 1994 இற்குப் பின்னர் பதவியேற்ற சகல ஜனாதிபதிகளும் ஜனாதிபதி முறைமையில் மறுசீரமைப்பை மேற்கொண்டு பிரிட்டிஷ் பாணியிலான பாராளுமன்ற ஜனநாயகத்தை ஏற்படுத்தப்போவதாக வாக்குறுதியளித்திருந்தனர். ஆயினும் அதனை நிறைவேற்றுவதில் தோல்வி கண்டுள்ளனர். “அவர்கள் போன்று நான் இருக்க மாட்டேன் என்று பொன்சேகா கூறியுள்ளார்.
“எனது வாக்குறுதிகளை பேணிப் பாதுகாப்பதில் சீரான பதிவுகளை நான் கொண்டுள்ளேன்.இந்த வருடம் புலிகளை அழிப்பேன் என்று உறுதியளித்திருந்தேன். உரிய காலத்தில் அதனை நிறைவேற்றினேன். நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் முன்னுரிமை அளிக்கும் விடயம் எனது அரசியல் வாக்குறுதியை நிறைவேற்றுவதேயாகும். பாராளுமன்றத்துடன் இணைந்து அதனை செய்ய முடியாவிடின் (பாராளுமன்றத் தேர்தலை தொடர்ந்து) அதன் பின் நான் தொங்கிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை என்று பொன்சேகா கூறியுள்ளார்.
பெரும்பான்மை சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவரான பொன்சேகா (58 வயது) ராஜபக்ஷ போன்றே கடும் போக்கு தேசியவாத நிலைப்பாட்டைக் கொண்டவராகும். யுத்தத்தில் வெற்றி கண்ட பின்னர் அரசுக்கு எதிராக இராணுவ சதிப்புரட்சி தொடர்பாக தன்மீது ராஜபக்ஷ சந்தேகம் கொண்டதாக பொன்சேகா கூறியுள்ளார். அவர்கள் (அரசு) என்னை உரிய முறையில் நடத்தவில்லை. இராணுவம் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பதாக அவர்கள் சந்தேகப்பட்டனர். அது இராணுவத்தின் தொழில்சார் நிபுணத்துவத்திற்கும் ஒழுக்கத்திற்குமான அவமதிப்பாகும். உலகில் மோசமான பயங்கரவாத அமைப்பை தோற்கடித்திருந்த இராணுவத்திற்கு ஏற்படுத்தப்பட்ட அவமதிப்பாக இது உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
அதேசமயம் ஆச்சரியமான வகையிலேயே தற்போதைய பணியில் ஈடுபட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். “அரசியலில் பிரவேசிக்கும் தீர்மானம் சடுதியாக மேற்கொள்ளப்பட்டதொன்றாகும். இதுவொரு துணிச்சலான தீர்மானமாகும். அத்துடன் மிகவும் தீரத்துடன் எடுக்கப்பட்ட தீர்மானமாகவும் உள்ளது. இராணுவத்திலிருந்து அரசியலுக்கு செல்வது என்பது பாரியதொரு மாற்றமாகும். எனது மனைவி மற்றும் இரு மகள்மாருடன் அதிக நேரத்தை செலவிடவே நான் விரும்பியிருந்தேன். ஆனால், இப்போது அதற்கான நேரம் குறைந்துள்ளதை பார்க்கிறேன். ஆரம்பத்தில் (அரசியலில்) சில நாட்கள் தளர்ச்சியாக இருந்தது. ஆனால், இப்போது அதனை சீர்ப்படுத்தியுள்ளேன். இந்த புதிய வகிபாகத்திற்கு பழக்கப்படுத்தி விட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின்போது இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கான சாத்தியப்பாட்டுக்கு கடந்த வருடம் அவரை விமர்சிப்பவர்கள் இணங்கியிருந்தமை தொடர்பாக பொன்சேகா ஆச்சரியமடைந்துள்ளார். இந்த நடவடிக்கையை ராஜபக்ஷ எப்போதுமே நிராகரித்திருந்தார்.