திருநெல்வேலி மாவட்டம் நெல்லை டவுன் எஸ்.என் ஹைரோடு மைதானம் எதிரில் சாஃப்டர் என்ற பெயரில் தனியார் மேல் நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த பள்ளியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். கொரோனா காரணமான மூடப்பட்டிருந்த பள்ளி சில நாட்களின் முன்னர்தான் திறந்தது. இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் இடைவேளி நேரத்தில் மாணவர்கள் கழிவறைக்குச் சென்றனர். அப்போது ஒரு பகுதி மாணவர்கள் கழிவறைக்கு வெளியில் காத்திருந்தனர். அப்போது கழிப்பறையின் சுற்றுச் சுவர் இடிந்து மாணவர்கள் மீது விழுந்தது இதில் இடிபாடுகளில் சிக்கி மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நான்குமாணவர்கள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இவ்விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் விபரங்களைப் பள்ளி நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது. 9-ஆம் வகுப்பு மாணவர் அன்பழகன், 8ஆம் வகுப்பு மாணவர் விஷ்வ ரஞ்சன், 6ஆம் வகுப்பு மாணவர் சுதீஸ் ஆகிய 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சஞ்சய், இசக்கி பிரகாஸ், சேக் அபுபக்கர், அப்துல்லா ஆகிய 4 மாணவர்கள் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்திற்கு ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ள முதல்வர் உயிரிழந்த மாணவர் குடும்பங்களுக்கு தலா பத்து லட்சம் நிவாரணமும் காயமடைந்த மாணவர்களுக்கு தலா மூன்று லட்சமும் நிவாரணம் அளித்துள்ளார்.
பள்ளியில் தலைமை ஆசிரியரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.