வன்னிப் படுகொலைகளின் போது தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதப் போக்கை வெளிக்கொண்டுவரும் கட்டுரை ஒன்றை ஈழ முரசு பத்திரிகை வெளியிட்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்பதன் அடிப்படை அப் போராட்டத்தின் வர்க்க சார்பு நிலைகளிருந்தே இனம்காணப்படலாம். கருணாநிதிக்குப் பதிலீடாக ஜெயலலிதாவையோ அன்றி ஏனைய அரசியல் வாதிகளையோ பிரதியிட முனைவதனூடாக எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. ஒடுக்கப்படும் தேசிய இனங்களும், மக்கள் பிரிவினரும் மட்டுமே ஈழ மக்களின் நண்பர்கள் என்பதை சேரமானின் ஆக்கமும் அதனைத் தொடர்ந்து பதியப்படுள்ள நேர்காணலும் வெளிக்கொண்டுவருகிறது.
1
தந்திரிகளின் மறுமுகம் – சேரமான்
வன்னிப் போரில் தமிழீழ தேசம் சந்தித்த பேரழிவுக்கும், பின்னடைவுக்குமான மூலகாரணங்களை கண்டறிவதற்கான தேடல் உலகத் தமிழர்களிடையே தொடரும் நிலையில், ‘முள்ளிவாய்க்காலில் கழுத்தறுத்த மர்ம நபர்’ என்ற தலைப்பில் கடந்த இரண்டு ஏழல்களுக்கு முன்னர் கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தோம். இக்கட்டுரையின் தொடர்ச்சியாக ‘தந்திரிகளின் மறுமுகம்’ என்ற மகுடத்தின் கீழ் தொடர் கட்டுரைகளை வெளியிடுவதற்கு முடிவு செய்துள்ளோம்.
இறுதிப் போரில் மக்களைப் பாதுகாப்பதற்காக எத்தகையை அர்ப்பணிப்புக்களைப் புரிவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராக இருந்தார்கள் என்பதையும், போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கும், வன்னி மக்களைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்பாகப் பொய்யுரைத்து சிங்கள-இந்திய அரசுகளின் கூட்டுச்சதிக்கு உறுதுணை புரிந்த அரசியல்வாதிகள், பரப்புரையாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோரின் மறுமுகத்தை வெளிக்கொணர்வதே இத்தொடர் கட்டுரைகளின் நோக்காகும். இதில் வெளிக்கொணரப்படும் உண்மைகளை நிரூபிக்கும் சில கடிதங்களையும் வெளியிடுவதற்கு நாம் முடிவு செய்துள்ளோம். இதுவரை காலமும் மிகவும் அந்தரங்கமான முறையில் பேணப்பட்டு வந்த இக்கடிதங்களை, காலத்தின் தேவை கருதி இப்பொழுது நாம் வெளிக்கொணர்கின்றோம்.
இந்த வகையில் இவ்வாரத்திற்கான கட்டுரையில், போர்நிறுத்தத்தை ஏற்படுத்தி மக்களின் துயர்துடைக்கும் நோக்கத்துடன் ஒரேயொரு நோக்கத்துடன், தமிழக முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதியுடனும், அவரது புதல்வி கனிமொழியுடனும் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தொடர்பாடல்களைப் பதிவு செய்கின்றோம்.
. . .
2008ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம்: வன்னி மேற்கின் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமித்திருந்த சிங்களப் படைகள், கிளிநொச்சியை மையப்படுத்தித் தமது வலிந்த தாக்குதல்களை உக்கிரப்படுத்தியிருந்தன. யுத்த விமானங்கள், ஆட்லறி எறிகணைகள், பல்குழல் பீரங்கிக் கணைகள் சகிதம் கிளிநொச்சியையும், அதனை அண்டிய ஏனைய மக்கள் குடியிருப்புக்களையும் இலக்கு வைத்து சிங்களப் படைகள் நிகழ்த்தி வந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களில் நாள்தோறும் தமிழ் உயிர்கள் நரபலி வேட்டையாடப்பட்டு வந்தன.
மக்களின் இழப்புக்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளும், போர்நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழ்த் தேசிய அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்ட அறவழிக் கவனயீர்ப்பு நடவடிக்கைகளும், தமிழக மக்களிடையே கொந்தளிப்பான சூழலை தோற்றுவித்திருந்தது. இதற்கு ஏறத்தாள ஒரு மாதத்திற்கு முன்னர் 2008 செப்ரம்பர் மாதம் 9ஆம் நாளன்று வவுனியாவில் சிங்களப் படைகளின் கட்டளைப்பீடம் மீது கரும்புலிகளும், வான்புலிகளும் இணைந்து நிகழ்த்திய தாக்குதலில் இந்தியப் படை அதிகாரி ஒருவர் காயமடைந்தமை, தமிழின அழிப்பில் இந்தியா உடந்தையாக இருப்பதைப் பட்டவர்த்தனமாக்கியிருந்தது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் மக்களின் தார்மீகக் குரல் ஓங்கியொலிக்கத் தொடங்கியிருந்தது.
ஏறத்தாள ஏழு மாதங்களில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், காங்கிரஸ் அரசுக்கு எதிராகத் தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பலைகள் கலைஞர் கருணாநிதிக்கு பெரும் சங்கடத்தைத் தோற்றுவித்திருந்தன. காங்கிரஸ் கூட்டணியின் அச்சாணி என்று சோனியா காந்தியால் வர்ணிக்கப்பட்ட கருணாநிதியின் அரசியல் எதிர்காலம்கூட ஒருவகையில் தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பலைகளால் கேள்விக்குறியாகும் அபாயமும் மேலோங்கத் தொடங்கியிருந்தது. இந்நிலையிலேயே போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் நாடகம் ஒன்றை கருணாநிதி கனக்கச்சிதமாக அரங்கேற்றத் தொடங்கியிருந்தார்.
டில்லிக்கு தந்தி அனுப்புதல், ஆர்ப்பாட்டம் நிகழ்த்துதல், மனிதச் சங்கிலிப் பேரணிகளை முன்னெடுத்தல் என்று நீண்டு விரிந்து செல்லத் தொடங்கிய கருணாநிதியின் போர்நிறுத்த நாடகம், ஒக்ரோபர் மாதம் 14ஆம் நாளன்று இந்திய மத்திய அரசுக்கு காலக்கெடு விதிக்கும் காட்சியாகக் கட்டவிழத் தொடங்கியது. இதன்படி பதினான்கு நாட்களில் ஈழத்தில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழகம்-புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூண்டோடு பதவி விலகுவார்கள் என்று கருணாநிதி அறிவித்திருந்தார்.
இதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தமிழீழ மக்களின் தன்னாட்சியுரிமையை அங்கீகரித்து முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த வகையில் கருணாநிதியின் கூண்டோடு பதவி விலகும் அறிவிப்பும், ஜெயலலிதாவின் தன்னாட்சியுரிமை அறிக்கையும் போர்நிறுத்தம் ஏற்படுவதற்கான ஏதுநிலைகள் தொடர்பான ஓரளவு நம்பிக்கையை வன்னி மக்களிடையே ஏற்படுத்தியிருந்தன. தமிழகத்தின் கட்சி அரசியலில் எந்தவொரு காலகட்டத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தலையிடாத பொழுதும்கூட, ஈழத்தமிழர்களின் நலன்களில் ஒத்திசைவான சமிக்ஞைகளை ஏககாலத்தில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் வெளியிட்டமை, தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரை ஒரு ஆரோக்கியமான விடயமாகவே பார்க்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எவ்விதமான தொடர்புகளையும் தாம் பேணுவதில்லை என்ற தோற்றப்பாட்டை கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகமும், ஜெயலலிதாவின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ஊடகங்களில் காண்பித்து வந்த பொழுதும், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் காலம்காலமாக உறுதுணையாக நிற்கும் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் ஊடாக, பின்கதவுத் தொடர்புகளை இவர்கள் பேணியே வந்திருந்தனர்.
இந்த வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பின்கதவுத் தொடர்பாடல்களை 2006ஆம் ஆண்டிலிருந்து பேராசிரியர் சுப.வீரபாண்டியன் போன்ற தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் ஊடாகக் கருணாநிதி பேணி வந்திருந்தார். கருணாநிதியின் சந்தர்ப்பவாத அரசியல் தொடர்பாக ஏறத்தாள மூன்று தசாப்தகாலப் பட்டறிவைக் கொண்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். 1980களில் எம்.ஜி.ஆர் அவர்களுடன் நெருங்கிய உறவைப் பேணிய ஒரேயொரு காரணத்திற்காக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு விரோதமான போக்கைக் கையாண்டவர் கருணாநிதி. எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சியில் தமிழகத்தில் கருணாநிதியுடனும் நல்லுறவைத் தமிழீழ விடுதலைப் புலிகள் பேணிய பொழுதும்கூட, விடுதலைப் புலிகளின் விடயத்தில் காழ்ப்புணர்ச்சியுடனேயே கருணாநிதி நடந்துகொண்டார். தனது புலிவிரோதப் போக்கின் உச்சகட்டமாக 1994ஆம் ஆண்டு மே மாதம் வைகோ அவர்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றிய கருணாநிதி, வைகோவைப் பயன்படுத்தித் தன்னைப் படுகொலை செய்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முற்பட்டதாகவும் அப்பட்டமான பொய்யையும் அவிழ்த்து விட்டிருந்தார்.
இவ்வாறாக கருணாநிதியின் புலிவிரோதப் போக்கை தமிழீழ விடுதலைப் புலிகள் நன்கு அறிந்திருந்த பொழுதும்கூட, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் என்ற வகையில் அவருடன் நல்லுறவைப் பேணுவதற்கே தமிழீழ விடுதலைப் புலிகள் விரும்பியிருந்தார்கள். இந்த வகையில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் அறிக்கைகளை 2008ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் கருணாநிதி வெளியிடத் தொடங்கிய பொழுது, அவருக்கு தமது நேசக்கரத்தை நீட்டிய தமிழீழ விடுதலைப் புலிகள், ஈழத்தமிழர்களின் துயர்துடைப்பதில் அவரால் ஆற்றக்கூடிய பணிகளையிட்டு நம்பிக்கை வெளியிட்டிருந்தார்கள். இதன் ஓர் அங்கமாக ஒக்ரோபர் மாதம் 14ஆம் நாள் காலையில் கருணாநிதிக்கான அந்தரங்க மடல் ஒன்றை, நேரடியாக அவரது மின்னஞ்சல் முகவரிக்கும், சுப.வீரபாண்டியன் ஊடாகவும் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் அனுப்பி வைத்திருந்தார். அந்த மின்மடல் பின்வருமாறு அமைந்திருந்தது:
“மாண்புமிகு டாக்டர் மு.கருணாநிதி
முதலமைச்சர்,
தமிழ்நாடு,
இந்தியா.
அன்புடன் அண்ணா,
ஈழத்தமிழ் மக்களின் இன்னல் கண்டு துயர் துடைக்க உங்களால் உங்கள் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் அனைத்துக்கட்சி மாநாடு சிறப்புடன் நடைபெற என்வாழ்;த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன். இம்மாநாடு தொடர் நடவடிக்கைகளின் ஊடாக ஈழத்தமிழ் மக்களின் சுபீட்சமான சுதந்திரமான வாழ்விற்கு வழிசமைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
நன்றி
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
பா. நடேசன்,
பொறுப்பாளர்,
அரசியற்துறை,
தமிழீழ விடுதலைப்புலிகள்,
தமிழீழம்.”
எனினும் இதற்கான பதில் எதனையும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கருணாநிதி அனுப்பி வைக்கவில்லை. இருந்த பொழுதும், மறுநாள் 15ஆம் நாளன்று ஈழத்தமிழர்களுக்காக தனது நாடாளுமன்றப் பதவியைத் துறப்பதற்கு தயாராக இருப்பதாகக் கூறி தனது தந்தையிடம் கடிதம் ஒன்றை கனிமொழி கையளித்திருந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் (ராஜ்ய சபா) உறுப்பினராக அங்கம் வகித்து வந்த கனிமொழியால் கையளிக்கப்பட்ட இந்தக் கடிதம் ஊடகங்களில் பரபரப்பாக வெளியிடப்பட்டதோடு, கனிமொழியின் தமிழினப் பற்றுத் தொடர்பாக ஈழத்தமிழர்களிடையே நம்பிக்கையையும் தோற்றுவித்திருந்தது.
ஒரு கவிஞராகவும், கருணாநிதியின் இலக்கிய வாரிசாகவும் ஈழத்தமிழர்களால் அறியப்பட்ட கனிமொழியின் பதவி விலகல் அறிவிப்பு கருணாநிதி மீதான ஈழத்தமிழர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரித்திருந்தது. இந்நிலையில் ஒக்ரோபர் மாதம் 16ஆம் நாளன்று, நேரடியாகவும், சுப.வீரபாண்டியன் ஊடாகவும் கனிமொழிக்கு தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளரால் அந்தரங்க வாழ்த்துச் செய்தி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. அந்தச் செய்தி பின்வருமாறு அமைந்திருந்தது:
“அன்பின் சகோதரி கனிமொழிக்கு,
ஈழத்தமிழ் மக்களின் இன்னல் கண்டு இந்த மக்களின் துயர் துடைக்கும் நோக்குடன் உங்கள் இராஐசபா அங்கத்தினர் பதவியைத்துறந்து முன்மாதிரியாக நடந்துகொண்டமை முழுத்தமிழ் மக்களையும் மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் ஆழ்த்தி உள்ளது. இதற்காக நான் எமது இயக்கத்தின் நன்றியினையும் மக்களின் நன்றியினையும் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நன்றி
புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்
பா.நடேசன்,
பொறுப்பாளர்,
அரசியல்துறை,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.”
எனினும் இதற்குப் பின்னரான இரண்டு வார காலப்பகுதியில் கருணாநிதி பிரகடனம் செய்த கூண்டோடு பதவி விலகும் அறிவிப்பு செயல்வடிவம் பெறவேயில்லை. இதேபோன்று தனது தந்தையிடம் கையளித்த பதவி விலகல் கடிதத்தையும் கனிமொழி மீளப்பெற்று தனது ஆசனத்தைப் பாதுகாத்துக் கொண்டார். கருணாநிதியினதும், அவரது புதல்வி கனிமொழியினதும் ‘தமிழ்ப்பற்று’ மீது நம்பிக்கை வைத்திருந்த ஈழத்தமிழர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருந்தது. கருணாநிதியின் கூண்டோடு பதவி விலகும் அறிவிப்பு ஒரு நாடகம் என்பது வெட்டவெளிச்சமாகிப் போக, தமது பதவியைப் பாதுகாப்பதற்காக இந்திய மத்திய அரசின் கூட்டுச்சதிக்கு திரைமறைவில் கருணாநிதி உடந்தையாக நிற்பது பட்டவர்த்தனமாகத் தொடங்கியிருந்தது.
இருந்த பொழுதும் தமது நம்பிக்கையை ஈழத்தமிழினம் தளரவிடவில்லை. இதன் வெளிப்பாடாக போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, 31.10.2008 அன்று தமிழீழ தேசிய போரெழுச்சிக் குழுவின் செயலாளர் சே.முகுந்தன் அவர்களால் சுப.வீரபாண்டியன் ஊடாக கருணாநிதிக்கான மனு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு செவிசாய்த்து எவ்வித நடவடிக்கைகளையும் கருணாநிதி எடுக்காத நிலையில் 02.12.2008 அன்று கருணாநிதிக்கான மற்றுமொரு மனுவொன்று வன்னியிலிருந்து தமிழ் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் க.ஆதித்தன் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் படியொன்று மீண்டும் 07.12.2008 அன்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் அவர்களால் கருணாநிதியின் நேரடி மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இருந்த பொழுதும் கருணாநிதியின் மனம் நெகிழவேயில்லை. 02.01.2009 அன்று கிளிநொச்சியை சிங்களப் படைகள் ஆக்கிரமித்த பொழுது தமிழகத்தில் நடைபெற்ற இலக்கிய விழா ஒன்றில் உரையாற்றிய கருணாநிதியின் புதல்வி கனிமொழி, “கிளிநொச்சி வீழ்ச்சியடைந்த செய்தி கிடைத்த பின்னர் இனியும் தமிழினம் பொறுமை காக்க முடியாது” என்ற தொனியில் உரையாற்றியிருந்தார். அவரது உரை இவ்வாறு அமைந்திருந்ததே தவிர அவரது செயல் சிங்கள-இந்திய கூட்டுச்சதியை ஆமோதிக்கும் வகையிலேயே அமைந்திருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக புதுடில்லியில் காங்கிரஸ் ஆட்சிபீடத்தின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையிலேயே கருணாநிதியினதும், அவரது புதல்வி கனிமொழியினதும் செய்கைகள் அமைந்திருந்தன.
2009ஆம் ஆண்டு சனவரி மாதம் வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் தீக்குளிப்பை தொடர்ந்து தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சியை நசுக்குவதிலேயே கருணாநிதி குறியாக இருந்தார்.
இதேநேரத்தில் கிளிநொச்சி வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் படை வலிமை தொடர்பான ஐயம் வல்லாதிக்க சக்திகளிடையே வலுவடைந்திருந்தது. யுத்தத்தின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடியாது என்று அதுவரை கருத்து வெளியிட்டு வந்த வல்லாதிக்க சக்திகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவையும், சரணாகதியையும் வலியுறுத்திப் பகிரங்கமாக அறிக்கை வெளியிடத் தொடங்கியிருந்தன.
கே.பி-உருத்திரகுமாரன் தரப்பினரின் ஆமோதிப்புடன் 2009 பெப்ரவரி மாதத்தின் முதல் நாட்களில் வல்லாதிக்க சக்திகளால் முன்மொழியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவு-சரணாகதி திட்டத்தை அதிகாரபூர்வமயப்படுத்தும் அறிக்கை ஒன்று 03.02.2009 அன்று இணைத்தலைமை நாடுகளால் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இதே நிலைப்பாட்டுடன் 05.02.2009 அன்று இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முக்கர்ஜீ ஆகியோரால் ஊடக அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டன. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவையும், சரணாகதியையும் பா.சிதம்பரம் வலியுறுத்த, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடுக்கி விடப்படுவதை பிரணாப் முக்கர்ஜீ வலியுறுத்தியிருந்தார்.
இதற்கு எவ்விதமான ஆட்சேபனையையும் வெளியிடாது ஊடகங்களில் அமைதி காத்த கருணாநிதி, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவையும், சரணாகதியையும் வலியுறுத்தி தனது பின்கதவுத் தொடர்புகள் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு செய்திகளை அனுப்பியிருந்தார். இம்முறை கருணாநிதியினதும், பா.சிதம்பரத்தினதும் பின்கதவுத் தொடர்பாளர் வகிபாகத்தை வெரித்தாஸ் வானொலியின் முன்னாள் பணிப்பாளர் ஜெகத் கஸ்பார் அடிகளார் வகித்திருந்தார். இது தொடர்பாக 12.02.2009 அன்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கான செய்தி ஒன்று ஜெகத் கஸ்பார் அடிகளாரால் அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய நேரம் 4:45 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய அரசின் அதிகாரபூர்வ செய்தி கிடைக்கப் பெற்றதை உறுதிப்படுத்துமாறு கோரி அன்று மாலை பா.நடேசன் அவர்களுக்கு ஆங்கிலத்தில் ஜெகத் கஸ்பார் அனுப்பிய மின்மடல் பின்வருமாறு அமைந்திருந்தது:
“அன்புள்ள திரு.நடேசன்,
தொடர்பு விபரங்களை உள்ளடக்கிய மடல் எமது நேரம் பி.ப 4:45 இற்கு அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தயவு செய்து உறுதிப்படுத்தவும்.
ஜெகத்”
எனினும் இதன் பின்னரான நாட்களில் இந்திய அரசின் ஆயுதக் களைவு-சரணடைவு திட்டத்திற்கான தமது ஆட்சேபனையை மிகவும் பண்பாகவும், இராஜதந்திரிமான முறையிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தார்கள். அதேநேரத்தில் வன்னி கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளின் பரப்பளவு சுருங்கத் தொடங்க, சிங்களப் படைகளின் அரக்கத்தனமான தாக்குதல்களில் படுகொலை செய்யப்படும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது.
இந்நிலையில் ஈழத்தமிழர்களுக்கு கௌரவமான போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் கைவிடவில்லை. இதனைத் தொடர்ந்து தன்னுடன் நேரடித் தொடர்புகளை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பேணுவதற்கு ஏதுவாக, 02.03.2009 அன்று மின்னஞ்சல் ஒன்றை கனிமொழி அனுப்பியிருந்தார். ஏக காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவையும், சரணாகதியையும் வலியுறுத்தும் அழுத்தங்கள் தனது பின்கதவுத் தொடர்புகள் ஊடாக கருணாநிதியால் பிரயோகிக்கப்பட்டன.
இந்நிலையில் ஆனந்தபுரம் சமர் தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் 29.03.2009 அன்று காலையும், மதியமும் கனிமொழிக்கும், கருணாநிதிக்கும் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளரால் அவசர செய்தி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தம்மால் வாசிக்க முடியவில்லை என்று கனிமொழி பதிலளித்ததை அடுத்து மீண்டும் அதே செய்தியை மறுநாள் 30.03.2009 அன்று காலை கனிமொழிக்கு தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் அனுப்பி வைத்தார். அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது:
“அன்புடன் சகோதரி கனிமொழிக்கு,
தற்போது இங்கு தினமும் நூற்றுக்கணக்கானக்கான மக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் கொண்டிருக்கின்றனர். நாம் நீண்டகாலமாகவே யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி வருகின்றோம். எமது அவலங்களை போக்குவதற்காகவே நாம் இதனை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். ஆனால் சிங்கள அரசு யுத்தத்தை தொடர்ச்சியாக நடாத்திவருகின்றது. சிங்கள அரசின் அதிமுக்கிய மூத்த அமைச்சர்கள் இந்திய அரசின் உதவியினாலேயே தாம் இந்த யுத்தத்தை வென்றுகொண்டிருப்பதாக பகிரங்கமாக அறிவித்த வண்ணம் உள்ளனர். இது எமக்கு மிகுந்த வேதனையை தருகின்றது. இந்த நேரத்திலாவது நீங்களும் அப்பாவும் சேர்ந்து இந்திய அரசை வலியுறுத்தி யுத்த நிறுத்தத்தை கொண்டுவந்தால் எமது மக்களை காப்பாற்றலாம். நிபந்தனையற்ற யுத்தநிறுத்தமே எதிர்காலத்தில் அரசியல் பேச்சுவார்த்தைக்கும் நிரந்தர சமாதானத்திற்கும் வழிவகுக்கும். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியை செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றேன்.
நன்றி,
என்றும் உங்கள் அன்பான,
சகோதரன் பா.நடேசன்”
மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் பா.நடேசன் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட இந்த செய்திக்கு கருணாநிதியோ, அன்றி கனிமொழியோ உடனடியாக எந்தவொரு பதிலையும் அனுப்பவில்லை. ஆனந்தபுரம் முற்றுகையில் தமிழீழ தேசியத் தலைவர் சிக்கியிருப்பதாக இந்திய அரசுக்கு சிங்கள அரசு செய்தியொன்றை அனுப்பியிருந்த நிலையில், பா.நடேசனின் கடிதத்திற்கு பதிலளிக்காது கனிமொழியும், கருணாநிதியும் அமைதி காத்தனர்.
இந்நிலையில் வீரத்தளபதிகளான பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா போன்றோரும், நூற்றுக்கணக்கான போராளிகளும் தமது உயிரை வேலியாக்கி நிகழ்த்திய எதிர்த்தாக்குதல்களில் சிங்களப் படைகளின் ஆனந்தபுரம் பெட்டி முற்றுகை உடைக்கப்பட்டு, பாதுகாப்பான இடத்திற்கு தமிழீழ தேசியத் தலைவர் நகர்த்தப்பட்டார். தமிழீழ தேசியத் தலைவரை உயிருடன் சிறைப்பிடிப்பதற்கு சிங்கள-இந்திய அரசுகள் எடுத்த முயற்சி மாவீரர்களின் வீரம்செறிந்த தாக்குதல்களாலும், தற்கொடையாலும் சிதறடிக்கப்பட்டது.
05.04.2009 அன்று ஆனந்தபுரம் பகுதியை சிங்களப் படைகள் ஆக்கிரமித்ததை தொடர்ந்து மறுநாள் 06.04.2009 நாளன்று புலம்பெயர் தேசங்கள் தோறும் கிளர்ந்தெழுந்த ஈழத்தமிழர்கள் போர்நிறுத்தத்தை வலியுறுத்தி வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கினார்கள். இந்நிலையில், சிங்கள-இந்திய அரசுகளின் கனவு பலிக்காத சூழலில், ஒரு வார இடைவெளிக்குப் பின்னர் 07.04.2009 அன்று முற்பகல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கான பதிலை கருணாநிதியின் புதல்வி கனிமொழி அனுப்பியிருந்தார். ஆங்கிலத்தில் அனுப்பி வைக்கப்பட்ட அந்தக் கடிதத்தின் தமிழ்வடிவம் பின்வருமாறு அமைந்திருந்தது:
“நடேசன் அண்ணன்,
நிலைமை மிகவும் மோசமாக இருப்பதை நான் அறிவேன். நீங்கள் அனுப்பிய மடல் தொடர்பாக சம்பந்தப்பட்ட எல்லோருடனும் பேசிவிட்டேன். குடியரசுத் தலைவரின் உரையில் தெரிவிக்கப்பட்டமை போன்று ஆயுதங்களை கீழே போடுவதற்கான ஒப்புதலை நீங்கள் வெளியிட வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. தயவு செய்து அதைச் செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால் உங்களுக்கு இந்திய அரசாங்கம் உதவு செய்யக்கூடும் போல் தோன்றுகின்றது. நான் சொல்வதை செய்ய முடியாதுவிட்டால் தயவு செய்து டில்லியுடனேயே கதையுங்கள். மக்களைப் பற்றி உள்துறை அமைச்சரும் கரிசனையாக உள்ளார். கிடைக்கும் செய்திகள் கவலையளிக்கும் வகையிலும், தீர்க்கமானவையாகவும் உள்ளன. தயவு செய்து அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். தயவு செய்து தவறான வழிகாட்டல்களை பின்பற்றாதீர்கள்.
கனிமொழி.”
எனினும் கனிமொழியின் இந்த மடலுக்கான தமது ஆட்சேபனை கருணாநிதியின் பின்கதவுத் தொடர்புகள் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அன்று பிற்பகல் மீண்டுமொரு தடவை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவை வலியுறுத்தி கனிமொழியால் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கு பிறிதொரு மடல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்த மடலின் தமிழ்வடிவம் பின்வருமாறு அமைந்திருந்தது.
“நடேசன் அண்ணன்,
அங்குள்ள நிலமைகள் தொடர்பாக நாங்கள் எல்லோரும் கவலையடைந்துள்ளோம். சிறீலங்கா அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு முன்வரும் பட்சத்தில் ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதற்கு தயாராக இருப்பதாக அறிவிப்பதைபற்றி சிந்தியுங்கள். உள்துறை அமைச்சரும், முதலமைச்சரும் அங்குள்ள மக்கள் தொடர்பாக மிகவும் அக்கறையாக உள்ளார்கள்.
நான் சொல்வதை செய்ய முடியாவிட்டால், தயவு செய்து டில்லியில் உள்ள ஆட்களுடன் கதைக்கவும்.
கனிமொழி.”
ஒருபுறம் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருதில் கருணாநிதி குறியாக இருந்ததை அவரது புதல்வியின் மடல் வெளிப்படுத்தியதோடு, முத்தமிழ் அறிஞரின் வாரிசு என்று பெயர்போன அவர் ஆங்கிலத்தில் எழுதிய கடிதங்கள் இன்னொரு செய்தியையும் உணர்த்தியிருந்தது. அதாவது தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கு கனிமொழி அனுப்பிய இரண்டு கடிதங்களின் படிகள், இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டமையே அந்த செய்தியாகும்.
இவ்வாறாக வன்னிப் போரின் உச்சகட்டத்தில் கருணாநிதியின் மறுமுகம் தமிழீழ விடுதலைப் புலிகளிடையே எவ்விதமான ஐயம்திரிபு இன்றி பட்டவர்த்தனமாகியிருந்தது. தனது புலிவிரோதப் போக்கின் உச்சகட்டமாக தமிழீழ விடுதலைப் புலிகளை சரணடைய வைத்து அழிப்பதில் குறியாக இருந்த கருணாநிதி, அதற்காக ஒன்றரை இலட்சம் தமிழீழ மக்களின் உயிர்களை சிங்களம் காவுகொள்வதையிட்டு எவ்வித கவலையும் கொள்ளவில்லை.
26.04.2009 அன்று ஒருதலைப்பட்சமான முறையில் போர்நிறுத்தத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் பிரகடனம் செய்த பொழுதும்கூட, இதுவிடயத்தில் சிங்கள அரசைப் போர்நிறுத்தம் செய்யுமாறு நிர்ப்பந்திக்கும் நடவடிக்கைகள் எவற்றிலும் இந்திய அரசு ஈடுபடவேயில்லை. இதற்கான அழுத்தங்கள் எதனையும் கருணாநிதியும் பிரயோகிக்கவில்லை.
அதேநேரத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாள் நெருங்கத் தொடங்க, தமிழகத்தில் மீண்டும் தளிர்விட்ட மக்களின் கொந்தளிப்பை தணிக்கும் நோக்கத்துடன் மறுநாள் 27.04.2009 அன்று சென்னையில் கருணாநிதியால் உண்ணாநோன்பு நாடகம் அரங்கேற்றப்பட்டது. காலையில் உண்ணாநோன்பை தொடங்கிய கருணாநிதி, தனது முயற்சியால் உடனடியாக போர்நிறுத்தம் ஏற்பட்டிருப்பதாகக் கூறி அன்று மதியத்திற்குள் பழரசம் அருந்தித் தனது உண்ணாநோன்பை முடித்துக் கொண்டார். ஆனால் அதே நாளில் வன்னியில் நூற்றுக்கணக்கான தமிழ் உயிர்களை சிங்களம் நரபலி வேட்டையாடியது. கருணாநிதியை நம்பியிருந்த வன்னி மக்களுக்கு சாவையே பரிசாக கருணாநிதி வழங்கினார். கருணாநிதியின் கலைத்திறனை வெளிப்படுத்துவதற்கு ஈழத்தமிழினமே பலிக்கடா ஆக்கப்பட்டது.
இது பற்றி தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களுக்கு எழுதப்பட்ட மின்மடலில் தமிழகத்தில் இருந்து வெளிவரும் தினமணி பத்திரிகையை சேர்ந்த வி.தேவதாசன் என்ற ஊடகவியலாளர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:
“தோழர் நடேசன் அவர்களுக்கு, வணக்கம்
சென்னையிலிருந்து தினமணி செய்தியாளர் தேவதாசன் எழுதுவது. போரை நிறுத்த இலங்கை அரசின் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது என கூறி, சென்னையில் தனது உண்ணாவிரதத்தை 6 மணி நேரத்திற்குள் முதலமைச்சர் கருணாநிதி முடித்துக் கொண்டுள்ளார். கருணாநிதி கூறுவது உண்மையா? தயவுசெய்து உண்மை நிலையை தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிவியுங்கள்.
அன்புடன்
வி.தேவதாசன்.”
தனது வாக்கு வங்கியைப் பாதுகாப்பதற்காக கருணாநிதி ஆடிய உண்ணாநோன்பு நாடகத்தின் உண்மைத்தன்மையை தமிழக மக்களில் ஒருதரப்பினர் நன்கு புரிந்து கொண்டிருந்ததையே தினமணி செய்தியாளரின் கடிதம் வெளிப்படுத்தியிருந்தது.
“தமிழினத்தின் காவலன், உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவன், முத்தமிழ் வித்தகர்!” என்றெல்லாம் முகமகன் கூறப்படும் தந்திரி கருணாநிதியின் மறுமுகத்தை உலகத் தமிழனம் புரிந்து கொள்வதற்கு சிறிதளவாவது இக்கட்டுரை உதவிபுரிந்திருக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
2
தமிழ் நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மக்கள் எழுச்சி ஏற்படுவதை புலி ஆதரவுக் கட்சிகள் விரும்பவில்லை! – தோழர் மருதையன்
இனியொரு: ஈழப் பிரச்சனை தொடர்பாக அண்மைக் காலங்களில் பல கட்சிகள் ஆர்வம் காட்டி வருவதுடன் மட்டுமல்லாது பல போராட்டங்களையும் முன்நின்று நடாத்தியுள்ளன. மக்கள் கலை இலக்கியக் கழகம் இப்போராட்டங்களின் எவ்வாறு பங்குவகித்தது?
கிளிநொச்சித் தாக்குதல் தீவிரமடையத் தொடங்கிய காலப்பகுதியில், தா. பாண்டியன், பழ.நெடுமாறன் போன்ற அரசியல் வாதிகள், இந்திய அரசே தலையிடு போன்ற சுலோகங்களுடன் போராட்டங்களை ஆரம்பித்தனர். கலைஞர் கருணாநிதி தலைமையில் பெரும்பாலான போராட்டங்களை நடத்தினர். அவர் தலைமையில் மனிதச் சங்கிலிப் போராட்டம் ஒன்றையும் ஒழுங்கு செய்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் இரண்டு பிரதான நோக்கங்களுக்காக,
1. போரை நிறுத்த வேண்டும் என்பதற்காகவும்
2. இது இந்திய மேலாதிக்கம் முன்னின்று நடத்தும் போர் என்பதை அம்பலப் படுத்துவதற்காகவும்,
கடந்த ஆண்டு அக்டோபரிலிருந்து தமிழகம் தழுவிய அளவில் பிரச்சாரங்களும் போராட்டங்களும் இலங்கைத் தமிழர்களுக்காக நடாத்தியுள்ளோம்.
சென்னையில் இராணுவ ஆட்சேர்ப்பு மையத்தின் முன்னால் முதலில் மறியல் போராட்டத்தை ஏற்பாடு செய்தோம். இப் போராட்டத்தில் நூற்றுக் கணக்கான தோழர்கள் கைது செய்யப்படார்கள். இந்திய மேலாதிக்கத்தை வெளிச்சம்போட்டுக் காட்டும் நோக்கிலேயே இராணுவ ஆட்சேர்ப்பு மையத்தின் வாயிலில் இப் போராட்டத்தை நடத்தினோம். இதே வகையான போராட்டங்கள் ஏனைய மாவட்டப் பகுதிகளிலும், குறிப்பாக திருச்சி இராணுவ ஆட்சேர்ப்பு மையத்தின் முன்னதாகவும், ஏனைய நகரங்களில் அரச அலுவலக வாயிலிலும் மறியல், சாலை மறியல் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கிறோம். அனேகமாக எல்லா மாவட்டத் தலை நகரங்களிலும் போராட்டங்கள் நடத்தியுள்ளோம்.
இனியொரு: முத்துக்குமார் தீக்குளித்த பின்னதான உணர்ச்சிகரமான அரசியல் சூழலில் உங்கள் பங்களிப்பு எவ்வாறு அமைந்திருந்தது?
முத்துக்குமார் தீக்குளிப்பிற்குப் பின்னர், ஓய்வடைந்த நிலையிலிருந்த போராட்டங்கள் புத்துயிர் பெறலாயின. போராட்டங்க ஓய்வடைந்த சூழலில் விரக்தி மனப்பான்மை நிலையிலிருந்தே அவர் தீக்குளிக்கிறார். இதன் பின்னர் உத்வேகமடைந்த போராட்டங்கள் பொதுவாக தமிழகம் தழுவிய அளவில் மாணவர்களாலும் வழக்குரைஞர்களாலும் முன்னெடுக்கப்படுகின்றன. இப்போராட்டங்களில் எமது அமைப்பு மிக முக்கிய பங்காற்றியது.
ஆறு மாவட்டங்களில் மாணவர்களைத் திரட்டி வேலைநிறுத்தம் செய்து போராட்டங்களை நடத்தினோம். சில இடங்களில் சிபி ஐ மாணவர்கள் சிலர் கலந்து கொண்டனர். மற்றைய இடங்களில் ஏனய மாணவர் அமைப்புக்கள் எதுவும் இப்படிப்பட்ட போராட்டங்களை நடத்தவில்லை. கல்லூரி மாணவர்கள் அனைவரையும் அழைத்துவந்து சாலை மறியல் செய்வது, வேலை நிறுதம் செய்வது, ஊர்வலங்கள் நடத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.
இவற்றையெல்லம் மீறி, அக்டோபரில் ஆரம்பித்த போராட்டமானது, ஜனவரி 26ம் திகதி குடியரசு தினத்தன்று அண்ணாசாலையில் மிகப்பிரமாண்டமான போராட்டமாக நடத்தப்பட்டது. அதற்குப் பின்னரும் பல்வேறு வழிகளில் ஈழப் போராட்டம் தொடர்ந்தது.
உண்மையிலேயே முத்துக்குமார் ஒரு கையறு நிலைக்குத் தள்ளப்பட்டுத் தான் இந்த முடிவை எடுத்திருந்தார்.
போராட்ட வடிவம் என்ற முறையில் நாம் அதை ஏற்றுக்கொள்ள முடியாதாயினும், ஈழத் தமிழ் ஆதரவு உணர்வு கொண்டவர்களை அணிதிரளச் செய்வதற்கு முத்துக்குமார் தீக்குளித்த பின்னதான உணர்ச்சிகரமான அரசியல் சூழல்ஒரு ஆரம்பமாக அமைந்தது.
தமிழ் நாடு வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன், அவர் பல சந்தர்ப்பங்களில் எமக்கு ஆதரவளிப்பவர், அவரது மரணச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுகிறார். இந்த சந்தர்ப்பத்தில், நாம் இதனை ஒரு கிளர்ச்சியாக மாற்ற வேண்டும் என்று கருத்தை முன்வைத்துப் பிரச்சாரம் செய்தோம். திரு வெள்ளையனும் இந்தக் கருத்தில் மிகத் உறுதியுடனிருந்தார்.
மறுநாள் காலையில் அரசியற் கட்சித் தலைவர்கள் வருகிறார்கள். வை.கோ, தா.பாண்டியன், திருமாவளவன், நெடுமாறன் போன்ற புலி ஆதரவுத் தலைவர்கள் மரண ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக வருகிறார்கள். இவர்கள் எல்லோரும் உடனடியாக அவரது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கின்றனர்.
இந்த நிலையில் நாமும், வெள்ளையனும் இதனை மக்கள் எழுச்சியாக, மிகப்பெரிய ஊர்வலமாகத் தயார்படுத்தி நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம். இதை இந்த அரசியள் கட்சித் தலைவர்கள் அனைவரும் நிராகரிக்கிறார்கள்.
இனியொரு : ஏன் இவர்கள் இவ்வாறான போக்கை எதிர்த்தார்கள்?
அங்கு மக்கள் கணிசமான அளவு கூடியிருந்தனர். அங்காங்கே ஆர்ப்பாட்டங்கள், நாடகங்கள், பாடல்கள் என்று கிளர்ச்சி மனோபாவம் கூடியிருந்தவர்கள் மத்தியில் மேலோங்கியிருந்தது.
இவ்வாறான கிளர்ச்சிகரமான சூழ் நிலை சட்ட ஒழுங்குப் பிரச்சனையாகிவிடும் என்று அரசியற்கட்சித் தலைவர்கள் அஞ்சினர். மக்கள் எழுச்சியைக் கட்டுப்படுத்த முடியாது போய்விடும் என்று வெளிப்படையாகவே கூறினர்.
ஆக, புலி ஆதரவாளார்களான மேற்குறித்த தலைவர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மக்கள் எழுச்சியை விரும்பவில்லை என்பதையே இது சுட்டி நின்றது.
இதன் பின்னர் அரங்கத்தினுள் இந்தத் தலைவகளுடன் நடத்திய பேச்சு வார்த்தைகளில் எந்த முடிவும் ஏற்படாமல், கூடியிருந்த மக்களிடம் அபிபிராயம் கேட்பதாக முடிவெடுக்கப்பட்டது.
வெள்ளையன் பின்னதாக வெளியே வந்து ஒலிவாங்கியின் முன்னால் கூடியிருந்த மக்களிடம் பேச ஆரம்பித்தார். இம்மரண ஊர்வலம் குறித்து இரண்டு கருத்துக்கள் இருப்பதாகவும், அதில் முதலாவது உடலை உடனே எடுக்கவேண்டாம், ஓரிரு நாட்கள் வைத்திருந்து மக்களைத் திரட்டிப் பின்னதாக பெரிய ஊர்வலமாக நடத்தலாம் என்று ஆரம்பித்து மற்றைய கருத்தைக் கூற ஆரம்பித்த போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள், முதலாவது கூறியது தான் சரியான கருத்து எனச் சத்தமிட்டு மற்றக் கருத்தைச் சொல்வதற்கே இடம்வைக்கவில்லை.
அப்படியிருந்தும் இரண்டாவது கருத்தை நீங்களே கூறுங்கள் என்று திருமாவளவன் கையில் மைக்கைக் கொடுக்கிறார். அங்கு கூடியிருந்த மக்கள் திருமாவளவனைப் பேசவே அனுமதிக்கவில்லை. அதனால் தவிர்க்க முடியாமல் மக்கள் விருப்பப்படியே இறுதி ஊர்வலத்தை நடத்துவதற்கு ஒத்துக்கொண்டனர்.
இதன் பின்னர் திருமாவளவன், நெடுமாறன், பாண்டியன் உட்பட அனைத்துத் தலைவர்களும் அந்த இடத்திலிருந்து அகன்று விடுகிறார்கள்.
இவ்வாறு இறுதி ஊர்வலத்தை எழுச்சி மிக்கதாக நடத்தவேண்டும் என்று எமது தோழர்கள் இவர்களுடன் போராடியது ஒருபுறமிருக்க, இதற்காகப் போராடிய செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், வழக்குரைஞர்கள், போன்ற பல தரப்பினர் கூடியிருந்த மக்கள் மத்தியிலிருந்தபோதும், கட்சித் தலைவர்களின் கோரிக்கைகளுக்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது.
இவர்களெல்லாம் வெளியேறிய பின்னர் இரண்டு நாட்கள் உடல் வைக்கப்பட்டிருந்தது. பெருந்தொகையான மக்கள் திரண்ட பின்னர் எழுச்சிக் குரல்களோடு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலத்தின் போது எமது தோழர்கள் ஈழ ஆதரவு வீதி நாடகத்தை நடத்திய வண்ணம் முன்னால் சென்றனர்.
இனியொரு: மற்றைய பாராளுமன்ற வழிக் கட்சிகளும் நீங்களும் நடத்திய போராட்டங்களிடையேயான வேறுபாடு என்ன?
ம.க.இ.க மாணவர்களை அணிதிரட்டி நடத்திய போராட்டங்கள் தவிர தன்னிச்சையாகப் பல இடங்களில் மாணவர்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர். பல இடங்களில், உதாரணமாக, திருச்சி போன்ற பகுதிகளில் இதற்குத் தலைமை தாங்கிய மாணவர்கள் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். அரச படைகளால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
சென்னையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்களை அணிதிரட்ட முயன்ற எமது தோழர்களை போலிசார் மூர்க்கத் தனமாகத் தாக்கி, குறிப்பாக ஐந்து தோழர்கள் அடித்து இழுத்துச் செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களை வெளியே எடுப்பதற்காக வக்கீல்கள் போராட வேண்டியிருந்தது.
தவிர, வழக்குரைஞர்கள் போராட்டம் என்பது குறித்துக் காட்டத்தக்கது.ஆசிரியர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என்று பல தரப்பு வர்க்கப்பிரிவுகளைச் சார்ந்தவர்களை எடுத்துக்கொண்டால் அதில் தொடர்ச்சியாக விட்டுக்கொடுப்பற்ற போராட்டத்தை நடத்தியவர்கள் வழக்குரைஞர்களே ஆவர். இவர்களின் போராட்டத்தில் நீதிமன்றப் புறக்கணிப்பு என்பது கோடிட்டுக் காட்டத்தக்கது. இது தவிர சோனியா காந்தியின் கொடும்பாவி எரிப்பு, காங்கிரஸ் கட்சிக் கொடி எரிப்பு போன்ற போராட்டங்கள் மதுரை போன்ற இடங்களில் நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் மத்தியிலும் சரி, மதுரையிலும் சரி, மற்றும் திருச்சி, கரூர் தஞ்சாவூர், தூத்துக்குடி, திருவெண்ணாமலை, போன்ற பல பகுதிகளில் எமது தோழர்களான வழக்குரைஞர்கள் முன்னணியிலிருந்து இப்போராட்டத்தை நடத்தினர்.
ஈழ ஆதரவுப்ப் போராட்டதை சென்னை உயர் நீதி மன்றத்தில் நடத்தியவர்கள் மீது போலிஸ் நடத்திய மூர்க்கமான தடியடிக்கும் ஒரு பின்புலம் உண்டு.
சிதம்பரம் கோவிலில் சமஸ்கிருதத்திற்கு எதிராகத் தமிழ் பாடும் உரிமையை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தை எமது அமைப்பினூடாக நடத்தி வெற்றிகண்டிருந்தோம். இது ஏறத்தாள ஐம்பது ஆண்டுகளாக முடியாத ஒரு காரியமாக இருந்து வந்தது. இதற்கான சட்டரீதியான உரிமையை வழக்காடி வெற்றிபெற்றோம். இவ்வுரிமைக்கான நீதிமன்ற ஆணையை இரத்துச் செய்வதற்காக, சுப்பிரமணிய சுவாமிகள் தலையிடுகிறார். இவரை சிதம்பரம் கோவிலில் விசேட பூஜைகளை மேற்கொண்டு, தீட்சகர்கள் அனுப்பி வைக்கிறார்கள்.
இனியொரு: இடையில் ஒரு கேள்வி, சுப்பிரமணிய சுவாமிக்கும் ஈழப்பிரச்சனைக்கும் என்ன தொடர்பு?
சுப்பிரமணிய சுவாமி தீவிரமான புலி எதிர்ப்பாளர் என்பது ஒருபுறமிருக்க புலிகளைக் காரணம் காட்டியே மொத்த இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகவும் செயற்படுபவர். பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு உறுதுணையாக இருப்பவர். சீ.ஐ.ஏ இன் இந்திய ஏஜன்ட். தொழில் முறை அரசியல் புரோக்கர். இவைதான் இவரின் அடிப்படைத் தகுதிகள்.
தமிழ் பாடுவதற்கான உரிமையை இரத்துச்செய்யக் கோரி சிதம்பரம் கோவில் தீட்சகர்கள் தாக்கல் செய்த மேன் முறையீட்டில் தன்னையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற விண்ணப்பிக்கவே அவர் அங்கு வந்திருந்தார். அங்குதான் அவரை வழக்குரைஞர்கள் முட்டையால் அடிக்கிறார்கள். இதனைச் செய்த வழக்குரைஞர்கள், எங்களது தோழர்கள் உள்பட, ஈழமக்களுக்கு ஆதரவான போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தவர்கள். இதற்கெதிராக நீதிபதிகள், இவ்வாறெல்லாம் நீதிமன்றத்துள் நடந்துகொள்ளக் கூடாது என்று ஆட்சேபனை தெரிவித்த போது, சுப்பிரமணிய சுவாமிகளை வெளியேறுமாறு முழக்கமிட்டார்கள் வழக்குரைஞர்கள்.
இதையொட்டிய சம்பவங்களுக்குப் பின்னரே போலிசார் தடியடிப்பிரயோகம் நடத்தி மூர்க்கமாக நடந்து கொள்கிறார்கள். ஆனால் இச்சம்பவங்களை ஈழப் போராட்டத்தைத் திசை திருப்புவதற்கு அரசு பயன்படுத்திக் கொண்டது.
இவற்றையெல்லம் மீறி, அக்டோபரில் ஆரம்பித்த போராட்டமானது, ஜனவரி 26ம் திகதி குடியரசு தினத்தன்று அண்ணாசாலையில் மிகப்பிரமாண்டமான போராட்டமாக நடத்தப்பட்டது. அதற்குப் பின்னரும் பல்வேறு வழிகளில் ஈழப் போராட்டம் தொடர்ந்தது.
இனியொரு: அரசியல் சார்ந்த வேறுபாடு எவ்வாறு அமைந்திருந்தது?
போராட்ட வடிவங்கள் அவை எவ்வளவு போர்க்குணம் உடையதாக அமைந்திருந்தது என்பது ஒருபுறமிருக்க, போராட்டத்தின் நோக்கம், அது என்ன அரசியலை மையப்படுத்தி மக்கள் மத்தியில் கொண்டு செல்வது என்பதில் எனையவர்களுக்கும் எங்களுக்கும் பாரிய வேறுபாடு இருந்தது.
முக்கியமாக இந்திய மேலாதிக்கத்தை அம்பலப்படுத்துவது, ஈழத் தமிழ் மக்களுடைய சுய நிர்ணய உரிமைக்குக் குரல் கொடுப்பது, போரை நிறுத்துவது போன்றவற்றிற்கான அரசியலை மையப்படுத்தியே எமது போராட்டங்கள் நடந்தன. ஆனால் எனைய கட்சிகளின் கோரிக்கையானது படிப்படியாக மாற்றத்திற்கு உள்ளாவதாக அமைந்திருந்தது.
ஆரம்பத்தில் அவர்களின் கோரிக்கை மனிதாபிமான உதவி, இந்திய அரசின் தலையீடு, சோனியா கருணைகாட்ட வேண்டும், என்றவாறு காலத்திற்குக் காலம் மாற்றமடைவதாக அமைந்திருந்தது.
ஒருகட்டத்தில் கருணாநிதி காங்கிரசோடு கூட்டு என்ற அடிப்படையில் போராட்டத்திலிருந்து விலகிச்சென்ற சூழலில், பலர் இந்திய அரசிற்கு எதிராகவும் பேச ஆரம்பித்தார்கள்.
அவ்வாறு இந்திய அரசிற்கு எதிராகப் பேச ஆரம்பித்த போதும் கூட, தொப்புள் கொடி உறவு, நம்முடைய இனம், நமது இனம் அங்கே செத்துக்கொண்டிருக்கிறது, தமிழன் என்ற காரணத்தாலேயே இந்திய அரசு செவிமடுக்கவில்லை, இவைதான் அவர்கள் முவைத்த சுலோகங்கள்.
அதற்குப் பிறகு இவர்கள் ராஜபக்சேயினுடைய கையாட்கள், சீனாவோடு இலங்கை கூட்டுச் சேர்ந்துள்ளது, இந்தியாவின் கையைப் பலப்படுத்த தமிழர்களுக்கு உதவ வேண்டும், புலிகள் இந்தியாவின் ஆதரவாக மாறுவார்கள், என்ற முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன.
இனியொரு: ஈழத் தமிழர்கள் மீதான திட்டமிட்ட படுகொலை தமிழகத்தில் ஒரு அரசியல் எழுச்சியை ஏற்படுத்தியிருந்ததா?
இனப்படுகொலை குறித்து அன்றாடம் பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள், தொலைக்காட்சிச் செய்திகள் மக்கள் மத்தியில் ஒரு அனுதாப அலையை ஏற்படுத்தியிருந்தது உண்மை. ஆனால் அது தமிழகம் தழுவிய ஒரு அரசிய எழுச்சியை ஏற்படுத்தியது என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்று.
வழக்குரைஞர்களின் போராட்டம் கூட, உதாரணமாக, சென்னையில் ஒரு எண்ணாயிரம் வழக்குரைஞர்கள் இருக்கிறார்கள், அனைவருமே இப்போராட்டங்களில் பங்கெடுத்திருந்தாலும் இதில் முன்னின்று தொடர்ச்சி கொடுத்தவர்கள் ஒரு ஐம்பது பேரளவிலேயே இருக்கும். ஏனையவர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போன்றவற்றைச் செய்திருந்தார்கள். மாணவர்களையும் கூட ஒரு முறை இருமுறைக்கு மேல் அணிதிரட்டுவதென்பது மிக க்கடினமானதாகவே இருந்தது.
இதில் கருணாநிதி அரசின் துரோகமும் குறிப்பிடத்தக்கது. அவர்கள் ஊர்வலங்களில் பங்குகொள்ளக் கூடாது என்று எச்சரித்திருக்கிறார்கள். குறிப்பாக கல்லூரித் தலைமையாசிரியர்களை மாணவர்களைப் போராட்டங்களில் பங்குகொள்ள அனுமதிக்கக் கூடாது என எச்சரித்திருந்தனர். அவர்களே சொந்தப் போறுப்பில் மாணவர்களைப் போராட்டங்களில் பங்குகொள்ளக் கூடாது என எச்சரித்திருந்தனர். இவ்வாறு கருணாநிதி அரசு போராட்டங்களை முடக்குவதில் தீவிரம்காட்டியது. ஆக, இவ்வாறான தடைகள் துரோகங்களுக்கு மத்தியில் இது மாபெரும் எழுச்சியாக உருவெடுத்ததாகக் கூறுவது மிகைப்படுத்தப்பட்ட கருத்தே.
இனியொரு:ஈழ ஆதரவுப் போராட்டங்கள் மாபெரும் எழுச்சியாக உருவெடுக்காமைக்கான வேறு ஏதும் புறக்காரணங்கள் உள்ளனவா?
கிளிநொச்சித் தாக்குதல், அந்தத் தாக்குதல் தீவிரமடை ஆரம்பித்த காலப்பகுதியிலிருந்து தான் போராட்டங்கள் ஆரம்பமாகின்றன. அதற்கு முன்பதாக, 2002 இலிருந்து 2006 வரை சமாதானம். அப்போது இப்பிரச்சனை குறித்து யாரும் பேசியதில்லை. போர் தொடங்கிய காலம் முதல், பத்திரிகைச் செய்திகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாக ஈழப்பிரச்சனை பேசப்பட்டது. ஒரு சில ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.
ஈழத் தமிழர்கள் மீதான ஒடுக்கு முறை, அதற்கெதிராக நாம் போராட வேண்டும் என்பது குறித்த ஒரு தொடர்ச்சியான பிரச்சாரம், மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாகத் திரட்டப்படுவதற்கான பிரச்சாரமும் அதற்கான பின்புலமும் இங்கு அமைந்திருக்கவில்லை.
இங்கு இருக்கக் கூடிய பிரதான கட்சிகள் இப்பிரச்சனையை குறைந்தபட்சம் பேசக்கூட இல்லை.
83 இலிருந்தே, பற்றி எரியும் போது அதைக் குறுகிய காலத்திற்கு கையிலெடுத்துக் கொள்வதென்பதை ஒரு வழமையாகக் கொண்டிருந்தன.
ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது, அவர்கள் மீதான தொடர்ச்சியான அடக்கு முறையை எதிர்த்து சுயனிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்நிறுத்துவது. இவ்வாறான கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுப்பது என்பது எந்தக்கட்சியிடமும் கிடையாது.
வை.கோ தனி ஈழம் தான் தீர்வு என்று பேசும் போது அவர் கூட்டு வைத்துக்கொள்ளும் ஜெயலலிதா இப்படிப் பேசினால் காஷ்மீரை பிரித்துக்கொடுக்கத் தயாரா என்று கேட்பார். ப.ம.க ராமதாஸ் தனி ஈழம் தான் தீர்வு என்றும் பேசுவார் அது இல்லை என்றும் பேசுவார். ஒரு இனத்தின் தன்னுரிமை, பிரிந்து போகும் உரிமை என்பதை இவர்கள் அரசியல் ரீதியாக ஏற்றுக்கொண்டவர்கள் இல்லை. காஷ்மீருலும் ஏனைய பகுதிகளிலும் நடைபெறும் போராட்டங்களின் போது செலுத்தப்படும் இராணுவத்தின் அடக்குமுறையை ஆதரிப்பவர்கள்.
அவர்களுடைய ஒடுக்கு முறைக்கெதிரான போராட்டங்கள், தீவிரவாதம், பயங்கரவாதம் என்பது தான் அவர்களுடைய கருத்து. அந்த அடிப்படையில், இவர்களால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களை அரசியல் ரீதியாக ஆதரிக்கவோ அதற்கு நியாயமான பங்களிப்பை வழங்கவோ இவர்களால் முடியாது. அதிகபட்சம், தமிழர்கள் என்ற அடிப்படையில் உணர்ச்சி பூர்வமாகக் கிடைக்கக் கூடிய ஆதாயத்திற்காக அவர்கள் ஆதரவளிக்கிறார்கள்.
இனியொரு: ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரம் தமிழக மத்தியில் உண்டா?
தன்னுரிமைக்கான, சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரம் தமிழக மக்கள் மத்தியில் பெரிய அளவில் இல்லை. இக்கருத்தானது ஈழத்தின் நிலைமைகளைப் புரிந்து கொள்வதிலிருந்து வந்த கருத்து அல்ல. இந்தியாவில், பிரிவினை வாதத்திற்கு எதிராக, பிரிந்து போவதற்கு எதிராக இங்கு செய்யப்பட்ட பிரச்சாரம் இருக்கிறது அல்லவா? அதிலிருந்து தான் இந்த மனநிலை உருவானது.
மக்களைப் பொறுத்தவரையில், ஈழப்பிரச்சனைக்கு அப்பால், தேர்தல் அரசியலின் வழியாக அரசியல் அற்றவர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு அரசியல் அற்றவர்களாக ஆக்கப்பட்டிருப்பதில் பல காரணிகள் பங்காற்றுகின்றன. அதில் முக்கியமாக, தேர்தல் அரசியலில் இவர்கள் பேசும் முறையானது, மக்கள் வாழ்க்கைக்கும் பேசும் அரசியலுக்கும் தொடர்பில்லை என்ற சூழலை உருவாக்கி நிலை நாட்டிவிட்டார்கள். “நீ எஸ்டேட் வாங்கியிருக்கிறாய், நான் வாங்கவில்லை”, “நீ மகனுக்குச் சொத்துச் சேர்த்திருக்கிறாய், நான் அப்படியில்லை” போன்ற மோதல்களின், பட்டிமன்றங்களின் பார்வையாளர்களாகத் தான் மக்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். அதனால் மக்களைப் பொறுத்த வரையில், பஞ்சாயத்துத் தேர்தல் நடந்தாலும், நாடாளுமன்றத் தேர்தல் நடந்தாலும், சட்டமன்றத் தேர்தல் நடந்தாலும், நீங்கள் உங்கள் வேட்பாளர்களிடம் எதிர்பார்ப்பது என்ன என்று கேட்டால், வீதி சற்று நன்றாக அமைய வேண்டும், மின்சாரம் கிடைக்கவேண்டும், குழாயில் தண்ணி வரவேண்டும் என்பார்கள்.இதனால் மக்கள் அரசியல் விவகாரங்களிலிருந்து அன்னியப்பட்டுப் போயிருக்கிறார்கள்.
தவிர, தொலைக்காட்சி, நுகர்வியல் போன்ற கூடுதல் விடயங்கள்.
இவை எல்லாவற்றையும் தவிர, ஈழப்பிரச்சனையை முன்வைத்து, அவர்களுடைய சுயநிர்ணய உரிமை நியாயமானது என்ற அரசியற் திசை நோக்கி மக்கள் அரசியல் மயப்படுத்தப்படவில்லை.
நடைபெற்ற பல போராட்டங்களை எடுத்துக்கொண்டால் கூட, அவர்களும் தமிழர்கள், நாங்களும் தமிழர்கள் என்ற புரிதலை முன்வைத்தே போராட்டங்களும் பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்பட்டன.
இந்த வகையில் இந்திய இராணுவத்தை அனுப்புதல் என்ற கோரிக்கை முன்வைக்கப்படும் போது கூட மக்கள் அதற்கு ஆதரிக்கும் போக்குகே காணப்பட்டது. இந்திய இராணுவத்தை அனுப்பி ஈழத்தமிழர்களைக் காப்பாற்று என்ற முழக்கத்தின் பின்னாலான அபாயத்தைக் கூடப் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு பலவீனமாக அரசியலே இங்கு காணப்பட்டது.
இந்திய இராணுவம் 87 இல் இலங்கைக்கு அனுப்பப்பட்டது தொடர்பாக தமிழ் நாட்டு மக்களின் மனோநிலை எவ்வாறு இருந்தது,?
எமது அமைப்பைப் பொறுத்தவரை இந்திய இராணுவம் (IPKF) அனுப்பப்படுவதற்கு முற்பகுதியிலிருந்தே புலிகளின் பாசிசப் போக்கை எதிர்த்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறோம். ஆனால் IPKF இற்கு எதிராக அவர்கள் போராடத் தொடங்கியபோது அப்போராட்டத்தை ஆதரித்து எமது அமைப்பும் (ம.க.இ.க) அது சார்ந்த அமைப்புக்களும் தான் பிரச்சாரங்கள் மேற்கொண்டன.
மற்றவர்களெல்லாம், அதிகபட்சம், அனியாயமாக இந்திய இராணுவச் சிப்பாய்கள் உயிரிழக்கிறார்கள் என்ற பிரச்சாரத்தையே அறிக்கைகளாக முன்வைத்தனர். இது ஒரு படையெடுப்பு, இது ஒரு ஆக்கிரமிப்பு என்ற வகையில் யாரும் கருத்துத் தெரிவிக்கவில்லை.
இனியொரு: ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதன் பின்னான நிலைமைகள் எவ்வாறு அமைந்தன?
ராஜீவ் காந்தி யின் கொலை தமிழக மக்கள் மத்தியில் ஈழப்பிரச்சனை குறித்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறமுடியது. ஆனால் அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, தினமணி, ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பார்ப்பன ஊடகங்கள், ஈழ எதிர்ப்புப் பிரச்சாரங்களை முன்னெடுத்தன. ராஜீவ் காந்த்க் கொலை என்பது, தமிழ், தமிழினம், திராவிடம் என்பவற்றிற்கு எதிரான ஒரு மூர்க்கமான பிரச்சார நடவடிக்கையைக் கட்டவிழ்த்துவிடுவதற்கான ஒரு வாய்ப்பை அவர்களுக்கு வழங்கியது.
பயங்கரவாதம் பிரிவினைவாதம் எனக் கடுமையான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அடக்குமுறை கடுமையாக ஏவிவிடப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கணிசமான அளவிற்கு மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டார்கள்.
நாங்கள் மட்டும்தான் ராஜீவ் காந்தியின் கொலைக்காக் கண்ணீர்வடிக்க வேண்டியதில்லை. அவரது ஆட்சியில் ஈழ மக்களுக்குத் துரோகமிழைக்கப் பட்டிருக்கிறது என்று பிரச்சாரம் மேற்கொண்டோம். போலிசாரின் கடுமையான அடக்குமுறை, அடிதடி, சிறைப்பிடிப்பு என்பவற்றிக்கு மத்தியில் நாம் இவ்வாறான ஈழ ஆதரவுப் பிரச்சாரங்களை மேற்கொண்ட போது, புலிகளின் தலைவர்களில் ஒருவரான கிட்டு இந்தக் கொலையை ம.க.இ.க கூடச் செய்திருக்கலாம் என எம்மைக் காட்டிக்கொடுக்கும் வகையில் அறிக்கை விடுத்திருந்தார்.
இனியொரு: எந்த அரசியல் கட்சிகள் இவ்வாறான ஈழத்தமிழ் எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்தன?
அதில் ஜெயலலிதாவின் பாத்திரம் மிக மிக முக்கியமானது. அவரின் நடவடிக்கைகள் காங்கிரசை விஞ்சியதாக இருந்தது. அதற்குப் பின்னர் ஒரு நெடிய இடைவெளி இருந்தது. அதன் பின்னர் தமிழ் நாட்டிலிருந்து, இதன் பின்னர் ஈழப் போராட்டம் தொடர்பாகப் பேசுபவர்கள் எழுதுபவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். ஜெயலலிதாவின் அடக்கு முறை கருணாநிதியின் தி.மு.க கட்சிக்கு எதிராகவும் ஏவிவிடப்பட்டது. பல உறுப்பினர்கள் தாக்கப்பட்டார்கள். கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார்கள். ஆனால் இந்த அடக்கு முறைகளுக்கு எதிரான எதிர் வினை போர்க்குணாம்சத்தோடு ம.க.இ.க வின் தரப்பிலிருந்து மட்டுமே முன்னெடுக்கப்பட்டது.
இதன் பின்னர் கிளினொச்சி வீழந்த பின்னரும் கூட இங்குள்ள தேர்தல் கட்சிகள், அங்கே எதுவுமே நடக்கவில்லை, இராணுவத்தினரை உள்ளே இழுத்து புலிகள் நசுக்கி விடுவார்கள் என்றே பேசிவந்தனர்.
இனியொரு: தமிழகம் குறித புலிகளின் அரசியல் தமிழ் நாட்டில் எவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்திற்று?
புலிகள் யாருடை அரசியலை, ஆதரவை தமிழ் நாட்டில் விரும்பினார்களோ, கோரினார்களோ அவர்களெல்லாம் ஆளும்வர்க்கக் கட்சிகளாக அல்லது முழு நிறைவான சந்தர்ப்பவாதிகளாகவோ தான் இருந்தார்கள். அவர்கள் தங்களது சந்தர்பவாத அரசியலுக்கு உட்பட்ட அளவில் தான் இதில் பாத்திரமாற்றியிருக்கிறார்கள், ஆற்ற முடியும்.
ஒரு நல்ல உதாரணம், யாழ் கோட்டை புலிகளால் சுற்றி வளைக்கப்பட்ட போது, பாரதீய ஜனதா வின் ஆட்சி இருந்தது. அப்போது, பா.ம.க, தி.மு,க, ம.தி.மு.க ஆகிய அனைவருமே மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார்கள்.
அப்போது அந்த முற்றுகையைப் புலிகள் கைவிட வேண்டும் என்றும், இந்திய அரசு தலையிட்டு அதைத் தடுக்கவேண்டும் என்று இலங்கை அரசு இந்திய அரசைக் கோருகிறது. புத்த பிக்குகள் உட்பட பல இலங்கை அரசு சார்ந்தவர்கள் இந்தியாவிற்கு வருகிறார்கள்.
இங்கு வந்து இந்திய இராணுவத்தைப் புலிகளுக்கு எதிராக அனுப்புமாறு கோருகிறார்கள். அப்போது கருணாநிதி யூகோஸ்லாவியா போன்ற ஒரு தீர்வை முன்வைக்கலாம் எனக் கூறுகிறார். அதைப் வாஜ்பாய் கடுமையாகக் கண்டிக்கிறார். அப்போது மாறன் பின்வாங்கி அது கருணாநிதியின் தனிப்பட்ட கருத்து என்கிறார். கருணாநிதி மௌனம் சாதிக்கிறார். தனி நாடு ஒருபோதும் சாத்தியமில்லை என்றும் முற்றுகையை விலக்கிக் கொள்ளச் சொல்லியும் இந்திய அரசு புலிகளை மிரட்டுகிறது. அந்தத் தருணத்தில் புலிகளின் ஆதரவாளர்களாகச் சொல்லிக் கொண்டிருந்த நெடுமாறனின் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும் இம்மிரட்டலை ஒரு மிகப்பெரிய வெற்றியாகச் சொல்லுகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் சிங்களப் பேரினவாத அரசிற்கு ஆதரவாக, தமிழ் மக்களின் உரிமைக்கு எதிராக இந்திய அரசு தலையிடுகிறது என்ற அரசியல் ரீதியான விமர்சனத்தைக்கூட இவர்கள் முன்வைக்கவில்லை.
இப்படிப்பட்ட மண்குதிரைகள் மீது தான் புலிகள் சவாரி செய்தார்கள். இவ்வான முழுச் சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளை நம்பித்தான் தமிழ் நாட்டில் தமது ஆதரவுத் தளத்தை நெறிப்படுத்தினார்கள்.
இந்தமாதிரியான சக்திகள் அவர்களின் சொந்த நலன்களிற்கு ஏற்றவாறே தமது ஈழ அரசியலை நகர்த்திச் சென்றனர்.
83 இல் இனப்படுகொலை நடந்த போது தமிழ் நாடே ஸ்தம்பித்துப்போனது. ஆனால், இந்தக் காரணிகள் எல்லாம் சேர்ந்தே 2009 இல் கொத்துக் கொத்தாக மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது எதிர்ப்பார்த்தளவில் எதுவும் நடக்கவில்லை.
-பிரபாகரன் இன்னும் உயிருடன் வாழ்கிறார் என்று தமிழ்நாட்டின் சந்த்தர்ப்பவாதக் கட்சிகள் தொடர் பிரச்சாரம் செய்துவரும் நிலையில் இந்த நேர்காணல் மீள் பதிவாதல் பொருத்தமானது என எண்ணுகிறோம்-
மக்கள் கலை இலக்கியக் கழகம் தமிழ் நாட்டின் வாக்கு அரசியலுக்கு அப்பாற்பட்ட அரசியல் இயக்கமாகும். ஈழப் படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தமிழ் நாட்டின் ஆட்சி அதிகாரம் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களைத் திட்டமிட்டுச் சீகுலைத்தது. தமது அணிசேர்க்கையினூடாக சந்தர்ப்பவாதக் கட்சிகள் இப் பிரச்சனையைக் கைவிட்டு அரசியல் வியாபாரப் பேரம் பேசின. இந்த நிலையில் மக்களை நம்பியிருந்த வாக்கு அரசியலுக்கு உட்படாத இடதுசாரிக் குழுக்களின் போராட்டங்கள் மட்டுமே சரணடைவுகளுக்கும் விட்டுக்கொடுப்புகளையும் மீறி நடைபெற்றன. இவற்றுள் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பங்கு குறித்துக் காட்டத்தக்கது.
கால நிலைக் கேற்ப விலங்குகள் கூட தம்மை தயார் செய்கின்றன ஆனால் வெள்ளம் தலைக்கு மேல் வந்ததுக்குப் பிறகுதான் நாம் வரம்பை உயர்த்தவில்லை எனக் கவலைப்பட்டோம்.அய்யா,அம்மா, தங்கைச்சி என பிச்சை எடுப்போரை யாரும் திரும்பிப்பார்ப்பதில்லை.புலிகள் அடிப்படையிலேயே தவறூகள் செய்துள்ளனர்.இந்த தவறூகளே புலிகளூக்கு எதிராகத்திரும்பின.
சேரமானின் கைகள் அனைத்துத் தவறுகளுக்கும் மற்றவர்களையே சுட்டிக்காட்டுகின்றது.
சுட்டும் விரலால் எதிரியைக் காட்டிக்குற்றம் கூறுகையில் மற்றும் மூன்று விரல்களும் உந்தன் நெஞ்சினைக் காட்டுமடா கவியரசரின் பாடலை அவருக்காராவது நினைவூட்டுதல் நன்று
கருணாநிதிக்கு தன் இரத்த பந்தங்கள்தான் தமிழி(தன்னி)னம்.ஒரு மன்னன் தன் ஆட்சியைக் காப்பாற்ற ஓர் ஊரையே அழிக்கலாம் தவறில்லை என்ற சாணக்கியரின் அரசியலைக்கற்ற கருணாநிதி தமிழீழத்தையே அழித்து சாதனை படைத்திருக்கிறார்.’எற்றிற்குரியர் கயவர் ஒன்று உற்றக்கால் தம்மையே விற்றர்க்குரியர்’-என்கிறார் திருவள்ளுவர்.இந்தக் கயவர் கருணாநிதி தன்னை பெரும் பணத்துக்காக பதவிக்காக தன்னை காங்கிரசிடம் விற்றபிறகுதான் ஈழத்தின் இறுதிப்போர்நடந்த்து.புலிகள் இதனை நன்குவிளங்கிக்கொள்ளாமல் இருக்க வாய்ப்பே இல்லை.ஐயகோ இரவில் தூக்கமின்றி ஈழத்துத் தோழர்களின் நிலைஎண்ணி தமிழகத்தில் கையறுநிலையில் வாடியும் எரிமலையாய் குமுறியபடியும் இருப்போர் இலட்சக்கணக்கில் என்பது கருணாநிதி அறிவார்.அவற்றை அடக்கும் கலையும் அவருக்கு அத்துப்படி.அண்ணா,எம் சி.ஆர்,கருணாநிதி போன்றோர் பெரியாரின் அரசியலைக்கூடப்படிக்க விடாமல் செய்துவிட்டார்கள்.தோழர்களே தமிழகத்தில் நல்ல தன்னலமற்ற தலைவன் இருந்திருந்தால் முத்துக்குமாரின் பொன்னுடல் ஏந்தியே ஈழ சொந்தங்களை காப்பாற்றியிருக்கலாம்.எல்லாத்திருடர்களும் இணைந்து தமிழகத்தமிழர்களுக்குத் ஈழப்படுகொலையை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் என்ற மீளாப் பழியைத் தந்துவிட்னர்.இனி மீள வழி ராசபக்சேவை போர்குற்றவாளியாக்கி ஈழம் விடுதலைபெற தமிழகம் துணைநிற்பதே.
உடன்பிறப்பே என்பதுதான் கலைஞ்ரின் குரல் ஆக இரத்த பந்தங்கலில் நீங்கலும் ஒருவர்.
தவச்செல்வன் says:10-04-2011 at 5:54 pmஊடக தந்திரிகளின் திருட்டுமுகம் – மின்னஞ்சல் ஆள் மாறாட்ட திருட்டு
குற்றம்1: தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அதிகாரபூர்வ அரசியல் பொறுப்பாளரின் மின்னஞ்சல் திருட்டு
குற்றம்2: விடுதலைப்புலிகள் இயக்கத்தின் இரகசிய ஆவணங்களை திருடி ஊடகங்களில் விற்றமை
குற்றம்3: விடுதலைப்புலிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இடைத்தரகர்களாக இருந்தவர்களை அம்பலப்படுத்தியது
குற்றம்4: இறந்துபோன அரசியல்பொறுப்பாளருக்கு நம்பிக்கைத்துரோகம்
இந்த மின்னஞ்சல்களைத் திருடி விற்றது – மலேசியாவில் உள்ள கஸ்ரோவின் கீழ் செயற்பட்ட நந்தகோபன் எனதெரிகிறது.
இந்த வகையான நேர்மையற்ற ஊடகத் திருட்டுக்கு தமிழ் நெற் ஜெயாவும் சேரமான் என்ற பெயரில் உடந்தையாக செயற்பட்டுவருகிறார்.
இப்போது மலேசியாவில் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் இருக்கும் நந்தகோபனை மிரட்டி – பணம் கொடுத்து – மின்னஞ்சல்களை ஜெயச்சந்திரன் கோபிநாத் எனப்படும் சேரமான் வாங்கி விட்டார் என்பதை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.
தவச்செல்வம்
யார் யாற்றையாவது திருடட்டும் நீங்கள் தமிழரின் கோவணத்தையும் திருடி மிகுதியை சிங்களவர்களும் திருடவைத்து போய்விட்டீர்கள். இருக்க சேரமானின் கட்டுரை தமிழகத்தின் மாயமான்களின் முகத்தை உரித்து காட்டிவிட்டது. மிக பொருத்தமான பேட்டி ஒன்றையும் இணைத்து வெளியிட்ட இனிஒருவுக்கு வாழ்த்துக்கள்.
மாயமான் எனத்தெரிந்தும் மயங்கியது நாம்தானே ராகவன்?
ஆமாம் 1.76இலகரங்களில் எல்லா உடன்பறப்புக்களுக்கும் பங்குஉண்டு
ஆம் மாறன் ஈழவிடுதலைப் போராட்டத்தை தள நிலைமைகளிலும் கள நிலைமைகளிலும் நம்பிக்கை வையாது, பின்தள நிலைமைகளில் நம்பிக்கை வைத்துவிட்டோம். வெறும் உணர்வுகளால் கட்டுண்டு வளர்ந்த நாம் மாயமான்களின் சுயநலத்தில் மயங்கி விட்டோம்.
சரி கருணா நிதி உதவில்லை வேறு யார் முதல்வர் ஆக இருந்திருந்தால் உதவி இருப்பார்கள்? செயலலிதா அம்மயையாரா? விடுதலைப்புலிகளை கைது செய்து தூக்கில் இட வேண்டும் சட்ட அ வையில் தீர்மானம் போட்ட அம்மையாரா? சீமான் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டாரா அவரா? கோவை ராமகிருட்டிணன் கோவை நகர் வீதியெல்லாம் புரண்டு வோட்டுக் கேட்டபின்ன்னும் அவர் கைதைப் ப்ற்றி ஒரு வார்த்தையும் சொல்லாத அம்மையாரா? வைக் கோ இருந்தால் செய்திருப்ப்பாரா? ஈழத்திற்கு கிழிப்பது இருக்கட்டும் அதற்கு முன்பே போராடத்தொடங்கிய காசுமீரத்திற்கு கேட்பாரா? நகாலந்திற்கு கேட்பாரா?
எந்த தமிழக முதல்வரும் நடுவண் அரசின் ஈழக் கொள்கைக்கு மர்றாக ஈழப்போரட்டத்தை ஆதரித்துவிடவில்லை எம்ஜிஆர் ராசீவ் காந்தியின் பொம்மையாகவே செயல் பட்டார்.
ராசிவ் காந்தி திம்பு மா நாட்டு தீர்மானத்தை விடுதலைப் புலிகளை ஏற்றுக் கொள்ளச் செய்யுங்கள் என்று கட்டளை இட்டார் அதை தலை மேற் கோன்டு புலிகளிகளிடம் “பேசமல் ராசிவ் காந்தி சொல்வதை ஏற்றுகொளுங்கள் ” என்று கூறிவிட்டு மருத்துவமனைக்கு சென்றுவிட்டர் இது தான் அவர் ஈழப் போராட்டாத்தில் கடைசியாக மேற்கொண்ட செய்கை
இது ஈழதமிழருக்கு ஆதரவான செய்தி என்று நம்பினல் நீங்கள் அவரைக் கொணடாடுங்கள்
கருணானிதிக்கு நன்றி, இந்த புலிகலும் தேசிக்காக்ய் தலைவரும் செத்த பின்பு தான் நாஙகல நிம்மதியாக இருக்கிறொம், அவர்களை ஓலிக்க செய்த உதவிக்குநன்றி
நிம்மதியாகததான் நாங்கள் எல்லோரும் இருக்கிறோம் ஆனால் பழியை கருணாநிதி மீது போட்டு நாங்கள் தப்பித்தால் எப்படி? புலியை முடித்தது நாங்கள் தான் கருணாநிதி அல்ல.கடைசியில் அவரால்தான் என்ன செய்ய முடியும்.உங்களூக்கு எத்தனை முற சொன்னாலும் செவிட்டு மிசினை மாட்டி தலையைத் தலையை ஆட்டித் திரியும் கறூவல் போல ஒண்டும் விளங்க மாட்டேன் எண்டுது.இந்த புது வருசத்தில்யாவது உந்த செவிட்டு மிசினை மாத்துங்கோ வீரன்.
thanks Mr Thamilmaran
புலி எத்தனை பேரைநம்பவைத்து கலுத்து அறுத்திருக்கிற்து, அதுதான் கடவுலின் கிருபையால் புலியின் வாலும் அறுக்கப்பட்டது
கொ—–யுடன் சேர்த்து
அமிர்தலிஙம் வீட்டில் ரோல்ஸ் சாப்பிட்டு விட்டு அவரை சுட்டவர்கள், அது தான் தலை கோவனம் கட்ட கடவுள் வலி விட்டாடர், எனக்குநல்ல சந்தோசம்
T நெட் ஜெயா அண்ணன் இப்படி வால்வதை விட 4 கக்கூசு கலுவி பிலைக்கலாம்
இவர்க்ளுக்கு வெடகம் மானம் ஏதும் இல்லையா, பிரேமடாசவுடன் சேர்ந்த்போது அண்னணன் தம்பி சன்டையில் ஏன் இந்தியர்கள் தலையிடுகிறார்கள் என்றர்கள், பின்பு ஏன் முல்லிவாய்க்கலில் இந்தியாவும் க்ருனானிதியும் உதவ வேன்டும்
எனினும் இதன் பின்னரான நாட்களில் இந்திய அரசின் ஆயுதக் களைவு-சரணடைவு திட்டத்திற்கான தமது ஆட்சேபனையை மிகவும் பண்பாகவும், இராஜதந்திரிமான முறையிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தார்கள். புலி ஆயுத போராட்டதில் தான் நம்பிக்கை கொண்டிருந்த்து அதன் விளைவு அலிவு தான்
எனினும் இதன் பின்னரான நாட்களில் இந்திய அரசின் ஆயுதக் களைவு-சரணடைவு திட்டத்திற்கான தமது ஆட்சேபனையை மிகவும் பண்பாகவும், இராஜதந்திரிமான முறையிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தார்கள்.. பண்பும் இராசதந்திரமும் புலிக்கு தெரியுமா……சரணடய விருப்பம் இல்லாவிட்டால் சண்டையிட்டு சாகத்தானே வேன்டும், இவர்க்ளுக்கு வெடகம் மானம் ஏதும் இல்லையா, பிரேமடாசவுடன் சேர்ந்த்போது அண்னணன் தம்பி சன்டையில் ஏன் இந்தியர்கள் தலையிடுகிறார்கள் என்றர்கள், பின்பு ஏன் முல்லிவாய்க்கலில் இந்தியாவும் க்ருனானிதியும் உதவ வேன்டும்,
வீரன் உங்களுக்கு சலக்கடுப்பு எண்டல் நிறைய தண்ணி குடியுங்கோ சரியாகும் அதை விட்டிட்டு ஏன் இங்கை வந்து சொட்டு சொட்டா விடுறியள். நாங்கள் வேள்விக்கு வளர்த்த ஆடு இல்லை இந்தியா நினச்ச நேரம் வெட்ட…
சரணடய விருப்பம் இல்லாவிட்டால் சண்டையிட்டு சாகத்தானே வேன்டும், இவர்க்ளுக்கு வெடகம் மானம் ஏதும் இல்லையா, பிரேமடாசவுடன் சேர்ந்த்போது அண்னணன் தம்பி சன்டையில் ஏன் இந்தியர்கள் தலையிடுகிறார்கள் என்றர்கள், பின்பு ஏன் முல்லிவாய்க்கலில் இந்தியாவும் க்ருனானிதியும் உதவ வேன்டும்,
கிறுக்கன்உங்களுக்கு பொருத்தமான பெயர், உங்கல் தலைவருக்கும் அது பொறுந்தும்