பெண்கள் உரிமைகள் பாதுகாப்பு, பாலியல் வன்கொடுமைகள் எதிர்ப்பு, புங்குடு தீவு மாணவி வித்தியாவின் வன்புணர்வுப் படுகொலை ஆகிய விடயங்களை முன் நிறுத்தி பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பு நேற்றைய தினம் 23.05.2015 யாழ் நகரில் கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்த அழைப்பு விடுத்திருந்தது. எனினும் நீதிமன்றம் யாழ் நகரில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்துவதற்குத் தடை விதித்ததைத் தொடர்ந்து நகரில் கூடிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் போராட்த்தின் நியாயத்தன்மையினை பொலிஸாருக்கும் ஊடகங்களுக்கும் தெளிவு படுத்தி கொக்குவிலில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கிய பேரவையின் வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர்.
வித்தியாவின் படுகொலை தொடர்பாக விசேட நீதிக்குழு அமைக்கப்பட்டு அதனூடாக விசாரணைகள் துரிதப்படுத்தப் படுவதுடன் உரிய முறையில் குற்றம் நிருபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டுமென பிரதானமாக வலியுறுத்தப்பட்டது. மேற்படி போராட்டத்திற்கு இரா. யோகமலர் தலைமை தாங்கியதுடன் இப் போராட்டத்திற்கு வெகுஜன அமைப்புக்கள் பலவும் ஆதரவு வழங்கியது. குறிப்பாக, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி, கலைமதி மாதர் சங்கம்(புத்தூர்), வட மாகாண பெண்கள் சமாசம், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி என்பன ஆதரவு நல்கியதுடன் பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பினை பிரதிநிதித்துவப் படுத்தி நாட்டின பல பாகங்களிலிருந்தும் கலந்து கொண்டனர். மாணவி வித்தியாவின் படுகொலையைப் பயன்படுத்தி சில சமூக விரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமையும்,மக்கள் தவறான முறையில் வழிநடத்தப்படுவதையும் இவ் அமைப்பு கண்டிப்பதுடன், பெண்கள் தாமாகவே தமக்கான நீதியைக் கோரி முன்வருதலானது சிறந்த பயனைத் தரும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.