இந்திய ஒன்றிய அரசு தடுப்பூசிகளை லாபம் வைத்து மாநில அரசுகளுக்கு விற்பனை செய்து வரும் நிலையில் தடுப்பூசியை முழுமையாக இலவசமாக வழங்க வேண்டும் என கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் இந்தியாவில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் புதிதாக இன்று (02-06-2021) அன்று மட்டும் 1,32,788 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,83,07,832 ஆக அதிகரித்துள்ளது.
தடுப்பூசிகள் மட்டுமே கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்தும் என்ற நிலையில் நாடு முழுவதும் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது. ஒன்றிய அரசு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்த நிலையில் இந்திய மக்களுக்கு அது கிடைப்பதில் தடுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் ஒரு தீர்மானத்தை முன் வைத்தார். அதில் இந்திய ஒன்றிய அரசு அனைவருக்கும் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் வலியுறுத்தினார்.மேலும் மத்திய அரசிடம் தடுப்பூசிகளை சரியான நேரத்தில் விநியோகிக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
முன்னதாக இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதேபோன்று மற்ற மாநிலங்களும் மத்திய அரசு இலவச தடுப்பூசி தர வலியுறுத்துமாறு கேரள முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.