தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கும் தனக்கும் தொடர்பில்லை என இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வெளியிட்ட அறிக்கைக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சீமான் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், நாகை மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், இலங்கையில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தத்தின் தூண்டுதலின் பேரிலேயே நடத்தப்பட்டுள்ளது என்கிற தகவல் கிடைத்துள்ளது.
தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி வந்து மீன் பிடிப்பது இலங்கைத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக உள்ளது என்ற இலங்கை அரசின் சூழ்ச்சித் திட்டத்திற்கு உதவ, தனது ஆட்களை அனுப்பி தமிழக மீனவர்களைத் தாக்கியுள்ளார் என்பதே உண்மை என்று கூறியிருந்தார்.
இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துக்களில் எவ்விதமான உண்மையும் இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் குற்றச்சாற்றுக்களை தாம் முற்றிலும் மறுப்பதாகவும், இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருப்பதாகக் கொழும்பிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.