ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் ஆசீர்வாதத்துடன், அவருடைய பாராளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்டர் அலென்டினின் வழிகாட்டலிலேயே யாழ். நகரில் சட்டவிரோதமாக புதிய கடைகள் அமைக்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அமைச்சிரின் அடாத்தான இத்தகைய நடவடிக்கைகளினால் எதுவும் செய்ய முடியாதென்று யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைவரும், யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான சு.நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ். ஊடக அமையத்தில் இன்று காலை ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நிஷாந்தன் அங்கு மேலும் தெரிவிக்கையில், யாழ். நவீன சந்தைக் கடைத் தொகுதியில் புதிய கடைகள் இரவோடு இரவாக அமைக்கப்பட்டு வந்தது. இத்தகைய கடைகள் மாநகர சபையின் அனுமதியில்லாமல் அமைக்கப்படுவதால் வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.
இதனையடுத்து இதனை நிறுத்துமாறு அறிவுறுத்தி மாநகர ஆணையாளரினால் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. இருப்பினும் தொடர்ந்தும் கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றது. இதனை யாரும் தடுக்க முடியாதென்று கடைகளை அமைக்கின்றவர்கள் கூறி வருகின்றனர்.
அதாவது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி பாராளுமன்ற உறுப்பினரே இந்த விடயத்தில் நேரடியாக தலையிட்டு தமக்கு வேண்டிய நபர்கள் மூவருக்கு இதனை அமைத்துக் கொடுக்கின்றனர். இதனால் மாநகர சபையும் தற்போது எதுவும் செய்யமுடியாமல் இருக்கின்றது.
இந்நிலையில், மாநகர சபையின் இத்தகைய செயற்பாட்டினால் நகர வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், மாநகர நிர்வாகத்திற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் நிஷாந்தன் மேலும் தெரிவித்துள்ளார்