15.08.2008.
ஜோர்ஜியாவுக்கு அவசர உதவிப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை அமெரிக்க இராணுவ விமானங்கள் ஆரம்பித்துள்ளன.
நேற்று முன்தினம் மாலை திபிலிசியிலுள்ள விமான நிலையத்தில் தரையிறங்கிய இவ் விமானம் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கான அவசர மருந்துப் பொருட்கள் மற்றும் படுக்கை விரிப்புக்கள் என்பவற்றைக் காவி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மனிதாபிமான உதவிகளை ரஷ்யா ஜோர்ஜியாவுக்குள் அனுமதிக்குமென தாம் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் விமானப் படை விமானங்கள் ஜோர்ஜியாவை சென்றடைந்துள்ளன. மனிதாபிமான உதவிப் பொருட்களை ஜோர்ஜிய துறைமுகங்களுக்கு எடுத்துச் செல்வதற்காக ரஷ்ய படையினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் கருங்கடல் பகுதிக்கு அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் விரைகின்றன. அனைத்து விதமான மனிதாபிமான உதவிகள் தொடர்பில் ரஷ்யா அளித்திருக்கும் உறுதிமொழிக்கு அந்நாடு மதிப்பளிக்குமென எதிர்பார்க்கிறோம் என புஷ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜோர்ஜியா மற்றும் ரஷ்யாவுக்கான விஜயத்தை மேற்கொள்ள முன்னர் பிரான்ஸில் அந்நாட்டு ஜனாதிபதி நிகொலஸ் சார்கோஸியை சந்தித்து கலந்துரையாடியுள்ள அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலீசா ரைஸ் ஜோர்ஜியாவிலுள்ள படைகளை வாபஸ் பெறாமல் யுத்த நிறுத்தத்தை மதித்து ரஷ்யா நடக்காதுவிடின் தனிமைப்படுத்தப்படும் அபாயத்தை ரஷ்யா எதிர்கொள்ள நேரிடுமென எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், ஜோர்ஜியா துறைமுகங்களையும் விமான நிலையங்களையும் அமெரிக்க இராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவுள்ளதாக திபிலிசியில் ஜோர்ஜிய ஜனாதிபதி மிக்கெய்ல் சாகாஸ்விலி தெரிவித்த கருத்தை பென்டகன் உடனடியாக நிராகரித்துள்ளது.
இந்நிலையில் ரைஸின் விஜயத்திற்கு முன்பாக பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட் கேட்ஸ் மற்றும் ரைஸ் ஆகியோருடன் வெள்ளைமாளிகையில் ஆலோசனை நடத்திய புஷ்;
ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோர்ஜிய அரசின் பக்கம் அமெரிக்கா இருக்கும். ஜோர்ஜியாவின் பிராந்திய ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். ஜோர்ஜியாவுக்குள் நுழைந்த அனைத்து ரஷ்யப் படைகளும் வாபஸ் பெறப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுடனான மோதலில் ஜோர்ஜியாவுக்கு தனது பலத்த ஆதரவை அமெரிக்கா வெளிப்படுத்த ஆரம்பித்திருப்பதாக நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜோர்ஜியா மீதான நடவடிக்கையால் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடுமென அமெரிக்கா எச்சரித்திருந்த நிலையில் ரஷ்யாவுடனான இராணுவ கூட்டுப் பயிற்சியை அமெரிக்கா இரத்து செய்திருப்பதன் மூலம் ரஷ்யாவுக்கெதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா ஆரம்பித்திருப்பதாகவும் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வளவு காலமும் விலைபோகாமல் இருந்த ஆயுதங்களுக்கு
நல்ல விலை போகக்கூடிய காலங்கள் நெருங்குகின்றன.
உடைத்து நொருக்கிப்போட்டு உழைப்பு தேட தயார் ஆகிறது அமெரிக்கா
இதில் ரசியாவும் விதிவிலக்கல்ல ஐரோப்பாவும் இதில் நடுநிலமை வகிக்க முடியாது.
ஐரோப்பா தொழிலாளர்வர்கம் தனது நீண்டநாள் நித்திரை-சோம்பலை முறிவெடுத்து
விழித்துக்கொள்ளும் காலமிது.