10.08.2008.
ரஷ்யா தனது நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதாக ஜோர்ஜியா ஜனாதிபதி மிக்கெய்ல் சாகாஸ்வில்லி தெரிவித்துள்ள அதேசமயம், ஜோர்ஜியாவிலிருந்து பிரிந்துள்ள பிராந்தியமான தென் ஒசீசியாவிலிருந்து ஜோர்ஜியப் படைகளை தான் வெளியேற்றியுள்ளதாகவும் தென் ஒசீசியாவுடன் சமாதானத்தை ஏற்றுக் கொள்ளுமாறு
நிர்ப்பந்திக்கவே தான் படைநடவடிக்கையை மேற்கொண்டதாகவும் நேற்று சனிக்கிழமை ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்ய யுத்த தாங்கிகளும் போர் விமானங்களும் தனது நாட்டின் மீது தாக்குதல்களை தொடுத்துள்ளதாகவும் தென் ஒசீசியாவில் முழுஅளவிலான மோதலை ஏற்படுத்துவதற்கான பதற்ற நிலையை உருவாக்க பொது மக்களை இலக்கு வைத்து ரஷ்யா தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் ஜோர்ஜிய ஜனாதிபதி மிக்கெய்ல் சாகாஸ் வில்லி தெரிவித்தார்.
?முழுநாளும் பலயுத்த விமானங்கள் பொதுமக்களின் இலக்குகள் மீது குண்டு வீச்சுக்களை நடத்தியதாகவும் இழப்பு விபரங்களை நாடளாவியரீதியில் திரட்டி வருவதாகவும் அவர் சி.என்.என்.செய்தி சேவைக்கு தெரிவித்திருக்கிறார்.
ஆயிரக்கணக்கான மக்கள் தெற்கு ஒசீசியாவிலிருந்து ரஷ்யாவின் பிராந்தியமான வடக்கு ஒசீசியா அலானியா பகுதிக்கு இடம் பெயர்ந்து செல்வதாக ஐ.நா.வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
ரஷ்யாவும் ஜோர்ஜியாவும் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனவா என்று கேட்கப்பட்டபோது ?ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக எனது நாடு சுய பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. ரஷ்யப்படைகள் ஜோர்ஜியாவுக்குள் நுழைந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
சுமார் 150 ரஷ்ய கவசவாகனங்கள் தெற்கு ஒசீசியாவுக்குள் நுழைந்துள்ளதாகவும் 2 ரஷ்ய விமானங்களை ஜோர்ஜியப் படையினர் சுட்டு வீழ்த்தியதாகவும் மிக்கெய்ல் கூறியுள்ளார்.
இதேவேளை தெற்கு ஒசீசியாவிலுள்ள கிராமங்களில் இன அழித்தொழிப்பு நடவடிக்கை இடம்பெறுவதாக ரஷ்ய வெளிநாட்டமைச்சர் சேர் கேஸ் லவ்ரொவ் குற்றம் சாட்டியிருக்கிறார்.
தெற்கு ஒசீசியாவிலுள்ள கிராமங்களில் பொலிஸார் இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தமக்கு செய்திகள் கிடைத்துள்ளதாகவும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் மக்கள் தமது உயிர்களை பாதுகாக்க முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை ரஷ்ய ஜனாதிபதியென்ற முறையில் ரஷ்யப்பிரஜைகள் எங்கிருந்தாலும் அவர்களைப் பாதுகாப்பது எனது கடமை அதற்குரிய நடவடிக்கைகளையே தற்போது நாம் மேற்கொண்டிருக்கிறோம் என்று ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத் வேதேவ் கூறியுள்ளார்.
1990 களின் முற்பகுதியில் இடம்பெற்ற போரில் இழந்த தென் ஒசீசியா மாகாணத்தை மீண்டும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஜோர்ஜியா முயன்று வருகிறது.
தெற்கு ஒசீசிய பிரிவினைவாதிகளுக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. இவர்கள் இன ரீதியில் ஜோர்ஜியர்களிடமிருந்து வேறுபட்டவர்கள் அவர்களுக்கு ரஷ்யக் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஜோர்ஜியாவுக்கு அமெரிக்கா தீவிரமாக ஆதரவுவழங்கி வருகிறது.
1990களின் முற்பகுதியில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியுடன் ஜோர்ஜியா தனிநாடானது.