ஈராக்கில் அபு கிரேப் சிறைச்சாலையில் அமெரிக்க இராணுவம் கைதிகளை மிருகங்கள் போன்று சித்திரவதை செய்யும் காட்சி உலகைக் குலுக்கியது. இதே போன்ற சித்திரவதைகள் ஜேர்மனியில் அகதிகள் தங்கவைக்கப்பட்டிருக்கும் விடுதிகளை நடைபெறுவதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. பல்தேசிய வியாபார நிறுவனங்கள் மக்களின் பணத்தைச் கொள்ளையடித்து குவித்துவைத்துள்ள நிலையில், அகதிகளாலும் வெளி நாட்டுக் குடியேற்றவாசிகளாலும் ஐரோப்பாவில் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கிறது என அரசுகளும் அரசியல் கட்சிகளும் பொய்ப்பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
அன்றாட வாழ்கை நடைமுறைகளிலிருந்து, அரசியல் அதிகாரம் வரைக்கும் நிறவாதம் இழையோடும் ஜேர்மனி போன்ற நாடுகளில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான பிரச்சாரம் காட்டுத் தீ போன்று பற்றிக்கொள்கிறது.
ஜேர்மனிய அகதிகள் முகாம் ஒன்றில் படம்பிடிக்கப்பட்ட வீடியோ ஒன்றை ஊடகவியலாளர் போலிசாருக்கும் பத்திரிகைகளும் வழங்கியதைத் தொடர்ந்து அகதிமுகம்களின் பாதுகாப்பு அதிகாரிகள் அகதிகளைச் சித்திரவதை செய்யுது வரும் செய்தி உலகிற்குத் தெரியவந்தது.
வாந்தியெடுக்கப்பட்ட படுக்கை ஒன்றில் அகதி ஒருவரைப் பலவந்தமாகப் படுக்கச் செய்வதையும் அவரை அதிகாரிகள் தாக்குவதையும் ஒரு வீடியோ காட்டுகிறது. மற்றொரு வீடியோவில், நிலத்தில் படுக்கவைக்கப்பட்ட அகதி ஒருவரின் முகத்தின் மேல் வெள்ளை ஜேர்மனி அதிகாரி கால் வைத்திருப்பதையும் மற்றொரு அதிகாரி அவரின் மேல் ஏறி நிற்பதையும் காணலாம்.
உலகம் முழுவதும் அகதிகள் விலங்குகள் போல நடத்தப்படுகின்றனர். அவுஸ்திரேலியா அகதிகளை முட்கம்பி முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறது. எதிர்காலத்தில் அவுஸ்திரேலியாவிற்கு வரும் அகதிகளை வியட்னாமை நோக்கி நாடுகடத்துவதற்கான ஒப்பந்தம் ஒன்று அவுஸ்திரேலிய-வியட்னாமிய அரசுகளிடையே நிறைவேற்றப்பட்டுள்ளது.
உலகில் ஒடுக்கப்பட்ட மக்கள் உலகத்தின் கொல்லைபுறங்களில் முடக்கப்பட்டு அழிக்கப்படுகின்ற நிலை தோன்றியுள்ளது. அகதிகளாக அன்னிய நாடுகளில் அழிந்து போவதைவிட சொந்த நாட்டில் மக்களை அணிதிரட்டிப் போராடுவதும் மக்கள் சார்ந்த அரசுகளை நிறுவிக்கொள்வதுமே இன்றை தேவை என அகதிகள் உணர ஆரம்பித்துள்ளனர்.