ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய, மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை தொடர்பாக எந்த கருத்துக்களை வெளியிடவில்லை. மனித உரிமை பேரவையின் பரிந்துரைகளை உறுப்பு நாடுகள் செயற்படுத்துவதை உறுதிப்படுத்தும் கட்டமைப்பு அவசியம் என பிள்ளை தெரிவித்துள்ளார்.
இதனிடையே , பேரவையில் பிரித்தானிய ராஜாங்க அமைச்சர் ஜெரோம் பிரவுண், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துமாறு, வெளிநாடுகள் இலங்கை கோருவது, நாட்டுக்கு உதவவும் ஒன்றிணைந்து செயற்படும் நல்லணத்தின் நோக்கமே என்பதை இலங்கை புரிந்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
மனித உரிமைகளை உறுதிப்படுத்த நாடுகள் தவறும் போது, மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை நிறுவனம் செயற்பட்டு, உதவுவது அவசியம் எனவும் அவர் கூறினார்.
இதே வேளை அமரிக்காவிற்கு எதிராக இலங்கையில் வெற்று ஆர்ப்பாட்டங்களுக்கு மக்களை அரசு தூண்டிவிட்டிருந்தது. பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் இலங்கைத் தீவின் மக்களைத் திசைதிருப்பும் வகையிலும் எழுச்சி கொள்ளும் மக்களை திசைதிருப்பும் வகையிலும் மகிந்த பாசிசம் ஆர்ப்பாட்டங்களை உருவாக்குகின்றது.
இதே வேளை அமரிக்காவின் கொலைவெறி அரசியலைப் புரிந்து கொள்ள மறுக்கும் புலம்பெயர் ஊடகங்கள் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் மகிந்த அரசு தண்டிக்கப்படப் போவதான விம்பத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். உலகில் போராடும் மக்களோடு எமது போராட்ட நியாயங்களையும் இணைத்துக் கொள்வதற்குத் தடையான அதிகாரம் சார்ந்த இக் கருத்துக்கள் அபாயகரமானவை.