இன்று 2.00 மணியளவில் சுவிஸ் தமிழர் ஒருங்கினைப்புக் குழுவால்(TCC) ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை அரசு தமிழ் இனத்தின் மீது நடத்திய இன அழிப்பிற்கு ஐக்கிய நாடுகள் சபை சுயாதீன விசாரணையை துரிதப்படுத்த வேண்டி புகையிரத நிலைய சந்தியிலிருந்து பல்லாயிரம் மக்கள் புடைசூழ பலரின் கரங்களில் பாலச்சந்திரன் படுகொலையை சித்தரிக்கும் பல வகை பதாதைகளை யும் புலிக்கொடியையும் தாங்கியவாறு தாங்கியவாறு உலகின் பல பாகங்களிலும் இருந்து வந்த மக்களின் பிரசன்னத்துடன் ஆரம்பமானது.
ஐரோப்பாவில் வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் இலங்கை அரசிற்கு எதிரான தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
கடந்த வருடம் கூட இதே போராட்டம் ஜெனிவாவில் நடைபெற்றது இந்த ஒருவருட இடைவெளிக்குள் ராஜபக்ச அரசு தனது பௌத்த சிங்கள மயமாக்கலை எந்தத்தடையுமின்றி நடத்தியுள்ளது. நிலப்பறிப்பு கேட்பாரற்று நடைபெறுகிறது. அளவிற்கு அதிகமாக இணைத்துக்கொள்ளப்பட்ட இராணுவம் வடகிழக்கில் குடும்பங்களோடு குடியேறி அச்சத்தின் மத்தியில் மக்களை முடக்கிவைத்திருக்கிறது. வடக்கிலும் கிழக்கிலும் போதைப் பொருட்களுக்கு சிறார்கள் அடிமையாக்கப்படுகின்றனர். இராணுவத்தில் பலவந்தமாக தமிழ்ப் பெண்கள் இணைக்கப்படுகின்றனர்.
தேசிய இனத்தின் தேசியத் தன்மை சிதைக்கப்படுகிறது. இனச்சுத்திகரிப்பு ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் கலந்துகொள்ளும் அனைத்து நாடுகளும் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்க ராஜபக்ச குடும்பத்தின் திட்டப்படியே நிறைவேறுகிறது.
அமரிக்கா தான் முன்மொழியப்போகும் தீர்மானத்தின் சாரம்சத்தை வெளியிட்டுள்ளது. கடந்த வருடத் தீர்மானத்தின் அதே பிரதி.
அடுத்தவருடம் அமரிக்கா தீர்மானத்தோடு படம்காட்ட முற்படும் போது, தமிழ் மக்களும் ஜெனிவாவை நோக்கிப் பயணமாவார்கள். அதே வேளை தமிழ்ப் பிரதேசங்களின் பெரும்பகுதி சூறையாடப்பட்டிருக்கும். இன்னும் சில வருடங்கள் சென்றபின்னர் கிழகில் இன்று தமிழ்ப் பேசும் மக்கள் சிறுபான்மையானதைப் போன்று வடக்கிலும் நிலைமை உருவாகியிருக்கும்.
அப்போதும் கூட புலம் பெயர் நாடுகளில் போராட்ட வடிவங்களில் மாற்றம் ஏற்பட்டிருக்காது.
இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தென்னாபிரிக்கா சுவிசர்லாந்தோடு இணைந்து செயற்படுகிறது. தனது சொந்த நாட்டில் இனப்படுகொலையை நடத்திய கையோடு இலங்கையில் தனது எஜமானர்களுக்காகத் தலையிட ஆரம்பித்துவிட்டது.
தென்னாபிரிக்காவில் நடந்த இனப்படுகொலைக்கு எதிரான கூட்டமும் ஆர்ப்பாட்டங்களும் கடந்த வருட இறுதியில் தென்னாபிரிக்க மக்களாலும் ஜனநாயக முற்போக்கு சக்திகளாலும் நடத்தப்பட்டது. அந்த நிகழ்வுகளில் இலங்கையின் இனப்படுகொலைக்கு எதிரான கருத்துக்கள் காரசாரமாக முன்வைக்கப்பட்டன. எதிர்ப்புப் போராட்டங்களை ஒழுங்கு செய்த அமைப்புக்களில் ஒன்றான பான் ஆபிரிக்கன் இயக்கம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக அறிக்கை வெளியிட்டிருந்தது. தமிழ்னெட் உட்பட எந்த இணையங்களும் அந்த அறிக்கையைப் பிரசுரிக்கக்கூட மறுத்துவிட்டன.
இன்று ஈழத்தமிழர்கள் சார்பாக ஜெனீவாவிலும் தென்னாபிரிக்காவிலும் அழுத்தம் வழங்கவல்ல போராட்ட அமைப்புக்களை நிராகரித்திருக்கிறோம் என்பது வெறுமனே ஒரு சிறிய உதாரணம் மட்டுமே.
மக்களின் உணர்வுகள் மதிக்கத்தக்கது. பெறுமதி மிக்கது. ஆனால் நாடுகளிடையேயான உறவுகள் அவர்களிடையேயான வியாபார அரசியல் உறவுகள் மட்டுமே. அமரிக்க அரசிற்கு தேவையானதை இலங்கை நிறைவேற்றினால் நாளையே ராஜபக்ச குடும்பத்தை இலங்கையில் ஜனநாயகக் குடும்பமாக்கிவிடுவார்கள். இந்த அதிகார வர்க்க அரசியலைப் புரிந்துகொண்டால் மட்டுமே இதுவரை நடைபெற்ற தோற்றுப்போன போராட்ட வழிமுறைகளிலிருந்து விடுவித்து மக்களின் உணர்வுகளை வெற்றிக்கான வழிகளில் நகர்த்தமுடியும்.
அமரிக்காவையும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தையும் நோக்கி மண்டியிடுவது எந்தப்பலனையும் தராது.
ஜெனீவாவில் ஒன்றுதிரண்ட தமிழர்கள் : நாளைய தேவை என்ன? ஏன் நாளைய தேவை? இன்றையதேவையே ஒரு தலைமை. ஒன்றுதிரண்ட தமிழர்களை வழிநடாத்துபவர்கள் ஒரு தலைமை தோன்றுவதற்கு வழிவிடுவார்களா???