ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மகிந்த சிந்தனை அரசாங்கத்தின் தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத ராணுவ ஒடுக்குமுறையினதும் யுத்த வெற்றி என்ற மமதையினதும் எதிர்விளைவேயாகும். இத்தீர்மானமும் அதன் மீதான விவாதங்களும் சர்வதேச அரங்கில் இலங்கை அரசாங்கத்திற்குத் தரக்குறைவையும் தலைகுனிவையும் ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை இலங்கை மீது தனது ஆதிக்கப்பிடியை ஐ.நா. மூலம் வலுப்படுத்திக் கொள்வதற்குக் காத்திருந்த அமெரிக்காவிற்கு ஜெனிவாத் தீர்மானம் தகுந்த சந்தர்ப்பத்தையும் வழங்கியுள்ளது. இவற்றுக்கான முழுப் பொறுப்பையும் ஜனாதிபதியும் அவரது தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமுமே ஏற்றுக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு புதிய-ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் ஜெனிவாத் தீர்மானம் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவ் அறிக்கையில், ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்படுவதற்கு அடிப்படையாக அமைந்திருந்தது தேசிய இனப் பிரச்சினையின் தீர்வின்மையும் அதன் காரணமான கொடிய யுத்த முன்னெடுப்புகளுமாகும். அதனாலேயே போர்க்குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றன. இன்று யுத்தம் முடிவுற்று மூன்று வருடங்கள் கடந்த பின்பும் அவற்றின் தொடர்ச்சியாக அரசியல் தீர்வு நிராகரிப்பும், ஜனநாயக மறுப்புகளும் மனித உரிமை மீறல்களும் இடம்பெற்று வருகின்றன. இச்சூழலிலேயே ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை மூலம் இலங்கை விடயத்தை ஐ.நா தனது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு வந்து மனித உரிமைகள் பேரவைக்குக் கையளித்தது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய அமெரிக்கா ஜெனிவாத் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியதன் மூலம் தனது ஆதிக்கப் பிடிக்குள் இலங்கையை இறுக்கிக் கொள்ள முனைந்து நிற்கின்றது. முன்பு நோர்வேயின் அனுசரணையுடனான சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பின்னால் இருந்து கொண்டு இலங்கை மீதான தனது ஆதிக்கத்தை வலுப்படுத்த அமெரிக்கா முயன்று அதில் வெற்றி பெற இயலவில்லை. ஆனால் இப்போது ஐ.நா.மூலம் தனது தலையீட்டை மீளக் கொண்டு வந்துள்ளது. இது இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்த்து மக்களிடையே நல்லெண்ணத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்தில் அல்ல. அல்லது தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுத்துக் கொடுக்கும் வழியிலும் அல்ல. கேந்திர முக்கியத்துவம் மிக்க இலங்கையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பூகோள ஆதிக்க நோக்கின் அடிப்படையிலானதேயாகும். நாடுகளின் மீது தலையீடுகளையும் ஊடுருவல்களையும் செய்வதற்கு அமெரிக்கா பின்பற்றி வந்த உள்நாட்டு முரண்பாடுகளைப் பயன்படுத்துவது என்பதன் அடிப்படையிலேயே ஜெனிவாத் தீர்மானத்தையும் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது. அதனைத் தடுத்து நிறுத்தி அமெரிக்காவின் உள்நோக்கத்தை முறியடிப்பதற்கு உள்ள ஒரே வழி தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வைத் தாமதமின்றிக் கொண்டு வருவதாகும். அதேபோன்று நாட்டில் மறுக்கப்படும் ஜனநாயக செயற்பாடுகளுக்கும் தொடரப்படும் மனித உரிமை மீறல்களுக்கும் உடன் முற்றுப் புள்ளி வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும். ஆனால் ஜனாதிபதியும் அவரது தலைமையிலான அரசாங்கமும் எந்தளவிற்கு தமது பேரினவாத ஒடுக்குமுறை நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வந்து ஆக்கபூர்வமானதும் தூரநோக்கிலுமான செயற்பாட்டிற்கு முன்வருவார்கள் என்பதே பிரச்சினையாகும்.
சி.கா.செந்திவேல்
பொதுச் செயலாளர்.
அப்படியே சீனாவிலும் தென் கொரியாவிலும் மனித உரிமை மீறல் பற்றி தோழர் செந்த்திவேல் ஒரு கண்டன அறிக்ககை விடுவாரா.
Veeran that is right. Korea is more important than Sri Lanka. Thanks to Dr. Jayantha Dhanapala (1938) who also served as the Coordinating Secretary of the Peace Secretariat like Dr. Rajiva Wijesinghe (1954) who has now gone to Geneva.