எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் மற்றுமொரு ஆதரவாளர் குருணாகல் வாரியப்பொல பிரதேசத்தில் வைத்து பொல்லுகளால் தாக்கி கொலைசெய்யப்பட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த தம்மிக்க ஹேரத் (வயது 33) என்ற இளைஞரே நேற்று திங்கட்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் வாரியபொல அம்பகடவர எனுமிடத்தில் வைத்து தாக்குதலுக்கு இலக்காகி ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டவராவார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணை நடவடிக்கைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக குறித்த பிரதேசத்தில் மேற்படி கொலை செய்யப்பட்டவரான தம்மிக்க ஹேரத் உட்பட மேலும் பல ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவ்விடத்திற்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த தலைக் கவசம் அணிந்திருந்த இனந் தெரியாத நபர்கள் இவர்கள் மீது சரமாரியாக தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதன்போது தம்மிக்க ஹேரத்தின் தலையிலும் பலமான தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து நிலத்தில் சரிந்த அவர் அவ்விடத்திலேயே பலியாகியுள்ளார். இதனையடுத்து சந்தேக நபர்கள் தப்பிச் சென்று விட்டதாவும் சம்பவம் தொடர்பில் வாரியபொல பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கமே பொறுப்பாளி இதேவேளை மேற்படி படுகொலைச் சம்பவத்துக்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுமே பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அரசியல் இலாபத்துக்காக மனித உயிர்களைப் பலியெடுக்க வேண்டாம் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த குருணாகல் பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் கூறுகையில்,
மனித உயிரின் பெறுமதி தெரியாத மிலேச்சத்தனமானதும் அநாகரிகமானதுமான அரசியலின் பின்னணியில் நடைபெறுகின்ற இத்தகைய செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
மேலும் எமது பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் வெற்றி வாய்ப்பும் மக்கள் சக்தியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாததாலும் அரசியல் ரீதியாக ஏற்படுகின்ற சவால்களுக்கு முகம் கொடுக்க முடியாதவர்களே இவ்வாறு தாக்குதல்களை நடத்தி மனித உயிர்களைப் பலியெடுக்கின்றனர்.
இந்த படுகொலைக்கும் இதுவரையிலான தாக்குதல்களுக்கும் நாம் ஆளும் கட்சியினரையே குற்றம் சாட்டுகிறோம். தோல்வி நெருங்கிக் கொண்டிருப்பதால் அதனைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் வன்முறைகளினூடாகவோ அல்லது வேறு எவ்வித்திலுமோ அதிகாரத்தை கைப்பற்றி விட வேண்டும் என்று நினைக்கின்றனர்.
அரசாங்கத்தின் இத்தகைய கீழ்மட்ட நடவடிக்கைகளை நாட்டு மக்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். அந்த அவதானமே எதிர்வரும் 26 ஆம் திகதி அவர்களுக்கு பாடம் புகட்டவிருக்கின்றது.
எம் மீது எத்தகைய தாக்குதல்களை நடத்தினாலும் எமது உயிர்களைப் பறித்தெடுத்தெடுத்தாலும் கூட அது குறித்து நாம் அச்சமடையவோ கலவரமடையவோ மாட்டோம். நாம் ஜனநாயகத்தையும் இன ஐக்கியத்தையும் சகலருக்குமான சக வாழ்வையும் நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கின்றோம். ஜனநாயக ரீதியிலான எமது பயணத்திற்கு சக்தியாகவிருக்கின்ற இந்நாட்டு மக்கள் ஜனநாயக விரோதத்தையும் அதனூடாக அரச பயங்கரவாதத்தையும் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள். பாடம் புகட்டியே தீருவார்கள்.
நடைபெறவிருக்கின்ற தேர்தல் நீதியானதும் சுதந்திரமானதுமாக நடைபெறுவதற்கு பொலிஸாரின் பங்கு இன்றியமையாததாகும். அந்த வகையில் வாக்காளரின் உரிமைகள் பறிக்கப்படாதிருப்பதற்கும் அவர்களது பாதுகாப்புக்கும் அசாதாரண சூழ்நிலைகள் தோற்றுவிக்கப்படாதிருப்பதற்கும் பொலிஸார் தமது கடமையுணர்ந்து செயற்படுவது அவசியம் என்பதையும் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன் என்றார்