எதிர்வரும் ஜூலை பத்தாம் திகதி திட்டமிட்டபடி பொது வேலை நிறுத்தம் நடக்குமெனவும் 10 இலட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் குதிப்பரெனவும் தெரிவித்திருக்கும் தேசிய தொழிற்சங்க மத்திய நிலைய பிரதம அமைப்பாளரும் ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினருமான டி.லால்காந்த, ஜனாதிபதி தொழிற்சங்கங்களை வைத்துக்கொண்டு எமது போராட்டத்தை திசைதிருப்ப முயற்சிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதைவிடுத்து கண்துடைப்புப் பேச்சுவார்த்தைக்கு நாம் போய் ஏமாறப் போவதில்லை எனவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் அழைப்பு தொழிற்சங்கங்களுக்கிடையில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், நாட்டின் பொருளாதாரப்பிரச்சினை குறித்து ஆராய்வதற்குமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எமக்குத் வேவைப்படாத ஒரு விடயம். சில அரச அதிகாரிகளையும் அரசுக்கு வக்காளத்து வாங்கும் குறிப்பிட்ட சில தொழிற்சங்கங்களையும் வைத்து மக்கள் போராட்டத்தைச் சீர்குலைப்பதற்கே இப்பேச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளது. எனவே தான் இதில் பங்கேற்பதில்லையென தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தீர்மானித்தது.
நாம் ஜூலை 10 ஆம் திகதி வரை அரசுக்கு காலக்கெடு வழங்கியுள்ளோம். அதற்கிடையில் ஊழியர்களின் சம்பள உயர்வு, வாழ்க்கைச்செலவு அதிகரிப்பை கட்டுப்படுத்துதல் உட்பட நாம் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளை
அரசு நிறைவேற்ற வேண்டும். இதனைச் செய்வதற்கு பேச்சுவார்த்தை அவசியப்படவில்லை.
எமது கோரிக்கைகள் விடயத்தில் ஜனாதிபதிக்கோ அரசுக்கோ அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. விவகாரத்தை மூடிமறைத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி முயற்சிக்கின்றார். இப்படியான பேச்சுகளால் எதுவித பயனுமில்லை.
ஜூலை 10 க்குள் எமது கோரிக்கை நிறைவேற்றப்படாது விட்டால் அன்றைய தினத்தில் அடையாள பொது வேலை நிறுத்தம் நாடு தழுவிய ரீதியில் நடந்தேதீரும். இந்த முடிவில் எந்தவிதமாற்றமும் கிடையாது. பத்து இலட்சத்துக்கும் அதிகமான அரச தனியார் துறை தொழிலாளர்கள் ஒரே நாளில் வேலைநிறுத்தத்தில் குதிக்கவுள்ளனர்.
ஒருநாள் அடையாள பொது வேலை நிறுத்தத்துக்கு அரசு செவிசாய்க்கத்தவறினால் முழுநாட்டையும் செயலிழக்கச் செய்யும் தொடர் வேலை நிறுத்த அறிவிப்பு, அதனையடுத்து 24 மணி நேரத்துக்குள் விடுக்கப்படும்.
நாம் வழங்கியிருக்கும் காலக்கெடுவை அரசு புத்திசாதுர்யத்துடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றேல் நடப்பவற்றுக்கான முழுப்பொறுப்பும் அரசாங்கத்தைச்சார்ந்ததாகும்.
எமது தொழிற்சங்கப் போராட்டத்தை முறியடிக்க அரசு தவறான வழிகளைக் கையாண்டால் அதனையும் எதிர் கொள்வதற்கும் 300 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களைக் கொண்ட தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தயாராக விருக்கின்றது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால் காந்த தெரிவித்தார்