“நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களுக்கு செல்வதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. எதிர்வரும் நவம்பர் மாதத்துக்கு பின்னர் தேவையாயின் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்லவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முடியும். அரசாங்கம் எந்த தேர்தலிலும் வெற்றிபெறுவதற்கு தயார் நிலையிலேயே இருக்கின்றது” என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
“நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தாத நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒருவரே தற்போது பதவியில் இருக்கின்றார். இந்த ஜனாதிபதி இருக்கும்வரை போட்டியாக யாராலும் வர முடியாது. நாடாளுமன்றத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தற்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ரத்துச் செய்வதாக கூறிவருகின்றார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது :
“முடியுமானால் பொதுத் தேர்தலை நடத்துமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் அல்ல. ஜனாதிபதி தேர்தலுக்கும் அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. இவ்வருடம் நவம்பர் மாதத்தின் பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. ஒருவேளை அவர் நாட்டின் மிகப்பெரிய தேர்தலான ஜனாதிபதி தேர்தலுக்குச் செல்லலாம். எந்த தேர்தலுக்கும் தயாராகவே நாங்கள் இருக்கின்றோம். .
தான் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை ரத்துச்செய்வதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அவரின் அந்தக்கூற்று தொடர்பில் நாம் சிந்திக்கவேண்டியுள்ளது. அந்த விடயம் குறித்து நாட்டில் எந்தவிதமான கருத்து பரிமாற்றங்களும் இல்லாத நேரத்தில் ரணில் ஏன் அவ்வாறான கருத்தை வெளியிடவேண்டும்? .
நாடாளுமன்றத்தில் அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்வதற்காக ரணில் விக்ரமசிங்க இவ்வாறான கருத்து ஒன்றை வெளியிட்டிருக்கலாம் என்று கருதுகின்றோம். ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தவில்லை. அவர் நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தாமலே மக்களின் இதயங்களில் இருக்கின்றார். அவருக்கு மக்களின் ஆணை முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. அதற்குச் சான்றாக கடந்த மாகாண சபை தேர்தல் முடிவுகளைக் கூற முடியும். .
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருக்கும்வரை அவருக்கு போட்டியாக யாராலும் வர முடியாது. நாடாளுமன்றத்திலும் அவர் சிறந்த ஒத்துழைப்பைப் பெறுகின்றார். தற்போது நாட்டில் நிறைவேற்று அதிகாரம் பயன்படுத்தப்படவில்லை என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்