நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் எடுக்கின்ற முடிவு தமிழ் மக்களின் நீண்ட தேசிய இன விடுதலை போராட்டத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமையுமென எதிர்பார்ப்பதாக இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொது செயலாளரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்களின் நிலைப்பாடு என்ற தொனிப்பொருளில் இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் இளைஞர் அமைப்பு ஹட்டனில் நடத்திய செயலமர்வில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் பேசுகையில் கூறியதாவது,
இலங்கையில் வாழுகின்ற சிறுபான்மை மக்கள் ஒரு இக்கட்டான காலகட்டத்தை கடந்துகொண்டிருக்கின்றனர்.குறிப்பாக மலையகத்திலும், வடக்கு கிழக்கு பகுதிகளிலும் வாழுகின்ற தமிழ்மக்களினதும்,முஸ்லலிம்களினதும் கௌரவம் யுத்தத்திற்கு பின்னர் கேள்விகுள்ளாகியிருக்கிறது.
யுத்தத்தின் முடிவோடு சிறுபான்மை மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கும் முடிவுகட்டிவிட்டதாக ஆளும் தரப்பு அகங்காரத்துடன் செயற்பட்ட நிலையில் தற்போது சிறுபான்மை மக்கள் மீது திடீர் கரிசனை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.
யுத்தம் முடிந்தவுடன் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் காணி அதிகாரத்தையும், பொலிஸ் அதிகாரத்தையும் வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு வழங்கமுடியாது என்று சொல்லிய ஜனாதிபதி தற்போது 13ஆவது அரசியல் யாப்புத் திருத்தத்திற்கு அப்பாலும் சென்று தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுத்தர அரசியல் யாப்புதயாராக இருப்பதாக தெரிவிக்கின்றார்.
இதேபோல எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவும் 13வது திருத்தத்திற்கு அப்பால் சென்று தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்கப்போவதாக சூளுரைத்துள்ளார். இவர்களின் இந்த அறிவிப்பு ஜனவரி 26 ஆம் திகதி தேர்தலுக்காக, சிறுபான்மை மக்களின் வாக்குகளை கபளீகரம் செய்வதற்காக அல்ல என்றால் தற்போதைய பாராளுமன்றத்திலேயே, அதுவும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பதாக சட்டமாக்கி காட்டமுடியுமா? ஏனென்றால் பாராளுமன்றத்தின் முக்கிய கட்சிகள் தமிழர் விடயத்தில் ஓரே கருத்தை கொண்டிருப்பதால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு ஜனாதிபதி தேர்தலை கால எல்லையாக நிர்ணயிப்பது காலத்தை கடத்தும் நடவடிக்கையாகும். ஒரு வேளை தேர்தலுக்கு பின் இந்தக் கட்சிகள் ஒருமித்த கருத்திற்கு வருவது மிக பெரும் அபூர்வமாகும்.
ஏனெனில் கடந்த காலத்தில் தமிழர்களுக்கு உரிமை வழங்குவதற்கு எதிராக ஊர்வலம் போனவர்களும், உண்ணாவிரதம் இருந்தவர்களும், ஆவணங்களை கிழித்தவர்களும்,எரிததவர்களும் இந்த இரண்டு கட்சிகளையும் சார்ந்தவர்களே.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்கள் எவரை ஆதரிக்க வேண்டும் என்பதில் ஒரு தெளிவான தீர்மானத்திற்கு வரவேண்டிய தேவை இருக்கிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த கடந்த நான்கு வருடங்களில் எந்தவெரு சந்தர்ப்பத்தில் கூட நாட்டின் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்விற்கான முனைப்பை காட்டவில்லை.
யுத்தத்தை நடத்துவதன் மூலம் பெரும்பான்மை சிங்கள மக்களின் மனங்கவர்ந்த தலைவராக தன்னை அடையாளப்படுத்துவதில் பெருத்த ஆர்வம் காட்டினாரே தவிர கொல்லப்படுகின்ற அப்பாவி தமிழ் மக்கள் பற்றியோ, பட்டினிக் கிடந்து செத்தவர்கள் பற்றியோ சற்றேனும் கவலை கொள்ளவில்லை. அப்பாவி தமிழ் மக்களைக் காப்பாற்ற கோரிய உருக்கமான கோரிக்கைகள் எல்லாவற்றையும் நிராகரித்தார் .பட்டினியாலும், காயங்களினாலும் செத்துக்கொண்டிருந்த மக்களுக்கு கப்டன் அலி என்ற கப்பலில் ஐரோப்பிய தமிழர்கள் வழங்கிய பொருட்களை உரியவர்களுக்கு, உரியநேரத்தில் வழங்குவதற்கு கூட முன்வரவில்லை.
இவ்வாறான கடந்த காலத்தை கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் தேர்தலில் தமிழர்கள் வாக்களிப்பது யுத்தத்தில் மடிந்துபோன தமிழ் மக்களை மீண்டும் கொலை செய்வதற்கு சமமானதாக நடவடிக்கையாக அமைந்து விடாதா?
மஹிந்த சிந்தனையில் மலையகத்திற்கு எதுவுமில்லை
மலையகத்தைப் பொறுத்தவரையில் மகிந்த சிந்தனையின் கவர்ச்சிகரமான உள்ளடக்கங்கள் எவையும் நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை. 3179 ஆசிரியர் நியமனமென்பது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் காலத்திலிருந்து இழுபட்டு வந்த விடயம்..இந்த விடயம் உட்பட மகிந்த சிந்தனையின் பலவேறு உள்ளடக்கங்கள் இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் சிபாரிசின் பேரில் சேர்க்கப்பட்டவை. தோட்டத் தொழிலாளர்களின் பிரதான உணவான மா மானிய விலையில் வழங்கப்படவில்லை.
தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை அமைத்து அதற்கு வீட்டுறுதியும் வழங்கப்போவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த நான்கு வருட காலத்தில் எத்தனை வீடுகள் கட்டப்பட்டுள்ளன? ஆக ஒரு தொழிலாளர் குடும்பத்திற்காவது வீட்டுறுதி வழங்கப்பட்டிருக்கிறதா? தேசிய பாடசாலைகள், பல்கலைக்கழகம் தொடர்பில் எவ்வித முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நாட்டில் ஆக குறைந்த கூலிக்கு தோட்டத் தொழிலாளர்களிடம் வேலை வாங்கப்படுகின்றது. வெளிநாட்டு வருமானத்தை இந்த நாட்டிற்கு ஈட்டித்தருகின்ற தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பளம் தொடர்பில் அரசாங்கத்திடம் எவ்விதான கொள்கையும் கிடையாது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தோட்டத் தொழிலாளருக்கான சம்பள அதிகரிப்பு கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டபோது அரசாங்கம் அதில் தலையிட்டு நியாயத்தை பெற்றுக் கொடுக்க தவறிவிட்டது.
இந்தநிலையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினாலும் மலையக மக்கள் ஜனாதிபதிக்கோ அல்லது இந்த அரசாங்கத்திற்கோ ஆதரவு வழங்க தயாராக இல்லை.
மறுபுறத்தில் ஜனாதிபதி மகிந்த அரசாங்கத்திற்கு மாற்றீடாக எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார். வடக்கில் நடைபெற்ற மனித பேரவலத்தில் இராணுவ தளபதி என்றவகையில் இவருடைய பங்கைத் தமிழ் மக்களால் மறந்துவிடவோ, குறைத்து மதிப்பிடவோ முடியாதவை. ஆனால் இவர் எய்தப்பட்ட அம்பு என்பதை தமிழ் மக்கள் மனதில் வைத்துக்கொண்டுதான் எதிர்கால அரசியல் முடிவை எடுக்க வேண்டும்.
ஏன் சரத்பொன்சேகாவை ஆதரிக்க வேண்டும்
யுத்தத்தை மையப்படுத்திய தேர்தல் வியூகம் அமைக்கப்பட்டிருக்கின்ற இந்த ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசமும், சிங்கள மக்களின் வாக்குகளைக் குறிவைத்து பேசப்படப்போகின்ற போர் உரிமை வீரவசனங்களும் தமிழ் மக்களின் மனதில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகவே அமையும் .இருந்தாலும் தமிழ மக்கள் எதிர்நோக்கிய,எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வை தேடவேண்டுமாக இருந்தால் உணர்ச்சிகளை ஒருபுரம் ஒதுக்கிவைத்துவிட்டு சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்குவதற்கு வாக்கை பயன்படுத்துவதே புத்தி சாதூரிமான அரசியல் தீர்மானமாகும்.
மலையக மக்களை பொறுத்தவரையில் நாட்டில் அரசியல் மாற்றமொன்றின் தேவையை உணந்தவர்களாக இருக்கிறார்கள். சுயநல அரசியல்,தொழிற்சங்க வட்டத்திற்குள் மலைய மக்களை முடக்கி வைத்திருக்கின்ற தொழிற்சங்க தலமைகளை ஓரங்கட்டுவதற்கான சந்தர்ப்பமாக எதிர்வரும் ஆறு மாத காலத்தை கருதுகிறோம்.,மலையக மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளை முன்வைத்து பேரம்பேசுவதற்கான காலம் கனிந்துள்ள நிலையில் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவது மலையக மக்களின் வாக்குகளை அமைச்சு சுகபோகங்களுக்காக அடகு வைக்கும் நடவடிக்கையாகும்.
இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பேச்சுவார்த்தையை ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடமும், ஜனாதிபதி பொது வேட்பாளர் சரத்பொன்சேகாவிடமும். நடத்தியிருக்கிறது. இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் தனியான இனக்குழு என்ற வகையில் எமது பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்தும் திட்டங்களை ஐக்கிய தேசிய முன்னணி தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்க வேண்டும். என்பதில் உடன்பாடு காணப்பட்டுள்ளது. மலையகத்தில் மக்கள் செல்வாக்குள்ள அமைப்புக்கள் ஒன்றிணைய வேண்டும் இதேவேளையில் இந்திய வம்சாவளி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளான ஐனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி ,இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஆகிய அமைப்புக்கள் மலையக மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதில் ஒத்துப்போகின்ற அரசியல் நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றன. இவ்வமைப்புக்கள் ஒரேநிகழ்ச்சி நிரலுடன் செயற்படமுடிந்தால் ஒரு பலமான மக்கள் சக்தியை கட்டியெழுப்பி அதன் மூலம் இந்த நாட்டில் ஒதுக்கப்பட்ட சமூகமாகவும், ஏமாற்றப்பட்ட சமூகமாகவும் வாழ்ந்து வருகின்ற மலையக சமூகத்தை ஒரு குறுகிய கால எல்லைக்குள் தலைநிமிர வைக்கமுடியும். இதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.