02.03.2009.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை நேபாளத்துக்குச் செல்கிறார். ஜனாதிபதியுடன் அவரது பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவும் அங்கு செல்வார்.
நாளை செவ்வாய்க்கிழமை காலையில் நேபாளப் பிரதமர் பிரசன்டாவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் இரு தரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவர்.
நேபாள ஜனாதிபதி ராம்பரன் யாதவ்வின் அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி இந்த இரண்டு நாள் விஜயத்தை மேற்கொள்கின்றார்.
ஜனாதிபதியையும் அவரது பாரியாரையும் காத்மண்டு விமானநிலையத்தில் நேபாள வெளிவிவகார அமைச்சர் உபேந்திரா யாதவ் வரவேற்பார்.
காத்மண்டுவில் உள்ள ஜனாதிபதி மாளிகையான நேபாள ராஸ்த்திரபதி பவனில் இன்று பிற்பகல் இரு ஜனாதிபதிகளும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவர்.
ஜனாதிபதி தம்பதியருக்கு நேபாள ஜனாதிபதி இன்றிரவு இராப்போசன விருந்தளித்துக் கௌரவிக்கவிருக்கின்றார்.
இந்த இரண்டு நாள் விஜயத்தின் போது ஜனாதிபதியும் பாரியாரும் நாளையதினம் புத்தர் பிறந்த இடமான லும்பினிக்குச் சென்று வழிபாடுகளிலும் கலந்துகொள்வர்.
அதேசமயம், காத்மண்டுவில் உள்ள சார்க் செயலகத்துக்கும் ஜனாதிபதி செல்வார். இரண்டுநாள் விஜயத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி தம்பதியர் நாளை செவ்வாய்க் கிழமை இரவு நாடு திரும்புவர்.