ஜனாதிபதித் தேர்தலை நடத்தி மக்களின் ஆணையைப் பெற்ற பின்னரே இனப்பிரச்சினைக்கு இறுதி அரசியல் தீர்வு முன்வைக்கப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சஷ்டி அடிப்படையில் தீர்வொன்று முன்வைக்கப்படுமெனக் கூறப்படும் கருத்துக்களை மறுத்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பல்லின சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கமொன்றை ஏற்படுத்த வேண்டியதே தற்போதைய தேவையாக இருப்பதாகவும் கூறினார்.
நலன்புரி நிலையங்களில் குறைப்பாடுகள் உண்டு என்பது எமக்குத் தெரியும். மிகவும் மெதுவான வேகத்தில் அவற்றை நாம் நிவர்த்திசெய்து வருகின்றோம். சில முகாம்களில் எந்தப் பிரச்சினைகளும் இல்லை” என ஜனாதிபதி இந்தியாவின் ‘த ஹின்டு’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி தெரிவித்தார்.
இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 13வது திருத்தத்தை நாளை அமுல்படுத்துவதற்குக் கூடத் தான் தயாரென ஹின்டு பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் சுட்டிக்காட்டிய அவர், எனினும், மக்களின் அனுமதியைப் பெற்ற பின்னரே அதனை அமுல்படுத்தத் தீர்மானித்திருப்பதாகவும் கூறினார்.
அரசியல் தீர்வு தொடர்பாக ஆராயும் கூட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் கலந்துகொள்ளவேண்டுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலின் பின்னரே இறுதித் தீர்வொன்றை முன்வைக்க எதிர்பார்த்திருப்பதாகக் கூறினார்.
“இனப்பிரச்சினைத் தீர்வாக எதனைக் கொடுக்கவேண்டும், எதனைக் கொடுக்கக் கூடாது என்பது எனக்கு நன்கு தெரியும். மக்கள் எனக்கு ஆணை வழங்கியுள்ளனர். அதனை நான் பயன்படுத்தவுள்ளேன். ஆனாலும், ஏனையவர்களின் (கூட்டமைப்பினர்) இணக்கப்பாடும் கிடைக்கப்பெறவேண்டும். சமஷ்டி முறையிலான தீர்வுக்கு வாய்ப்பு இல்லை” என்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.