தாய்நாடு இழந்துவரும் ஜனநாயகம், மனித உரிமைகள், ஊடக சுதந்திரம், சமூக சமநிலை மற்றும் இன ஒற்றுமை என்பவற்றை பாதுகாப்பதற்கு உயிரைப் பணயம் வைத்தேனும் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்று முன்னாள் இராணுவத் தளபதியும் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு பிரிவுகளை சேர்ந்தவர்களின் எதிர்கால முன்னேற்றம் கருதி அவர்களுடன் நிழலாக இருப்பேன் என்றும் அவர் வாக்குறுதியளித்துள்ளார். கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து ஓய்வுபெற்றதையடுத்து இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே ஜெனரல் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
தாய் நாட்டுக்கு எதிராக நிலவிவந்த 30 வருட கால பயங்கரவாத்தை முற்றாக அழிப்பதற்கு இராணுவத்தினர் பாரிய பங்களிப்பை செய்துள்ளனர். எனவே, அவர்கள் அனைவரும் இந்த வெற்றியின் பங்காளிகளாவர். உண்மையான தொழில்சார் இராணுவ வீரர்களாக யுத்தத்தை எதிர்கொண்டதன் விளைவாகவே பயங்கரவாதத்தை வெற்றி கொள்ள முடிந்தது. இந்த கம்பீரதன்மையை தொடர்ந்து இராணுவத்துக்குள் தக்கவைத்து கொண்டிருக்க வேண்டும். எந்தவொருவரும் இராணுவத்தின் கௌரவத்துக்கு களங்கம் விளைவிப்பதற்கு இடமளிக்கக்கூடாது. யுத்தத்தை வெற்றிகொண்டு தாய்நாட்டை காப்பாற்றிய இராணுவ வீரர்களை சிலர் தூற்றுவதற்கு முற்படுகின்றபோதிலும் யுத்த வெற்றியின் உண்மையான பங்காளர்கள் தாமே என்பதை இராணுவ வீரர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து விலகிக்கொண்டதன் காரணமாகவே 30 வருட கால பயங்கரவாதத்துக்கெதிரான யுத்தத்தை குறுகிய காலத்துக்குள் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பங்காற்றிய இராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்துகின்ற அதேவேளை, வீரர்களின் நலன்புரி விடயங்களை மேம்படுத்துவதற்கும் என்னால் முடியாது போயுள்ளது.
கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியாக சேவையாற்றிய மிகக் குறுகிய காலத்தில் இதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் போனதையிட்டு கவலையடைகிறேன். எனது 40 வருட கால சேவையின் நிறைவை முன்னிட்டு நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வில் முப்படைத் தளபதிகளுக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் கலந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைக்காமை காரணத்தால் இந்தக் கடிதம் இராணுவ வீரர்களுக்கு உரையாற்றக்கிடைத்த காரணியாக அமைந்துள்ளது.
எனது உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் ஆராய்ந்து பாதுகாப்புக்குக்கு 100 வீரர்களையாவது பெற்றுத்தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை கவனத்தில் கொள்ளப்படாத அதேவேளை, தற்போது மெய்ப்பாதுகாவலர்களின் எண்ணிக்கை 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் 60 பாதுகாப்பு வீரர்களையும் 3 வாகனங்களையும் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஓய்வு பெற்றதையடுத்து உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறும் உயர்மட்டத்திலிருந்து உத்தரவு கிடைத்துள்ளது. தற்போது வாடகை வீடொன்றை பெற்றுக்கொள்வதற்கும் பல இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.