16.10.2009.
மத்திய கிழக்கு ஆசியாவில் இஸ்ரேலும் பாலஸ்தீனமும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான வரையறையை தனது நிர்வாகம் உருவாக்கிக் கொடுத்திருக்கிறது என்றும், உலகம் முழுவதிலும் `ஜனநாயகத்திற்கு’ ஆதரவான கலகக்காரர்களின் பக்கம் அமெரிக்கா நிற்கிறது என்றும் புஷ் கூறினார்.
இன்னும் 2 நாட்களில் ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறவுள்ள ஜார்ஜ் புஷ், தனது கடைசி உரையை அந்நாட்டு மக்களுக்கும், அயல்துறை அதிகாரிகளுக்கும் நிகழ்த்தினார். அப்போது, 2004 முதல் 2008 வரை தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் அமெரிக்க நலனை பிரதானமாகக் கொண்டு எடுக்கப்பட்ட முடிவுகள் என்று கூறினார்.
இந்தியாவை அணு சக்தி உடன்பாட்டில் கையெழுத்திட வைப்பதன் மூலம் ஒரு புதிய வரலாற்றை, இந்தியாவுடனான கேந்திர ரீதியான கூட்டை உருவாக்கியதே எனது ஆட்சிக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனை என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் கூறினார்.
ஜனவரி 20ம்தேதி அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பாரக் ஒபாமா பொறுப்பேற்கவுள்ளார்.
அமெரிக்கா இராக்கிலும், ஆப்கனிலும், நடத்தி வரும் முடிவில்லாப் போர்கள், காசாவில் தீவிரயுத்தம், அமெரிக்காவின் பொருளாதாரப் பின்னடைவு, உலகெங்கும் சிதைந்து கிடக்கும் அமெரிக்க கவுரவம் ஆகியவற்றை தனது எச்சங்களாக ஒபாமாவுக்கு புஷ் விட்டுச் செல்கிறார்.
தனது சுதந்திரச் சந்தை வியூகத்தால் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவை ஈடு செய்ய அரசு வழங்கிய மீட்பு நிதித் திட்டத்தை புஷ் நியாயப்படுத்தினார்.
2001 செப்டம்பர் 11 தாக்குதல் போல் மற்றுமொரு பயங்கர தாக்குதல் ஏற்படும் வாய்ப்பு உண்டு என்று அவர் ஒபாமாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். “எங்களுடன் இரு அல்லது எதிரியுடன் இரு’’ என்ற புஷ்சின் வியூகம் உலகம் முழுவதும் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது. அக்கொள்கையின் விளைவாகவே கடந்த 7 ஆண்டுகளாக அமெரிக்கா மீது தாக்குதல்கள் இல்லை என்று அவர் கூறிக் கொண்டார்.
இந்தியாவுடன் உறவு
அயல்துறை அமைச்சக அதிகாரிகளிடம் பேசுகையில், இந்தியாவுடன் ஒரு வரலாற்றுப்பூர்வமான கேந்திர கூட்டணியை உருவாக்கிக் கொண்டதே தனது சாதனைகளில் முக்கியமானது என்று கூறிய புஷ், அணுசக்தி உடன்பாட்டை மேற்கொண்டது இந்திய பிராந்தியத்தில் அமெரிக்காவின் கேந்திர ரீதியான நலன்களுக்கு பெருமளவில் உதவும் என்றும், வர்த்தக நலன்களுக்கு உதவும் என்றும் குறிப்பிட்டார்.
இந்தப் பாதையில் அடுத்து ஒபாமா நிர்வாகத்தில் அயல்துறை அமைச்சராக பொறுப்பேற்க ஹிலாரி கிளிண்டனும் முன்னேற வேண்டும் என்றும் கூறினார்.
ஆசியாவில் ஒரே நேரத்தில் ஜப்பான், தென் கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் உறவை வலுப்படுத்தியது தனது நிர்வாகமே என்று குறிப்பிட்ட புஷ், ஐரோப்பாவில் பால்டிக் பிரதேசம் முதல் பால்கன் பிரதேசம் வரை புதிய “ஜனநாயக’’ நாடு களை நேட்டோ அமைப் பில் இணைத்து விரிவாக்கியதும் தனது சாதனை என்றும் குறிப்பிட்டார்.
ஈரான் மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளை பலமுனைகளிலிருந்து சந்தித்ததாகவும், உலகம் முழுவதிலும் தான் உருவாக்கிய கூட்டணியில் 90-க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்து கொண்டிருப்பதாகவும், தனது காலத்தில் மிகப் பெரிய தத்துவார்த்த போராட்டத்தை – அதாவது `சுதந்திரம்’ என்ற தத்துவார்த்த போராட்டத்தை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தனது காலத்தில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்ததாக குறிப்பிட்ட புஷ், இந்த உலகையே அச்சத்தில் இருந்து விடுதலை செய்து விட்டதாகவும் கூறிக் கொண்டார்.
அமெரிக்க வரலாற்று ஆய்வாளர்கள் அமெரிக்க ஜனாதிபதிகளில் மிகவும் மோசமானவர்கள் பட்டியலில் புஷ் முதலிடத்தைப் பிடிப்பார் என்கின்றனர். மக்களிடம் அவருடைய கவுரவம் 20 சதவீதமாகச் சரிந்து நிற்கிறது. அவருடைய வெளியுறவுக் கொள்கைகள் அனைத்தையும் அவர் நியாயமானவை என்று கூறினார். தன்னைப் பற்றி வரலாறு கணிக்கட்டும் என்று முன்பே புஷ் கூறியுள்ளார்.