20.11.2008.
”உங்கள் அனைவருக்கும் தெரியும் மூன்று வருடங்களுக்கு முன் அதாவது 2005 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதி எமது ஒத்துழைப்புடன் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்நாட்டு ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாகத் தெரிவானார்.மஹிந்த சிந்தனையின் கீழ், தான் ஜனாதிபதியாகத் தெரிவானால் புதியதோர் இலங்கையைக் கட்டியெழுப்புவதாக அன்று மக்கள் முன்னிலையில் உறுதி எடுத்துக் கொண்டார். அரசு சார்ந்த பத்திரிகை ஒன்றில், ”மஹிந்தவின் மூன்றாண்டு கால ஆட்சி உன்னதமாக இருக்கும்” என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு மாறுப்பட்ட விதத்திலேயே இன்று ஆட்சி நடத்தப்படுகிறது.
ஜனதிபதி அன்று குறிப்பிட்டது போன்று, ஒரு சிலருக்கு தமது சலுகைகளுடன் கூடிய வேறுவிதமான ‘சொகுசு இலங்கை’யை இன்று உருவாக்கி வருகிறார்.
அதாவது, ராஜபக்ஷ தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களையே இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களாக, தூதுவர்களாக, செயலாளர்களாக ஜனாதிபதியின் ஆலோசகராக என்று பட்டியலிட்டு 79 பேருக்கு முக்கிய பதவிகளை வழங்கி சுகபோக வாழ்வளித்திருக்கின்றார். இது நாடறிந்த உண்மை.
பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் ஜனாதிபதியின் சகோதரர். அதாவது நாட்டில் பிரச்சினைகள் ஏற்பட்டபோதெல்லாம் அமெரிக்கவில் வாழ்ந்த கோதபாய ராஜ்பக்ஷதான் அவர். அமெரிக்கா உட்பட பிரபல நாடுகளின் தூதுவர்களாக ஜனாதிபதியின் உறவினர்களே உள்ளனர்.
துறைமுக அதிகாரசபை இலங்கை பொருளாதாரத்தின் ஒரு முக்கிய கேந்திர நிலையமாகக் காணப்படுகிறது. அதன் பணிப்பளர் ராஜபக்ஷ குடும்பதைச் சேர்ந்த ஒருவரே. அவரும் கலாநிதி என்றே அழைக்கப்படுகிறார். விமான நிலையம் நிர்வாகம், திறமை அற்றவர்களிடமே கையளிக்கப்பட்டுள்ளது. இன்று நாடு அழிவு பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. ஜே ஆர் ஜெயவர்தனாவுக்குப் பின்னர் ஜனாதிபதியின் சம்பளம் 4 மடங்காக 2006 ஆம் ஆண்டு நவம்பர் 23 திகதி மாற்றப்பட்டிருக்கின்றது.இவ்வாறு கூறினார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர. கொழும்பு, றொஸ்மிட் பிளேஸிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது :
உலகிலுள்ள 168 நாடுகளில் 28 நாடுகள் இன்று பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளகியுள்ளன. இலங்கையும் அவற்றில் ஒன்று. சோமாலியாவைப் போன்ற நிலை இலங்கையில் இல்லை. எனினும் எதிர்காலத்தில் அப்படியொரு நிலைமை வரக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. வெளிநாட்டு செலாவனிகள் 100 – 30 சதவீதம் குறைந்துள்ளது என மத்திய வங்கி ஆளுநர் நிவாஸ் கப்ரால் தெரிவிக்கின்றார். இலங்கையின் சதவீதமோ 100 க்கு 85.5 ஆக இருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.நாட்டின் இறப்பர் உற்பத்தி பெரிதும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த உற்பத்தியில் ஈடுபட்டு தினக்கூலிகளாக வாழ்க்கை நடத்தும் பாமர மக்களுக்குத் தான் இதன் தாக்கம் தெரியும்.
நாட்டில் இன்று நடந்து கொண்டிருக்கும் போர்தான் எமது பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம். போரை நிறுத்தி பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் காக்க வேண்டியதே இன்றைய எமது தேவையாகும்.” இவ்வாறு மங்கள சமரவீர கூறினார்