இன்று 45 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதுதான் தமிழர் தரப்பு தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுக்கும் அப்போதைய இலங்கைப் பிரதமர் டட்லி சேனநாயக்காவுக்கும் இடையே மார்ச் 24, 1965 அன்று ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம்.
அந்நேரம் இவ் ஒப்பந்தம் எந்த சூழ்நிலையிலில் எதற்க்காக ஏற்ப்படுத்தப்பட்டது என்று பார்த்தால், 1965 மார்ச் 22 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐ.தே.கட்சி 66 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 41 ஆசனங்களையும் இலங்கைத் தமிழரசுக் கட்சி 14 ஆசனங்களையும் லங்கா சமசமாஜக் கட்சி 10 ஆசனங்களையும் கைப்பற்றின. 151 ஆசனங்களில் 76 ஆசனங்கள் இருந்தால்தான் அரசாங்கத்தை நடத்த முடியும். மிகுதி ஆசனங்களுக்கு மற்றக் கட்சிகளின் ஆதரவைத்தேட வேண்டியிருந்தது. ஐ.தே.கட்சிக்கு அரசமைக்கும் பங்காளியாக தமிழரசுக் கட்சி முன்வந்தது. அதைத் தொடர்ந்து டட்லி- செல்வா ஒப்பந்தம் எழுதப்பட்டது.
இவ் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் என்னென்னவென்று பார்த்தால்,
* வடக்கு- கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியே நிர்வாக மொழியாகவும் ஆவணங்கள் பதிவு செய்யும் மொழியாகவும் ஏற்கப்பட்டது.
•* வடக்கு- கிழக்கு நீதிமன்றங்களில் தமிழ் மொழி பாவிக்கப்பட உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவாதம் தரப்பட்டது.
•* பிரதேச ஆட்சிமுறை மன்றங்கள் தாபிக்கப்பட வேண்டும் என்று ஏற்கப்பட்டது. அவற்றிற்கடங்கலான விடயங்கள் இரு தலைவர்களாலும் பின்னர் நிர்ணயிக்கப்படவிருந்தது.
•* காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் காணிப்பங்கீடு சம்பந்தமாகப் பின்வரும் விடயங்கள் முக்கியமாகக் கருத்துக்கெடுக்க உடன்பாடு ஏற்பட்டது.
• வடக்கு- கிழக்கு மாகாணங்களில் இருக்கும் அரசாங்க நிலங்கள் முதற்கண் அப்பிரதேசக் காணியில்லா குடியானவர்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும்.
• இரண்டாவதாக அவ்வாறு காணிபெற ஏற்றவர்கள் இல்லாத பட்சத்தில் வடக்கு- கிழக்கு வாழ் மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
• மூன்றாவதாக நாட்டின் மற்றைய குடிமக்களுக்கு ஒதுக்கப்படலாம். ஆனால், முன்னுரித்து நாட்டில் வாழ் தமிழ் பேசும் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும்.
இதன் சாரம்சத்தை பார்த்தால் வட – கிழக்கில் தமிழ் மொழிப் பயன்பாட்டை ஏதுவாக்குவதும் வட – கிழக்கில் அரச நில பகிர்ந்தளிப்பில் தமிழ் மொழிபேசுவோருக்கே முன்னுருமை வழங்குவதும் ஆகும்.
அந்நேரம் டட்லி செல்வா ஒப்பந்தம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வாகவே முன்வைக்கப்பட்டது மட்டுமல்லாமல். இன நெருக்கடியை முளையிலேயே கிள்ளியெறிவதற்கான வழிமுறைகள் அதில் காணப்பட்டன. இவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட டட்லி சேனாநாயக்கா மனித நேயம்மிக்க தலைவராகத் திகழ்ந்தது மட்டுமல்லாமல், மனித உரிமைகள் உட்பட அடிப்படை உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த ஜனநாயக அரசியல்வாதியாக அவர் காணப்பட்டார். ஆனால் இன்று நடப்பது போல் அவ் ஒப்பந்தத்தை செயற்படுத்தவிடாமல் அன்று பௌத்த மகாசங்கத்தின் ஒரு கூட்டமே தடுத்தது, அப்படியே அவ் ஒப்பந்தமும் செயலிழந்துபோனது. அதன் பின்விளைவே இன்றும் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.
இதன் முன் பண்டா – செல்வா ஒப்பந்தம் (July 26th 1957) தனிச் சிங்களச் சட்டம், இந்தியத் தமிழ் தோட்டத் தொழிலாளர் குடியுரிமை பறிப்பு, தமிழ்ப் பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்களினால் ஆத்திரமடைந்து பல்வேறு வகையான (பொதுவாக வன்முறையற்ற) போராட்டங்களில் ஈடுபட்ட தமிழர்களை ஓரளவுக்கு சமாதானப்படுத்தும் நோக்குடன் கைச்சாத்திடப்பட்டது.
இதுவும் பின் ஒக்டோபர் 4, 1957 இல் ஜே. ஆர். ஜெயவர்த்தனா உட்பட பல சிங்களத் தலைவர்கள் பலரும் கண்டிக்கு நடத்திய எதிர்ப்பு யாத்திரை காரணமாகவும் பௌத்த பிக்குகள் பலரும் தீவிரமாக எதிர்த்தமையாலும் நடைமுறைப் (அமுல்) படுத்தப்படவில்லை.
இன்று ஜே. ஆர் – இராஜீவ் ஒப்பந்தம் ஜூலை 29, 1987 “இந்தியா-இலங்கை ஒப்பந்தம்” என்று கைச்சாத்திடப்பட்டு தொடர்ந்து அதன் அமுல் படுத்தப்படாமலும், அதன் விளைவுகளையும் அனுபவித்துக்கொண்டே இருக்கிறோம். இந்த ஒப்பந்தம் எந்த சூழ்நிலையில் கைச்சாத்திடப்பட்டது என்பதை அறிய இவ் இணைப்பை வாசியுங்கள். http://www.keetru.com/thamizhthesam/feb09/harhiratsingh.php
இவற்றின் தொடர்ச்சி எம்மவர் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் அமுலாக்கப்பட முடியாத நிலையில் எமது அண்டை நாடு தலையிட்டு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தமும் அமுலாக்கப்படாத நிலையில் சர்வதேச சமூகமும் எமது நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க முயன்றுவருகின்றபோது அரசாங்கம் அதனை காலால் உதைத்துத் தள்ளப் பார்க்கின்றது….. தள்ளுகின்றது.
இன்று ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள்……. அமைதிப் பேச்சுவார்த்தைகள் என்று எல்லாம் முடிந்து இணக்க அரசியல், புரிந்துணர்வு அரசியல் என்ற நிலைக்கு சென்று ஒவ்வொரு ஈழத்தமிழனும் தான் குடியிருந்த சொந்த மண்ணிலேயே குடியிருக்க முடியாமல், சொந்த நாட்டில், அயல் நாட்டில் முகாம்களிர்க்குள் அகதிவாழ்க்கையுடன், உலகெங்கும் புலம் பெயர்ந்தவர்கள் என்ற பெயருடன் அகதியாக இருக்கும் நிலையில் அபிவிருத்தி என்ற பெயரில் நடக்கும் சிங்களக் குடியேற்றங்களையும், உல்லாச பயணத்துறை விரிவாக்கம் என்ற பெயரில் நடக்கும் கலாச்சார அழிவுகளையும், இணக்கலப்பையும் பாத்தும் பார்க்காமல் நடிக்கும் எமது தமிழ்த் தலைமைகளின் நிலையை என்னவென்று சொல்வது?
45 வருடங்களிற்கு டட்லி சேனாநாயக்கா முன்வைத்த யோசனைதான் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கு சரியான யோசனையாக இருக்கும் நிலையில் அன்றே அதனை முன்னெடுக்க அனைவரும் ஒத்துழைத்திருந்தால் இன்று இவ் இனவாதம் மண்ணில் வேரூன்றி ஆயுதப்போராட்டமும் தோன்றியிருக்காது, இந்த அவலமான நிலைமையும் நாட்டில் உருவாகியிருக்காது. இன்றோ சகல தரப்பிலும் இனவாதம் வேரூன்றி ஒவ்வொரு அரசியல்வாதியும் தன் இருப்பை நிலைநிறுத்துவதர்க்கான போட்டியில் நாட்டையே பேரழிவுக்குள் இட்டுச்சென்றுகொண்டிருக்கின்றார்கள்.
அதுமட்டுமல்ல ஏதோ எமது மக்கள் ஒன்றிற்கும் வழியில்லாமல் ஆகாயத்தில் இருந்தோ, கடலிற்குள்ளிருந்தோ வந்தவர்கள் மாதிரி அரசாங்கமும் நடத்தும் நிலையும், அதற்க்கு இடைத்தரகர்களாக எம்மவர்கள் எஜாமானிடம் எஞ்சிய உணவை வாங்கி கூட்டிற்குள் இருக்கும் நாய்க்கு போடுவது மாதிரியும்…. இதை உணர்ந்தாவது (தம் நிலையை) எமது தமிழ், முஸ்லிம் தலைமைகள். ஓரணியில் சேர்வார்களா? அல்லது ‘மே 18 இயக்கம்’ இனர் விடுக்கும் கோரிக்கையை மக்கள் செவிசாய்த்து “புதிய ஜனநாயாக கட்சியை” தெரிவு செய்வார்களா? அல்லது காலோட்டத்தில் மக்கள் மத்தியிலிருந்து புதியதோர் புதுத் தலைமை உருவாகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
இதில் ஓர் ஒற்றுமை என்னவென்றால் முதல் ஒப்பந்தம் “பண்டா – செல்வா ஒப்பந்தம்” July 26th, 1957 கைச்சாத்திடப்பட்டது, “ஜே. ஆர் – இராஜீவ் இந்தியா-இலங்கை ஒப்பந்தம்” July 29th, 1987 கைச்சாத்திடப்பட்டது. இரண்டும் ஜூலை மாதத்தில் சரியாக 30 வருட இடைவெளியில்.
சில திருத்தங்கள்:
டட்லியின் மனிதநேயம் 1960 ஜூன் மாதம் எப்படி இருந்தது என்றுநாம் மறக்கலாகாது.
1960இல் தமிழரசுக் கட்சி யூ.என்.பீ. ஆட்சியை ஆதரிக்காத கோபத்தில் 1960 ஜூன் தேர்தலில் சிரிமா பண்டாரநாயக்க இலங்கையை இரண்டாகப் பிரித்து தமிழரசுக் கட்சியிடம் வடக்கு கிழக்கை ஒப்படைப்பதாகப் பிரசாரம் டட்லி தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
தமிழரசுக் கட்சி – யூ.என்.பீ. கள்ளக் கூட்டு 1964க்கு முன்பே ஏற்பட்டு விட்டது.
1961 சத்தியாக்கிரகத்தின் தோல்விக்குப் பின் விரக்தியுற்றிருந்த தமிழரசுக் கட்சி யூ.என்.பீ. யை நாடியது. தமிழரசுக் கட்சி 1962இல் யூ.என்.பீ. ஆதரவு ராணுவ அதிகாரிகளின் சதி முயற்சியைக் கண்டிக்கத் தவறியது.
பல மக்கள் சார்பு நடவடிக்கைகளை எதிர்ப்பதில் தமிழரசுக் கட்சி யூ.என்.பீ.யுடன் சேர்ந்து செயற்பட்டது.
“45 வருடங்களிற்கு டட்லி சேனாநாயக்கா முன்வைத்த யோசனைதான் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கு சரியான யோசனையாக இருக்கும் நிலை” பற்றிப் பேசும் போது அதை விட முற்போக்கான பன்டாரநாயக்க – செல்வநாயகம் உடன்படிக்கையை மறந்து விடுகிறோம்.
அதை முதலில் ஆதரித்தது கம்யூனிஸ்ற் கட்சி. அதை முதலில் எதிர்த்தது யூ.என்.பீ.
அதைக் கவிழ்க்க உதவும் விதமாக முட்டாள்தனமான நடவடிக்கை எடுத்தவர்கள் அமிர்தலிங்கம் தலைமையிலான ஒரு சிறு கூட்டத்தினர்.
பண்டாரநாயக்கவும் டட்லி சேனநாயக்கவும் சந்தர்ப்பவாதக் கோழைகள்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தவிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட்டவுடன், அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் கூறினார்.