அமெரிக்க வளைகுடா கடற்கரையை நோக்கி ‘கஸ்டாவ்’ சூறாவளி நகர்வதையொட்டி, நியூ ஒர்லீன்ஸ் நகரைச் சேர்ந்த மக்கள் அனைவரையும் இடம்பெயர அந்நகர மேயர் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை கியூபாவைத் தாக்கிய இச்சூறாவளி 5 ஆம் வகை சூறாவளியாக பலம் பெற்று அமெரிக்காவை நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது மணிக்கு 240 கிலோமீற்றர் வேகத்தில் நகரும் இந்த சூறாவளியானது அமெரிக்காவைப் பொறுத்தவரை இந்நூற்றாண்டின் மிக மோசமான சூறாவளி ஒன்றாக அமைய வாய்ப்புள்ளதாக எதிர்வு கூறப்படுகிறது.
இந்த சூறாவளியால் கியூபாவில் பாரிய வெள்ளப் பெருக்கு மற்றும் பலத்த சேதங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் உயிரிழப்புகள் குறித்து அறிக்கையிடப்படவில்லை.
கியூபாவில் சூறாவளியையடுத்து 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடு வாசல்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். ஏற்கனவே டொமினிக் குடியரசு, ஹெய்ட்டி மற்றும் ஜமைக்காவைத் தாக்கிய இச்சூறாவளியால், 81 பேருக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் இந்த சூறாவளியானது இன்று திங்கட்கிழமையோ அன்றி மறுநாள் செவ்வாய்க்கிழமையோ அமெரிக்க வளைகுடா கடற்கரையைத் தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.