நான் அக் காலங்களில் சூரியனைக் காணவில்லை. எனது ஞாபகத்தில் முகில் கூட்டங்கள் நிரம்பிய ஒளியற்ற பகற்பொழுதே நினைவில் உள்ளது என சிலியின் இருண்ட காலமான Augusto Pinochet ன் ஆட்சிக் காலத்தை நினைவு கூறுகின்றார் Pablo Larraín. Augusto Pinochet ஆட்சியைக் கைப்பற்றியபோது பப்லோ லரைனுக்கு மூன்று வயது.
17 வருடங்கள் கடுங்கோல் ஆட்சிபுரிந்த மிகமோசமான இராணுவ சர்வாதிகாரி ஒகஸ்ரோ பினோசெட். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சோசலிச கட்சியைச் சேர்ந்தவரும் வைத்தியக் கலாநிதியுமான Salvador Allende. இவர் 1973ம் ஆண்டு ஆவணி 23ம் நாள் ஒகஸ்ரோ பினோசெட் வை புதிய இராணுவ தளபதியாக நியமிக்கின்றார். இது நடைபெற்று ஒரு மாத காலம் முடியமுன்னரே புரட்டாதி 11ம் நாள் 1973ம் ஆண்டு இராணுவ சதி மூலம் ஆட்சியைக் கைப்பற்றுகின்றார் ஒகஸ்ரோ பினோசெட். இதன் பின்னர் அடுத்த 17 ஆண்டுகள் சிலி கடுமையான மனித உரிமை மீறல்களையும் அட்டூழியங்களையும் சந்திக்கின்றது. சுமார் 3200 அரசியல்வாதிகள் கொல்லப்பட்டனர். குழந்தைகள் சிறுவர்கள் பெண்கள் உட்பட 110000 பேரளவில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர். படு கொலை செய்யப்பட்டனர். சிக்காகோ பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றிருந்த சிலி நாட்டு பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைப் பிரகாரம் பல பொருளாதார மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
திறந்த சந்தைப் பொருளாதார முறை அமுல்படுத்தப்பட்டது. தொழிற்சங்கங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. அரச நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டன. இவரது ஆட்சிக்கு பக்கபலமாக அமெரிக்க உளவு நிறுவனம் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. தொடர்ச்சியான மக்கள் எதிர்ப்பு போன்றவற்றின் விளைவாக 1988ல் ஒகஸ்ரோ பினோசெட் ஒரு சர்வசன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்தினார். இதில் 55.99 வீதமானோர் இவர் ஜனாதிபதியாக தொடர்வதை எதிர்ப்பதாக தெரிவித்தனர். இதனைத் தொடாந்ர் 1990ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற Patricio Aylwin இடம் நாட்டைக் கையளித்து விட்டு அதிபர் பதவியைத் துறக்கின்றார். இவர் இத் தேர்தலில் போட்டியிடமுமில்லை. இதன் பின்னரும் 1998ம் ஆண்டு வரை இராணுவத் தளபதியாக தொடர்ந்து பதவி வகிக்கின்றார். இராணுவத் தளபதி பதவியைத் துறந்து சில மாதங்களில் இங்கிலாந்து சென்ற போது இவர் ஆட்சி செய்த போது செய்த மனித உரிமை மீறல்களுக்காக கைது செய்யப்படுகின்றார்.
பின்னர் சுகயீனத்தை காரணமாக காட்டி விடுதலை செய்யப்படுகின்றார். 2000ம் ஆண்டில் சிலிக்குத் திரும்பிய இவரை 2004ம் ஆண்டு சிலி நீதிபதி ஒருவர் இவர் மீது வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளலாம். உடல் நலன் நன்றாக உள்ளது என தீhப்பளிக்கின்றார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்படுகின்றார். இவர் இறக்கும் பொழுது இவர் மீது 300க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையிலிருந்தன. இன்று வரை இவரது ஆட்சியில் காணாமல் போனோரில் 3000 பேர் எங்கிருக்கின்றார்கள் என்ன ஆனார்;கள் என்பது தெரியாது. இவரது ஆட்சியை ஒத்த ஆட்சியொன்றை மகிந்த இராஜபக்ச நடாத்திக் கொண்டிருக்கின்றார்.
இன்றைய சிலி நாட்டு மக்கள் இரு பிரிவினராக உள்ளனர். ஒரு பிரவினர் சிலியின் கொடுங்கோல் இராணுவ அதிபர் ஒகஸ்ரோ பினோசெட் வாழ்ந்தோர். மற்றைய பகுதியினர் இக் காலத்தில் வாழாதோர். நான் ஒரு அரசியல்வாதியல்ல, ஒரு சமூக போராளியுமல்ல ஆனால் நான் அக் காலகட்டத்தில் பிறந்து மக்களின் அவலங்களை கண்கூடாக கண்டு உணர்ந்தவன். எனவே தான் எனது படங்கள் அக் காலகட்டத்தை பிரதிபலிக்கின்றன என்கிறார் பப்லோ லறைன். இவர் மொத்தமாக நான்கு படங்களை இது வரை இயக்கியுள்ளார். அவற்றுள் மூன்று படங்கள் ஒகஸ்ரோ பினோசெட்டின் ஆட்சிக் காலத்தைப் மையமாகக் கொண்டுள்ளது. இது துன்பியலின் மூன்றன் தொகுதியாகும். இது வரை ஒரு குறிப்பிட்ட ஆட்சியை மையமாகக் கொண்ட மூன்றன் தொகுதிகள் திரைப்படமாகியது வெகு குறைவேயாகும். இப் படங்களை இயக்கியதன் மூலம் பப்லோ லறைன் உலகின் குறிப்பிடத்தக்க அரசியல் திரைப்பட இயக்குனராக கருதப்படுகின்றார்.
“நான் என்னை நோக்கி பல கேள்விகள் கேட்டுக் கொண்டேன். எனது நாட்டிற்கு என்ன நடந்தது? எனக்கு அரசியல் அபிப்பிராயம் உண்டு. அரசியல் அடையாளமும் உண்டு” என ஒரு பேட்டியில் பப்லோ லறைன் குறிப்பிடுகின்றார். இவரது கருத்தின் வெளிப்பாட்டை இவரது படங்களில் காணலாம்.
மூன்றன் தொகுதியின் முதலாவது படம் ஒகஸ்ரோ பினோசெட்டின் ஆட்சிக் காலத்தின் ஆரம்பத்தையும், இரண்டாவது படம் 78-79 ஆண்டுகள் ஆட்சிக்காலத்தின நடுப்பகுதியையும் மூன்றவாது படம் இறுதிப் பகுதியையும் பதிவுசெய்துள்ளது. இம் மூன்று படங்களுக்குள்ளும் ஒன்றுக் கொன்று ஒரு உரையாடலைக் கொண்டுள்ளது. மூன்று படங்களின் பாத்திரங்களும் அரசியல் சூழல் தங்களை பாதிக்காது என நினைப்பினும் அவர்களை அகத்திலும் புறத்திலும் அதிகாரமும் ஆட்சியுமே இயக்கின. இதனை இவரது மூன்று படங்களிலும் மிகத் தெளிவாகக் காணலாம்.
Tony Manero
இது இவரது முதலாவது படம். ஒகஸ்ரோ பினோசெட்டின் ஆட்சிக் காலத்தின் ஆரம்பப் பகுதியில் நடைபெறுகின்றது. ரொனி மனீரோ என்ற பாத்திரம் Saturday Night Fever 1977ல் வெளிவந்த ஹொலிவ+ட் திரைப்படம். இது ஒரு இசை நடனப் படம். இது நியு யோர்க் சஞ்சிகையில் நிக் கோஹ்னின் Tribal Rites of the New Saturday Night என்ற ஆக்கத்தை மையமாகக் கொண்டது. இதில் ரொனி மனீரோவாக நடித்திருப்பவர் ஜோன் ரவோல்ரா. அமெரிக்காவில் பெரும் வரவேற்பை பெற்றது இப்படம். டிஸ்கோ இசை பிரபல்யம் பெற இப்படமும் ஒரு காரணமாகவிருந்தது. இப் படத்தில் நடித்தமைக்காக ஜோன் ரவோல்ரா ஒஸ்காரின் சிறந்த நடிகர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
ஜோன் ரவோல்ராவின் ரொனி மனீரோ பாத்திரத்திற்கு; உலகெங்கும் பலலட்சக் கணக்கான ரசிகர்கள். இவர்களில் ஒருவரே பப்லோ லறைனின் கதாநாயகன். ரால் க்கு 52 வயது. உள்ளூர் தொலைக் காட்சி ஒன்றில் நடைபெறும் நடனப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பது ராலின் ஆசை. இவர் தன்னை ஒரு ரொனி மனீரோவாகவே மாற்ற முயற்சிக்கின்றார். இவருக்கு தொடர்ச்சியாக தொந்தரவாக இருக்கும் இவரது காதலி, இவருக்கு மேல் விருப்பம் கொண்ட காதலியின் மகள், இவர் மேல் நாட்;டம் கொண்ட உள்@ர் நடனகத்தின் முதிய பெண்மணி இவர்கள் அனைவரையும் விட இவருக்கு நடனத்தின் மேல் தான் நாட்டம், காதல் ஏன் வெறி என்று கூடச் சொல்லலாம்.
இச் சூழலைச் சுற்றி ஒகஸ்ரோ பினோசெட்டின் இராணுவம். தப்பித் தவறி அரசியல் கதைப்பினும் தலை பறக்கும். படத்தில் அவ்வப்போது தலைகாட்டும் இராணுவ வாகனங்களும், இராணுவ வாகனங்களைக் கண்டவுடன் மக்கள் ஒழிந்து கொள்ளும் காட்சிகளும் புறச் சூழலின் கொடூரத்தை வெளிப்படுத்துகின்றன.
பப்லோ லறைன் இவ் உலகத்தை உலகிற்கு காட்டியுள்ளார். சோசலிச அரசை வீழ்த்திய அமெரிக்காவும் அதனது உளவுப் படையும் சிலிக்குள் உலகமயமாதல் என்பதன் பெயரில் தங்களது கலாச்சாரத்தை திணித்தார்கள். அதன் விளைவை இப் படத்தினுடாக வெகு இயல்பாக பப்லோ லறைன் படைத்துள்ளார். படத்தின் நாயகன் சிலியின் புதிய கொள்கையினால் பாதிக்கப்பட்டவர். இவரைச் சுற்றி கொடூர அரசையும் உலகமயமாதலையும் இயக்குனர் அமைத்துள்ளார். இல்லை இயல்பானதும் அதுவேதான். இதனால் தான் இயக்குனர் ராலை ஒரு உளவியல் பாதிப்புக்குள்ளானவராக (pளலஉhழியவாiஉ) படைத்துள்ளார். இது புறச்சூழலின் கொடூரத்தால் ஏற்பட்டது என்பது தான் இயக்குனரின் வாதமாகவுள்ளது.
ராலின் பாத்திரத்தின் பனமுகத் தன்மையை இயக்குனர் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். ராலுக்குள்ள பாலியல் தேடல்கள், பாலியல் இயலாமை, வெறித்தனமாக ஒருவரது பாணியை பின்பற்றல், சுயத்தை இழத்தல் என ராலின் ஒவ்வொரு முகங்களையும் வெளிப்படுத்தியுள்ளார். இவற்றில் சில குறிப்பாக சுயத்தை இழத்தல் ஒருவரை பின்பற்றல் (அமெரிக்கா) போன்றன ஒகஸ்ரோ பினோசெட்டின் ஆட்சிக்காலத்தல் சிலிக்கு ஏற்பட்டதையும் படம் வெளிவந்த காலத்தில் சிலி அதனை தொடர்வதையும் சுட்டி நிற்கின்றது.
இவரது படங்களில் ஒளி ஒரு பிரதான பாத்திரமாக வெளிப்படும். சூழலின் தன்மையை குணத்தை ஒளி வெளிப்படுத்தும். இப் படத்தின் காட்சிகள் முழுவதும் குறைந்த ஒளியிலும் முகில் கூட்டம் நிறைந்த வெளிச்சம் குறைவான பகல் பொழுதுகளிலும் படமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக ஒனியை பிரதானமாக சூழலின் தாக்கத்தை வெளிப்படுத்த பயன்படுத்தும் இயக்குனர்களுள் எமக்கு மிகவும் அறிமுகமான பிரசன்னா விதானகே குறிப்பிடத்தக்கவர்.
இப் படத்தில் ராலாக அல்பிரடோ கஸ்ரோ மிகவும் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நகைச்சுவையாக, கோபக்காரராக, வெறித்தனம் கொண்டவராக, பாவப்பட்டவராக பல் வேறு பரிமாணங்களை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
இப் படம் ஒஸ்காரின் சிறந்த பிற மொழிக்கான திரைப்படவிருதின் இறுதிப்பட்டியலில் இடம் பெற்றிருந்தது. ஆனாலும் சிறந்த பிற மொழிப்படத்துக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்படும் ஐந்து படங்களுள் ஒன்றாக அமெரிக்காவின் புற அரசியலை விமர்சிப்பதினால் பரிந்துரைக்கப்படவில்லை.
Post Mortem பிரேத பரிசோதனை
இது பப்லோ லறைனின் ஒகஸ்ரோ பினோசெட்டின் ஆட்சிக்காலத்தைப்பற்றிய இரண்டாவது படம். என்னை மிகவும் பாதித்த படம். இப் படத்தை முதலில் பார்த்த பொழுது எனது காலங்களில் நான் மிகவும் அறிந்த அனுபவித்த இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் நினைவுக்கு வந்தது. இப் படம் ஒகஸ்ரோ பினோசெட்டின் கொடூர முகங்களை வெளிப்படுத்த இயக்குனர் கையாண்ட உத்தியாக வெளிப்படுகின்றது. படத்தின் தலைப்பே உள்ளடகத்தை தெரிவிக்கின்றது.
பப்லோ லறைனின் கணனியில் சல்வடோர் அல்லெண்டேயின் பிரேத பரிசோதனைப் பற்றிய முடிவுகளைத் தேடிய போது இப் படத்துக்கான கருவும் தேவையும் தோன்றியதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இப் படம் சல்வடோர் அல்லெண்டேயின் மரணத்துக்கான கூறுகளை காரணங்களை ஒகஸ்ரோ பினோசெட்டின் ஆட்சிக் காலத்தில் பப்லோ லறைனின் தேடுதலாக அமைந்துள்ளது. புரட்டாதி 11,1973 சல்வடோர் அல்லெண்டே தனது நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றி முடித்த போது துப்பாக்கி சுடும் சத்தங்கள் கேட்டன. இதனை ஒகஸ்ரோ பினோசெட்டின் ஆதரவாளர்கள் அதிகாரிகள் தன்னைத் தானே சுட்டுக் கொன்ற சூட்டுச் சத்தம் என்றனர். அல்லெண்டே ஆதரவாளர்கள் இராணுவத்தின் துப்பாக்கிச் சத்தம். இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டனர் என்றனர். பிரேத பரிசோதனை தற்கொலை என உறுதிசெய்தது. 2008ல் தடவியற் நிபுண வைத்தியர் லூயிஸ் ரவனாலின் கருத்துப்படி இரண்டு வௌ;வேறு துப்பாக்கிகளில் இருந்து வந்த குண்டுகளே அல்லெண்டேயின் உடலில் காணப்பட்டன. முதலில் பிரேத பரிசோதனை நடாத்தியோர் சந்தேகத்திற்கு இடமான பல விடயங்களை கவனத்திலெடுத்து ஆராயவில்லை என மேலும் குற்றஞ்சாட்டியிருந்தார். பப்லோ றைனின் ஆய்வுக்கான காரணங்களை இக் கூற்று மேலும் உறுதிப்படுத்துகின்றது.
இப் படத்தில் மரியோ என்ற பிரதான பாத்திரத்தை ஏற்று அல்பிரடோ கஸ்ரோ மிகவும் இயல்பாக நடித்துள்ளார். ராலாக ரொனி மனீரோவில் தோன்றியமைக்கு எதிர்மறையான பாத்திரம். இவர் பிரேத பரிசோதனையகத்தில் தடவியல் உதவியாளராக கடமைபுரிந்தார். பிரேத பரிசோதனை வைத்திய நிபுணரின் முடிவுகளை தட்டச்சில் பதிவு செய்வதும் இவரது பணிகளுள் ஒன்று. இவருக்கு இவரது வீட்டின் முன்னால் வசிக்கும் நான்சி மீது நாட்டம். நான்சி ஒரு நடனகத்தில் வேலை பார்த்து விட்டு இப்பொழுது வீட்டில் தனியாக இருக்கின்றார். நான்சி ஒகஸ்ரோ பினோசெட்டின் அரசுக்கு எதிராக போராடும் இடது சாரிகளுடன் நேரடித் தொடர்புள்ளது. அவர்களது ஒரு ஆதரவாளர்.
பிரேத பரிசோதனையகத்தில் உள்ளோரும் அரசுக்கு எதிரான கருத்தைக் கொண்டுள்ளார்கள். ஒரு நாள் மரியோ வேலைக்கு வரும் பொழுது அங்கு இராணுவத்தினர் கட்டிடத்தினுள் காணப்படுகின்றனர். இவர்களது நடிவடிக்கைகள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன. மற்றொரு நாள் மரியோ,பிரேத பரிசோதனை வைத்தியர், உதவியாள பெண் ஆகியோரை இராணுவம் ஒரு மருந்தகத்திற்கு ஏற்றிச் செல்கின்றது. அங்கு இவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்குள்ளான ஒரு உடலை பரிசோதிக்கின்றனர். இராணுவ அதிகாரிகள் இவர்களது நடிவடிக்கைகளை கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர். வைத்திய நிபுணர் தனது முடிவுகளை தெரிவிக்கின்றார். துப்பாக்கி முனையில் அவர் இது தற்கொலையாக இருக்கலாம் எனத் தெரிவிக்கின்றார். அந்த உடல் சல்வடோர் அல்லெண்டேயினது உடல். மரியோ அல்லண்டே தற்கொலைதான் செய்து விட்டார் என்கின்றார். ஆனால் இவருடன் வேலை பார்க்கும் பெண் இது இராணுவத்தின் கொலை எனத் தெரிவிக்கின்றார். இவர்கள் தங்களுக்குள் வாக்கு வாதப் படலாம். ஆனால் அறைக்கு வெளியே இவர்களால் பேச முடியாது.
இராணுவ அதிகாரி இவர்களுக்கு கூறுகின்றார் “ஒவ்வொரு நாளும் பரிசோதனைக்கு வரும் உடல்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. இதனால் இனி மிகவும் சுருக்கமாக பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இங்கு கொண்டுவரப்படும் உடல்களில எத்தனை துப்பாக்கிச் சூடுகள் உள்ளன. எங்கே உள்ளன. அதனை மாத்திரம் பதிவுசெய்து விடுங்கள். அதற்கு மேல் எந்த பரிசோதனையும் தேவையில்லை” என்கின்றார்.
மற்றொரு காலை மரியோ வேலைக்குச் சென்ற போது இவருடன் வேலை பார்க்கும் சன்ரா வைத்திய நிபுணரைப் பார்த்து சத்தமிடுகின்றார். இதனை இராணுவ அதிகாரி பார்த்துக் கொண்டு நிற்கின்றார். பரிசோதனை அலுவலகம் முழுவதும் உடல்களால் நிரம்பிக் காணப்படுகின்றது. அப் பெண் உரத்த குரலில் “என்னால் இதனை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. உயிருடன் கூட உடல்கள் இறந்ததாக கொண்டு வரப்படுகின்றன. இப்பொழுதும் இங்கு சில உடல்கள் உயிருடன் உள்ளன. இவர்களைக் காப்பாற்றுங்கள்” எனக் கூச்சலிடுகின்றார். இராணுவ அதிகாரி மிகவும் அமைதியாக சன்ராவை நோக்கி நகர்கின்றார். தனது துப்பாக்கியை வெளியே எடுத்து இனிமேல் அந்தப் பிரச்சினை இருக்காது எனக் கூறி உயிருடன் இருந்த உடல்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்கின்றார்.
இப் படம் உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டிருந்தாலும் இயக்குனர் தனது விமர்சனப்பார்வை ஒன்றையும் இங்கு முன்வைக்கின்றார். பிரேத பரிசோதனை செய்யும் வைத்தியரையோ ஊடாகவே அல்லது வேறு முன்நிலைப் பாத்திரங்களையோ கதை சொல்லியாக முன்வைக்கவிலலை. பிரேத பரிசோதனை அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு சாதாரண அலுவலரின் பார்வையிலேயே திரைக் கதையை அமைத்துள்ளார். யார் இந்த மரியோ? அல்லண்டேயினது உடல் பரிசோதனை முடிந்த பின்னரான அறிக்கையில் மூவர் கையொப்பங்களிருந்தன. இருவர் பிரபல்ய நிபுணர்கள். மூன்றாமவர் மரியோ கோர்நெஜோ. இவர் அங்கு வேலை பார்த்த ஒரு அலுவலர். இவரைத் தேடிச் சென்ற போது அவர் இறந்து விட்டிருந்தார் அவரது மகனும் இதே வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றார். இவரது பிரசன்னத்தைப் பற்றி எவருக்கும் கவலை இல்லை. அதே சமயம் இவரைப் பற்றியும் எவருக்கும் அக்கறை இல்லை. ஆனால் இவர் சரித்திர பிரசித்தி பெற்ற முக்கிய படிவத்தில் கையொப்பமிட்டுள்ளார். இயக்குனர் இவரது கண்களூடாக திரைப்படத்தை படைத்துள்ளார்.
NO
ஒகஸ்ரோ பினோசெட்டின் கொடுங்கோல் ஆட்சியைப் பற்றிய பப்லோ லறைனின் மூன்றாவது படம். ஒகஸ்ரோ பினோசெட்டின் ஆட்சிக் கால முடிவைப் வெளிப்படுத்தும் படம். இப் படத்தில் 30 வீதமான காட்சிகள் உண்மைச் சம்பவங்களினை சம்பவங்கள் நடைபெற்றபோது பதிவு செய்த நாடாக்களில் இருந்து பெறப்பட்டவை.
ஒகஸ்ரோ பினோசெட் சர்வதேச அழுத்தத்தின் பயனாக தனது ஆட்சியை நியாயப்படுத்த விரும்பினார். புதிதாக அமெரிக்க அரசின் ஆதரவுடன் உருவான மத்திய, மத்திய மேல் தட்டு வர்க்க மக்களின் வாக்கு தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் களத்தில் இறங்கினார். இது தேர்தல் அல்ல. சர்வசன வாக்கெடுப்பு. ஒகஸ்ரோ பினோசெட் தொடர்ந்து ஆட்சியில் இருக்க மக்கள் ஆதரவளிக்கின்றார்களா? அல்லது இல்லையா? இங்கு ஆம், இ;ல்லை. ஒன்றுக்கு வாக்களிக்க வேண்டும்.
உலகம் பல மிக முக்கிய சர்வசன வாக்கெடுப்புக்களைச் சந்தித்துள்ளது. நியுபவுண்டலன்ட் பொருளாதாரத்தில் மிக மோசமான நிலையில் இருந்தபொழுது 1948 ஆனி மூன்றாம் நாள் சர்வசனவாக்கெடுப்பு ஒன்றை நடாத்தியது. முதலாவது கனடாவுடன் இணைவது, இரண்டாவது தொடர்ந்து தனி நாடாக சுதந்திரமாக இயங்குவது, மூன்றாவது பொருளாதார ரீதியாக அமெரிக்காவுடன் மிக நெருக்கமாக இணைந்து இயங்குவது ஆகிய மூன்று விடயங்களை நோக்கி சர்வசனவாக்கெடுப்பு நடாத்தியது. இதில் எந்த விடயத்திற்கும் 50வீதமான வாக்குகள் கிடைக்காதபடியால் அதிக வாக்குகளை எடுத்த முதல் இரண்டு விடயங்களை மீள வாக்குக்கு விட்டார்கள். மூன்றாவதாக வந்த அமெரிக்காவுடன் இணைவது நீக்கப்பட்டுவிட்டது. ஆடி 28ம் நாள் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் 52.3வீதமானோர் கனடாவுடன் இணைவது என வாக்களித்தனர். அதன் படி நியுபவுண்டலன்ட் கனடாவுடன் இணைந்தது. இதே கனடாவில் இருந்து தனி நாடாக வேண்டுமென கியுபெக் மாநிலம் (பிரென்ச் மொழி பேசும் மக்கள் அதிகமாக வாழும் பிரதேசம்) இரு தடவைகள் சர்வசனவாக்கெடுப்பை நடாத்தியது. முதலாவது வாக்கெடுப்பு 1980ம் ஆண்டு வைகாசி 20ம் நாள் நடைபெற்றது. அப்போதைய கனடிய பிரதமரான ரூடோ கியுபெக் மாநிலத்தைச் சேர்ந்தவர். 60 வீதமான மக்கள் பிரிவினைக்கு எதிராக வாக்களித்தனர். இரண்டாவது வாக்கெடுப்பு 15 வருடங்களின் பின்னர் 1995 ஐப்பசி 30ம் நாள் நடைபெற்றது. இதில் 51வீதமானோர் பிரிவினைக்கு எதிராக வாக்களித்தனர். இன்றும் கியுபெக் மாநிலம் கனடாவின் ஒரு மாநிலமாகவே உள்ளது. இவற்றைவிட தென் ஆபிரிக்காவில் டி.கிளார்க் புதிய ஆட்சி மாற்றத்துக்காக நடாத்திய சர்வசன வாக்கெடுப்பு, மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவும் நடாத்திய வாக்கெடுப்புக்கள் மிக முக்கியமானவை. அவ்வரிசையில் சிலியில் நடைபெற்ற வாக்கெடுப்பும் அமைந்திருந்தது. கியுபெக்கைப் போன்றே சிலி அரசும் சாதகமான பதிலொன்றையே மக்களிடம் எதிர்பார்த்தது.
இப் படம் கான்ஸ் திரைப்படவிழாவின் Directors’ Fortnight பிரிவில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. சிலி எழுத்தாளர் அந்தோனியோ ஸ்கர்மேரா ன் நாடகத்தை மையமாகக் கொண்டது. சர்வதேச விருதுகளைப் பெற்ற Il Postino (The Postman) இவரது நாவலை மையமாகக் கொண்டது.
“ர்ஹோம்பஸ் மீடியா என்ற கனடிய நிறுவனம் அன்ரனியோ வின் சர்வசனவாக்கெடுப்பு (The Referendum) நாடகத்தை கருவாகக் கொண்டு ஒரு திரைப்படம் தயாரிக்க விரும்பியது. இங்கிருந்து தான் ஆரம்பமானது. நாங்கள் பலரிடம் விசாரித்தோம். பல ஆய்வுகளை மேற்கொண்டோம். ஊடகங்கள், தொலைக்காட்சி படங்கள் போன்ற பலவற்றை மீளாய்வு செய்தோம். வேறெந்த சர்வாதிகாரியும் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து ஆட்சியை விட்டு வெளியேறவில்லை. வழமையாக இரத்தம் சிந்தி உடல்கள் குவிந்து தீ பரவிய பின்னரே வெளியேற்றம் நிகழும். இந்த ஆட்சி மாற்றம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது “ என இயக்குனர் பப்லோ லறைன் செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார்.
ரெனே ஸாவெற்ற விளம்பர நிறுவனத்தின் இளம் அதிகாரி. ஆரம்பத்தில் ஒதுங்கியிருக் விரும்பியபோதும் பின்னர் “இல்லை” பிரச்சார அணிக்காக களமிறங்குகின்றார். ஒகஸ்ரோ பினோசெட்டின் வசம் சகலதும் உள்ளது. தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள் என அனைத்தும் அவர் வசம். இப்பொழுது ஊடகங்கள் அரச இயந்திரம் அனைத்துக்கும் எதிராக போராடவேண்டும். ஒகஸ்ரோ பினோசெட்டின் ஆட்சியில் நடைபெற்றவற்றில் எதை மறப்பது எதை நினைவில் வைத்திருப்பது? சர்வசன வாக்கெடுப்பு களம் சூடு பிடிக்கின்றது. இவர்கள் தயாரித்த விளம்பரத்தை அரச இயந்திரங்களை மீறி எவ்வாறு மக்களிடம் கொண்டு சென்றார்கள்? படமும் நேரடியாகவே பல விமர்சனங்களை முன்வைக்கின்றது. பப்லோ லறைன் தனது முந்தைய படங்களைப் போல் நேரடியாக, இயல்பாக, எளிமையாக காட்சிகளை அமைத்துள்ளார். முடிவில் 56 வீதமானோர் ஒகஸ்ரோ பினோசெட்டின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர ஆதரவளித்தனர். 1978ல் இவர் ஆட்சிக்கு வந்த ஆரம்ப நாட்களில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்டனத்தை அடுத்து நடைபெற்ற சர்வசன வாக்கெடுப்பில் 78 வீதமானோர் ஒகஸ்ரோ பினோசெட்டின் ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த முடிவுகளை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளத் தயங்கியது.
ரெனே ஸாவெற்றாக கேள் கார்சியா இயல்பாக நடித்துள்ளார். இவர் மெக்சிக்கோவைச் சேர்ந்த நடிகர். ரொரண்ரோ சர்வதேச திரைப்படவிழா ஒன்றில் இயக்குனர் இவரைச் சந்தித்துள்ளார். பப்லோ லறைனின் முதல் இரண்டு படங்களில் பிரதான பாத்திரத்தில் நடித்த அல்பிரடோ கஸ்ரோ இப் படத்தில் ரெனேவின் தலைமை அதிகாரியாக நடித்துள்ளார். இவர் இப்படத்தில் மிகவும் வித்தியாசமாக தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
பப்லோ லறைனின் குடும்பம் சர்வசன வாக்கெடுப்பில் ஒகஸ்ரோ பினோசெட்டுக்கு ஆதரவாகவே வாக்களித்தந்திருந்தனர். பப்லோ அப்பொழுது சிறுவன். இப்பொழுது தனது கருத்தை இப் படத்தினூடாக வெளிப்படுத்தியுள்ளார். சர்வசன வாக்கெடுப்பின் முடிவுகளுக்கு அமைய ஒகஸ்ரோ பினோசெட் அதிபர் பதவியில் இருந்து விலகி தொடர்ந்து இராணுவ தளபதியாக 1998ம் ஆண்டு வரை பதவியில் இருந்தார்.
பப்லோ லறைனின் ஒகஸ்ரோ பினோசெட்டின் கால பயணமாக இப் படங்களை கருதலாம். இப் படங்களின் ஊடாக ஒகஸ்ரோ பினோசெட்டின் அரசினை மீள மக்கள் முன் வைத்துள்ளார். இப் படங்கள் ஜனநாயக மீறல்கள் அரசியல் கொலைகள், மக்கள் மீதான வன்முறைகள், பெண்கள் சிறுவர்கள் மீதான வன்தாக்கங்கள் என்பனவற்றை மாத்திரம் பதிவு செய்யாமல் சிலியின் பொருளாதாரக் கொள்கைகளில் ஒகஸ்ரோவினால் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் சிலியின் பொருளாதார வளத்தை சின்னாபின்னமாக்கியதையும் பதிவு செய்துள்ளார். இடது சாரி ஜனாதிபதி அல்லெண்டே ஆட்சிக் கால மாற்றங்களை அமெரிக்காவும் ஒகஸ்ராவோவும் அழித்து ஊடக பிரச்சாரங்கள் மூலம் மக்கள் ஆதரவையும் பெற முயன்றதையும் இவரது இம் மூன்று படங்களும் சுட்டிக் காட்டுகின்றன.
ஒகஸ்ரோவின் ஆட்சிக் காலத்தில் மக்களைக் கொன்ற கொடுமைப்படுத்திய அதிகாரிகள் இன்று மக்கள் மத்தியில் சாதாரணமாக தண்டனை எதுவும் பெறாமல் குற்றமற்றவர்களாக நடமாடுகின்றார்கள் என்பதையும் இவரது படங்களினூடாக நாம் காணலாம்.
இவர் தனது படங்களை படமாக்க முன்னர் பலவித பரிசோதனைக் காட்சிகளை படமாக்கி பரீட்சித்துள்ளார். இறுதியில் Ikegami கமாராவை பயன்படுத்தினார். “இதனுள் பச்சை, மஞ்சள், சிகப்பு என மூன்று நிற குழாய்கள் உள்ளன. எனவே இது ஒரு வித்தியாசமான தோற்றத்தைக் கொடுக்கும். ஆனாலும் இக் கமரா படப்பிடிப்புக்கு பின்னரான தயாரிப்புக்கு ஏற்றதல்ல. இது ஒரு வழக்கிழந்த முறை. மீண்டும் ஹொலிவ+ட்டில் பழைய கமாராக்களை வாங்கி வைத்திருக்கும் நிறுவனத்திடமிருந்து நான்கு கமாராக்களை வாங்கி முயற்சித்த பார்த்தோம். தர்கொவெச்சி 60களில் ருசியாவில் பயன்படுத்திய anamorphic Lomo lenses ஐ பயன்படுத்தினோம்.” ஏன தனது திரைப்பட படப்பிடிப்பு முறைகள் பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் மேற்கொண்டவாறு லறைன் பதிலளித்தார். இவர் மிகக் குறைந்த செலவில் தனது படங்களை படமாக்கும் பொழுது பரீட்சார்த்தமான முறைகளை மேற்கொள்கின்றார்.
இவரது படங்களின் மிக முக்கியமான பாத்திரமாக தெரிவதே பாத்திரங்களினதும் சூழலினதும் உள உணர்வு வெளிப்பாடாகும். இதற்கு இவர் பல்வேறு குறியீடுகளையும் பயன்படுத்துகின்றார். ரொனி மனீரோவில் பெரும்பாலான காட்சிகள் ஒளி குறைந்த காட்சிகளாக உள்ளன. இது இருண்ட காலத்துக்கான ஆரம்பம் என்பதை வெளிப்படுத்துகின்றது. போஸ்மோட்டம் படம் 99வீதம் இருண்ட காட்சிகளாகவே உள்ளது. இது மக்கள் இருள் சூழ்ந்த கொடுமையான ஆட்சியில் உள்ளனர் என்பதை வெளிப்படுத்துகின்றது. நோ படம் மக்கள் வெளிச்சத்தை நோக்கி செல்லவுள்ள காலம். எனவே இங்கு ஒளி ஒரு பிர்ச்சினையாகவில்லை.
இவரது படங்கள் அனைத்தும் ஒகஸ்ரோ பினோசெட்டின் ஆட்சிக் காலத்தின் மீளாய்வாகவே உருவாகியுள்ளது. இவ் ஆட்சியின் முன்னர் இயங்கிய இடது சாரிஆட்சியின் அழிவின் பிண்ணனி, இன்றைய நிலையில் ஒகஸ்ரோவின் ஆட்சி ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் என்பவற்றையும் இப் படங்கள் வெளிப்படுத்தியுள்ளது. இதனை நேரடியாகவே வெளிப்படுத்தியுள்ளார். இயக்குனரின் மனச்சாட்சியின் குரலாகவும் இப் படங்கள் தொனிக்கின்றன. இப் படங்களைப் பார்க்கும் பொழுது இலங்கையில் நடைபெற்ற கொடூர சம்பவங்களே நினைவுக்கு வந்தன.
ஒகஸ்ரோ பினோசெட்டின் ஆட்சிக் காலத்தில் இறந்த மிகச்சிறந்த படைப்பாளி பப்லோ நெருடோ. ஓகஸ்ரோவின் ஆட்சிக் காலம் பற்றிய மேலும் சில நல்ல படங்களும் விவரணத் திரைப்படங்களும் வெளிவந்துள்ளன. பிறிதொரு இதழில் அவற்றை விரிவாக பார்க்கலாம்.
“You can cut all the flowers but you cannot keep Spring from coming. ― Pablo Neruda