மும்பையில் உள்ள பாந்த்ரா புறநகர் பகுதியில் தான் பாலிவுட் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பெரும் பணக்காரர்களின் பங்களாக்கள் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தான் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வசித்து வந்தார். ஜூன் 14ம் தேதி சுஷாந்த் சிங்கின் பிரேதம் அவரது வீட்டுக் கூரையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்படுகிறது. சுஷாந்த் சிங் மன அழுத்தத்தின் விளைவாக தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் செய்யப் பட்ட பிரேத பரிசோதனை முடிவுகளும் அந்த மரணம் ஒரு தற்கொலை என்பதையே உறுதிப் படுத்தின.
சுஷாந்தின் மரணம் ஊடகங்களில் அடிபடத் துவங்கிய ஆரம்ப நாட்களில் அதில் சதிக் கோட்பாடுகள் எதுவும் இருப்பதாக யாரும் சந்தேகிக்கவில்லை. சுஷாந்த் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் ஒன்றில் நடித்திருந்தார் என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டது; தவிர, பொதுவாக மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களை தடுப்பது குறித்த விவாதமாகவும் நடந்து வந்தது.
ஜூன் மாத இறுதி இரண்டு வாரங்களிலும், ஜூலை மாத மத்தியில் வரை, சுஷாந்த்தின் தயாள குணம், எப்படி பீகாரின் நடுத்தர குடும்பத்தில் இருந்து பாலிவுட்டில் முன்னேறினார், அவரது நடிப்பாற்றல் போன்றவைகள் குறித்த செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஒரு நடிகர் என்பதால் அவரது மரணம் குறித்த செய்திக்கு இருந்த “சந்தை மதிப்பை” ஊடகங்கள் உணர்ந்து கொண்ட பின் விவாதம் வேறு திசைகளுக்கு நகரத் துவங்கியது.
பாலிவுட்டில் திறமையாளர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும், பாலிவுட்டை கட்டுப்படுத்தும் சிலர் தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கே வாய்ப்புகளை வழங்குகின்றனர் (nepotism) என்றும், இதன் காரணமாக சுஷாந்த் சிங் போன்ற திறமையானவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும், அப்படி பாதிக்கப்பட்டதன் காரணமாகவே சுஷாந்த் சிங் மன அழுத்தத்திற்கு ஆளாகி பின் தற்கொலை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் என்றும் செய்தித் தொலைக்காட்சிகள் பேசத் துவங்கின.
குறிப்பாக ரிபப்ளிக் மற்றும் அதைத் தொடர்ந்து டைம்ஸ் நௌ ஆகிய சேனல்கள் இந்த திசையில் விவாதத்தை நகர்த்திச் சென்றன.
இதையடுத்து, பாரதிய ஜனதாவின் முக்கிய புள்ளிகள் இந்த விசயத்தை கையில் எடுத்தனர். குறிப்பாக சுப்பிரமணியன் சுவாமி, பாலிவுட்டில் கான் கும்பலின் (khan gang – Sharuk Khan, Salman Khan & Aamir Khan) கொட்டம் அதிகரித்து விட்டது என்றும் அவர்களை அடக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்றும் நேரடியாக எழுத துவங்கினார். இதையடுத்து இந்துத்துவத்தின் இணையக் கூலிகள் சுஷாந்த் சிங்கின் ‘ரசிகர்களாக’ அவதாரம் எடுத்து ‘நீதி’ கேட்டு சமூக ஊடகங்களில் எழுதத் துவங்கினர். (தமிழகத்தில் பாரதிய ஜனதாவின் இணையக் கூலிகள் நேரடியாக மோடி ஆதரவாளர்களாக வருவதை விட ரஜினி ரசிகர்களாக காட்டிக் கொள்ளவே முனைப்பு காட்டுகிறார்கள் என்பதை இங்கே பொருத்தி புரிந்து கொள்ளலாம்)
ஜூலை மாதம் முழுவதும் ரிபப்ளிக், டைம்ஸ் நௌ போன்ற ஆங்கில சேனல்களும் வட இந்திய இந்தி சேனல்களும் கான் கேங்கின் ‘சதிகள்’ குறித்து விவாதங்கள் நடத்த துவங்கின. இந்தப் போக்கு ஜூன் மாத இறுதி வாரத்தில் துவங்கி ஜூலை மாதம் முழுவதும் நீடித்தது. இந்த சமயத்தில் பாரதிய ஜனதாவின் ஆதரவாளரான நடிகை கங்கனா ரனாவத் தொடர்ச்சியாக நெப்போடிசம் குறித்து சமூக ஊடகங்களில் எழுதவும், தொலைக்காட்சிகளில் பேட்டியளிக்கவும் துவங்கினார்.
கொரோனா, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் தூரத் தள்ளி வைத்த ஊடகங்கள் இதை முழுநேரமாக கையிலெடுக்கத் துவங்கின வட இந்திய ஊடகங்கள். கான் கும்பலுக்கு இருக்கும் ‘துபாய்’ தொடர்பு, நிழல் உலக தாதாக்கள் தொடர்பு, போதை மருந்து பார்ட்டிகள் துவங்கி இவர்கள் எப்படி மொத்த பாலிவுட்டையும் கட்டுப்படுத்துகிறார்கள் என்ற திசையில் நகரத் தொடங்கியது. இந்த சமயத்தில் பாலிவுட்டை புறக்கணிப்போம் (#Boycotbollywood) என்கிற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் வைரலானது. சுஷாந்த் சிங் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், பீகார் மாநிலத் தேர்தல் நெருங்கி வருவதாலும் ‘கான் கும்பல்’ விசயத்தை ஊடகங்கள் முக்கிய பேசு பொருளாக்கின. சுஷாந்துக்கு நீதி (#justice4sushant) என்பதே ஊடகங்களின் முழக்கமாக இருந்தது. அதாவது பீகாரில் இருந்து வந்த ஒரு திறமையான இளைஞனை பாலிவுட்டை கைப்பற்றி வைத்துள்ள இசுலாமிய கும்பல் திட்டமிட்டு புறக்கணித்து மரணம் நோக்கி தள்ளி விட்டதாகவும், அதற்கு நீதி வேண்டும் என்பதே மொத்த கூச்சல்களின் சாரம். இதை சமூக ஊடகங்களில் வைரலாக்கும் வேலையை பாரதிய ஜனதாவின் இணைய கூலிப்படை திறம்பட மேற்கொண்டது.ஜூலை மாத இறுதி வாக்கில் இந்த கூச்சல் மெல்ல மெல்ல சலித்துப் போனதை அடுத்து ரியா சக்ரபர்த்தி முன்னுக்கு வருகிறார்.
காட்சி 1:
ஆகஸ்டு மாத இறுதியில் ஒரு நாள் டைம்ஸ் நௌ செய்திச் சேனலில் விவாதம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. ராகுல் சிவஷங்கர் விவாதத்தை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார். ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் அந்த விவாதத்தில் விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர். விவாதம் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக நடந்து கொண்டிருந்தது. திடீரென விவாத அரங்கினுள் மூச்சிறைக்க ஓடி வருகிறார் அவரது சக நெறியாளரான நாவிகா குமார்.
“எல்லாவற்றையும் நிறுத்துங்கள், எல்லாவற்றையும் நிறுத்துங்கள். என்னிடம் வெடிகுண்டைப் போன்ற அதிர்ச்சித் தகவல்கள் உள்ளன. உடனே எல்லா கேமராவையும் இங்கே திருப்புங்கள்” என கூச்சலிடுகிறார். ராகுல் சிவஷங்கர் அதிர்ச்சியடைந்தது போன்ற முகபாவனையை காட்டுகிறார். உடனே நாவிகா, “கேமராவைத் திருப்புங்கள். என்னிடம் பை நிறைய ஆவணங்கள் உள்ளன” என்கிறார். அவரது கையில் நிஜமாகவே ஒரு பை இருக்கிறது; அதில் சில தாள்கள் துறுத்திக் கொண்டு தெரிகின்றன. உடனே எல்லா கேமராக்களும் நாவிகாவை நோக்கி திருப்ப படுகின்றன.
நாவிகா தனது பையை பிரிக்கிறார். அதனுள் அடக்கி கொண்டு வந்த தாள்களை நோக்கி கேமராக்கள் குவிக்கப்படுகின்றன. அவை மூன்றாண்டுகளுக்கு முன் ரியா சக்ரபர்த்திக்கும் அவரது தோழிகளுக்கும் இடையே வாட்சப்பில் நடந்த சில உரையாடல்களின் பிரிண்ட் அவுட். அந்த உரையாடல்களில் ரியா பார்ட்டிகளைக் குறித்து பேசியிருக்கிறார், விடுமுறை தின கேளிக்கைகள் குறித்து பேசியிருக்கிறார், எங்கே தரமான கஞ்சா கிடைக்கும் என்பது குறித்து பேசியிருக்கிறார். இதையெல்லாம் வரிக்கு வரி வாசித்துக் காட்டிய நாவிகா, ரியாவுக்கு போதைப் பழக்கம் இருந்ததாகவும், அவருக்கு ‘துபாய் தொடர்பு’ இருந்ததாகவும் (இங்கே துபாய் தொடர்பு என்பதை மும்பை நிழல் உலக தாதாக்களோடு -குறிப்பாக D கம்பெனி எனப்படும் தாவூத் கும்பலோடு – தொடர்பு என புரிந்து கொள்ள வேண்டும்) தனது புலனாய்வில் கண்டுபிடித்து விட்டதாகவும், எனவே சுஷாந்த்தையும் போதைப் பழக்கத்துக்கு அவர் அடிமை ஆக்கினார் என்பதற்கு இதுவே ஆதாரம் எனவும் முடிக்கிறார் நாவிகா.
காட்சி 2:
ஆகஸ்ட் 31-ம் தேதி டைஸ் நௌ தொலைக்காட்சியில் பாரதிய ஜனதாவின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஒரு விவாத நிகழ்ச்சி. விவாதத்தில் சுமந்த் சி ராமனும் கலந்து கொள்கிறார். சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக மகாராஷ்டிர மாநில போலீசாரை குறிவைக்கும் கேள்வி ஒன்றை சுமந்த்ராமனிடம் கேட்கிறார் நெறியாளர் ராகுல் சிவஷங்கர். தான் பதிலளிக்கத் துவங்கும் முன் தேசத்தின் ஜி.டி.பி வீழ்ச்சியடைந்த ஒரு நாளில் இப்படி ஒரு விவாதத்தில் கலந்து கொள்வது அசிங்கமாக இருக்கிறது என ஏதோ சொல்ல முற்படுகிறார் சுமந்த்ராமன். உடனே பெருங்குரலோடு குறுக்கிடும் ராகுல் சிவஷங்கர், “பேசுவதாக இருந்தால் சுஷாந்த் சிங் பற்றி பேசு, ஜிடிபி பற்றி தெரிந்து கொள்ள ஆசை என்றால் நாளிதழ்களை பார், தேசத்தின் பொன்னான நேரத்தை ஜிடிபி பற்றி பேசி வீணடிக்காதே, அப்படியே ஜிடிபி பற்றி விவாதிக்க வேண்டுமென்றால் நான் உன்னை கூப்பிட மாட்டேன், அதைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது” என கூச்சலிடுகிறார் (https://twitter.com/TimesNow/status/1300449612621205504). திகைத்துப் போன சுமந்த்ராமன் முகத்திலடிக்கப்பட்ட சாணியை வழித்துக் கொண்டு சுஷாந்த் சிங் வழக்கு பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு ஏதோ பதிலளித்து தொடர்ந்து செல்கிறார்.
0o0
சுஷாந்த் சிங் மரணித்த இரண்டே நாளில் தன்னைப் பற்றி அங்கும் இங்கும் கிசுகிசுக்கப்படுவதை உணர்ந்த ரியா சக்ரபர்த்தி, அவரது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய காதலனின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை வைக்கிறார். (https://twitter.com/Tweet2Rhea/status/1283694478465748994)
ஜூன் 14-ம் தேதி சுஷாந்த் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பின் ஏறத்தாழ 45 நாட்கள் கழித்து ஜூலை 28-ம் தேதி பீகாரில் உள்ள சுஷாந்த் சிங்கின் குடும்பத்தினர் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுப்பினர். சுஷாந்தின் தந்தை பாட்னாவில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 341 (சட்டவிரோதமாக கட்டுப்படுத்துதல்), 342 (சட்டவிரோதமாக அடைத்து வைத்தல்), 380 (திருட்டு), 406 (ஏமாற்றுதல்), 420 (மோசடி) மற்றும் 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தனது புகாரை பதிவு செய்கிறார். சுஷாந்தின் தந்தை அளித்த புகாரில் எதிரியாக சுஷாந்தின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபர்த்தியை குறிப்பிட்டிருந்தார்.
சுஷாந்த் மரணம் ஊடகங்களில் விவாதப் பொருளாகி ஓரிரு சுற்றுகள் முடிந்த பின் (அதாவது கான் கும்பல் தொடர்பாக துவைத்து காயப்போட்ட பின்) ஜூலை இறுதியில் இருந்து ஆகஸ்டு மாதம் முழுவதும் ரியா சக்ரபர்த்தியை விவாதப் பொருளாக கொண்டு வருகின்றன ஊடகங்கள். இந்த கட்டத்திற்கு பின் இது ஊடக விசாரணை (media trial) என்பதைத் தாண்டி வேறு பரிமாணங்களை எடுக்கிறது. “சுஷாந்த் சிங்கிற்கு சூனியம் வைத்தாரா ரியா?”, “சுஷாந்தின் உழைப்பில் ரியா குடும்பம் உல்லாசம்”, “சுஷாந்தின் காதல் தான் ரியாவின் ஆயுதம்”, “ரியாவின் ஆட்டம் முடிந்தது”, “ரியா என்றொரு சூனியக்காரி” – இவைகள் எல்லாம் ரியா தொடர்பாக ஊடகங்கள் நடத்திய விவாதங்களுக்கு இடப்பட்ட தலைப்புகளின் ஒரு சில மாதிரிகள் மட்டுமே.
இந்தி தொலைக்காட்சிகளில் வரும் மாமியார் மருமகள் அக்கப்போர் மெகா சீரியல்களின் கதை – திரைக்கதைகளை அப்படியே வரித்துக் கொண்ட ஊடகங்கள், கிட்டத்தட்ட ஒரு மெகாதொடர் நாடகத்தை அரங்கேற்றி வருகின்றன. ரிபப்ளிக், டைம்ஸ் நௌ, இந்தியா டுடே, நியூஸ் எக்ஸ், நியூஸ் 18 போன்ற ஆங்கில செய்திச் சேனல்களும் அனேகமாக எல்லா இந்தி செய்திச் சேனல்களும் முன்வைக்கும் திரைக்கதையை கீழ் கண்டவாறு சுருக்கமாக சொல்லலாம்:
“பாலிவுட் நடிகைகளை பார்ட்டிகளில் கலந்து கொள்ள வைத்து அங்கே வரும் அரசியல்வாதிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும், நிழல் உலக தாதாக்களுக்கும் விருந்தாக்குகிறார்கள் கான் கும்பலைச் சேர்ந்தவர்கள். அப்படி ஒரு பார்ட்டியில் சுஷாந்தின் முன்னால் மேலாளர் திஷா சாலியன் என்கிற பெண்ணை சிவசேனா தலைவரின் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசு ஒருவர் (ஆதித்ய தாக்ரேவை மறைமுகமாக குறிப்பிடுகிறார்கள்) பாலியல் வல்லுறவு செய்து கொன்று விட்டார் (உண்மையில் தொழில் முதலீடுகள் நட்டமானதால் திஷா தன் வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது போலீசாரின் விசாரணை முடிவு). திஷா பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்படும் முன் சுஷாந்துக்கு தொலைபேசியில் எல்லா உண்மைகளையும் சொல்லி விட்டார். சுஷாந்த் அந்த உண்மைகளை வெளியிட முடிவு செய்தார். இந்நிலையில் ஏற்கனவே ரியா சக்ரபர்த்தி, சுஷாந்தை சூனியத்தின் மூலமும் போதைப் பழக்கத்திற்கு ஆட்படுத்தியதன் மூலமும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததை நிழல் உலக தாதாக்கள் அறிந்து கொள்கிறார்கள். எனவே ரியாவின் மூலம் சுஷாந்த்தை மிரட்டி பணிய வைக்க முயற்சிக்கிறார்கள். அது முடியாமல் போகவே சுஷாந்தின் மன அழுத்தம் தொடர்பான மருத்துவ சிகிச்சை விவரங்களை ரியாவின் மூலம் வெளியிடுவதாக மிரட்டுகிறார்கள். ஏற்கனவே கான் கும்பலால் தொழில் வாய்ப்புகள் இன்றி தவித்து வந்த சுஷாந்த், இந்த மருத்துவ குறிப்புகள் வெளியே தெரிந்தால் தனது திரை வாழ்க்கை முடிந்து போய் விடும் என அஞ்சுகிறார். இதன் விளைவாகவே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்”
ரியா சக்ரபர்த்தியை சூனியக்காரியாக நிலைநாட்டிய ஊடகங்கள், அவரது வீட்டின் அருகே முகாமிட்டு அடித்து வரும் கூத்துகள் ஆபாசத்தையும் விஞ்சிய அருவெறுப்பின் உச்சம். நியூஸ் லாண்ட்ரி இணையதளத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ப்ரதீக் கோயல் அங்கே நடக்கும் சர்க்கசை தனது நேரடி ரிப்போர்ட்டில் துல்லியமாக பதிவு செய்துள்ளார். அதிலிருந்து சில காட்சிகளை மட்டும் பார்த்து விட்டு மேலே தொடர்வோம்.
0o0
“அதே போகிறான் பாருங்கள், அவன் தான் ரியாவின் உளவாளி” எனக் கூச்சலிடுகிறார் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் பெண் நிருபர். உடனே, காமெரா அந்த வயதான மனிதரை நோக்கி ஜூம் செய்யப் படுகின்றது. உண்மையில் அவர் ரியா வசிக்கும் அடுக்கு மாடி குடியிருப்பின் காவலாளி. அவரை மைக்குகள் சகிதம் மொய்த்துக் கொள்ளும் செய்தியாளர்கள் மாற்றி மாற்றிக் கேள்விகள் கேட்டு திணறடிக்கிறார்கள். “ஏன் ரியாவை போலீசார் பாதுகாக்கிறார்கள்?”, “இங்கே பாலிவுட் நடிகர்கள் வருவதுண்டா?”, “ஏன் எங்களை உள்ளே அனுமதிக்க மறுக்கிறீர்கள்?” அவர் எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காமல் நகர முற்படுகிறார். அவரைச் சூழ்ந்து கொள்ளும் ‘செய்தியாளர்கள்’ “ஏன் எங்களுக்கு பதிலளிக்க மறுக்கிறீர்கள்?” “எதை மறைக்கப் பார்க்கிறீர்கள்?” “ஏன் குற்றவாளிக்கு உடந்தையாக இருக்கிறீர்கள்?”
ஒருவாறாக அந்த கும்பலிடம் இருந்து தப்பிய அந்த வயதான காவலாளி, தான் செய்தியாளர்களால் மிரட்டப்படுவதாக அப்பார்ட்மெண்ட் நிர்வாகத்திடம் தெரிவிக்கிறார் – அவர்கள் போலீசாரிடம் புகாரளிக்கின்றனர். உடனே, நேரலையில் “குற்றவாளிக்கு உதவுகின்றது சிவசேனையின் மும்பை போலீசு” என கூச்சலிடுகின்றனர் செய்தியாளர்கள். இது நடந்து கொண்டிருக்கும் போதே ரியாவின் தந்தை அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து ஒரு காரில் வெளியேறுகிறார். அவருடன் ஒரு போலீசு கான்ஸ்டபிளும் இருக்கிறார். உடனே அந்தக் காரை சூழ்ந்து கொள்ளும் ‘செய்தியாளர்கள்’ அதை நகர விடாமல் தடுக்கிறார்கள். காரின் ஜன்னல் வழியே அந்த வயதானவரின் முகத்தில் மைக்குளை திணிக்கின்றனர்.
திகைத்துப் போன அவர் கார் ஓட்டுநரிடம் மேலே செல்லுமாறு கேட்கிறார். உடனே ரிபப்ளிக் பெண் செய்தியாளர் ஓட்டுநரை நோக்கி “எங்கள் கேள்விக்கு பதிலளிக்காமல் ஒரு அடி கூட நகர விட மாட்டேன்” என மிரட்டுகிறார். ஒரு வழியாக போலீசு கான்ஸ்டபிள் தலையிட்டதால் கார் மெல்ல ஊர்ந்து செல்கிறது. இன்னொரு செய்தியாளர் கூட்டத்தில் இருந்து துள்ளிக் குதித்து தன் முஷ்டியால் காரின் பானெட்டின் மீது குத்துகிறார்.
சிறிது நேரம் கழித்து ஒரு காவலரும் காவல்துறை ஆய்வாளரும் அங்கே வருகின்றனர். உடனே அவரைச் சூழ்ந்து கொள்ளும் ‘செய்தியாளர்’ பட்டாளம் கேள்விகள் கேட்டு திணறடிக்கின்றனர். “ஏன் வந்தீர்கள்?” “ரியாவை கைது செய்ய போகிறீர்களா?” “ஏன் இன்னும் கைது செய்யவில்லை” “குற்றப்பத்திரிகை வழங்கி விட்டீர்களா?”. காவல் ஆய்வாளர் கைகூப்பி இறைஞ்சுகிறார், கொரோனா பிரச்சினை இருப்பதால் கொஞ்சம் தள்ளி நின்றாவது கேளுங்களேன் என்கிறார். அந்த கூப்பாடு யார் காதிலும் ஏறவில்லை. “ஏன் வந்தீர்கள்?”. ஆய்வாளர் கடைசியில் தான் வந்த காரணத்தை தெரிவிக்கிறார்: செய்தியாளர்கள் தங்கள் குடும்பத்தினரை மிரட்டுவதாக ரியா புகாரளித்ததை விசாரிக்கவே தான் வந்ததாக குறிப்பிடுகிறார். கூட்டம் பெரும் ஆரவாரத்தோடும் போலீசுக்கு எதிரான முழக்கங்களோடும் கலைந்து போகிறது.
இந்த கூத்துகள் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு கார் அந்த இடத்தைக் கடந்து போகிறது. அதன் ஓட்டுநர் ஒரு கணம் வேகத்தை மட்டுப்படுத்தி வெளியே கூடி நின்றும் பத்திரிகை கும்பலைப் பார்க்கிறார். பின் தலையில் அடித்துக் கொண்டே அந்த இடத்திலிருந்து நகர்ந்து போகிறார். நியூஸ் லாண்ட்ரியின் செய்தியாளர் ப்ரதீக் கோயல் தன்னருகே நின்றிருந்த ஆஜ் தக் ரிப்போர்டரிடம் அந்தக் கார் ஓட்டுநரின் செய்கையைக் குறித்துக் கேட்கிறார். “இப்போதெல்லாம் பத்திரிகையாளர்களுக்கு மதிப்பே இல்லை” என்று சலித்துக் கொண்ட ஆஜ்தக் ரிப்போர்ட்டர், ரிபப்ளிக் தொழிலுக்கு வந்த பின் பத்திரிகையாளர்களின் பெயர் தாறுமாறாக நாறி விட்டது என்கிறார். “கொஞ்சம் டிராமா இருந்தால் பரவாயில்லை, ஆனால் இவர்களோ (ரிபப்ளிக்) எல்லா மட்டத்தையும் கடந்து கிழே இறங்கி விட்டார்கள். இவர்கள் அடிக்கும் கூத்துகளால் எங்களுக்கும் அழுத்தம் அதிகரித்து விட்டது” என குறிப்பிடுகிறார் ஆஜ்தக் நிருபர்.
இந்த உரையாடலை கவனித்துக் கொண்டிருந்த ஆஜ் தக்கின் கேமராக்காரர், “ரியா பற்றி வரும் 80 சதவீத செய்திகள் பொய்கள் தான். இப்ப பாருங்க, ரியாவின் வீடு இங்கேயே இல்லை. நாம் நிற்கும் இடத்திற்கு நேர் எதிர் பக்கம் தான் இருக்கிறது. ஆனால், ரிபப்ளிக் டீ.விகாரன் இங்கே இடம் வசதியாக இருக்கிறது என்பதற்காக கேமராவை செட் செய்து இங்கே இருந்து பார்த்தால் ரியா வீட்டு சமையலறையின் பின் பகுதி தெரிகிறது பாருங்கள் என்று நேரலையில் சொல்லி விட்டான்” எனச் சொல்கிறார். அதைத் தொடர்ந்து ரிபப்ளிக்கின் கேமரா கோணத்தை மற்ற சேனல்களும் காப்பியடித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு அந்தந்த சேனல் நிர்வாகங்கள் தங்கள் களச் செய்தியாளர்களையும் நேரலை வாகனங்களையும் அதே இடத்தில் முகாமிடச் சொல்லி இருக்கிறார்கள்.
ரிபப்ளிக் தனது ‘தொழிலை’ ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே எல்லா செய்திச் சேனல்களும் அதன் பாணியை நகலெடுக்கத் துவங்கியுள்ளன. செய்திகள் சொல்வது செய்திச் சேனல்களின் வேலை என்பதை ரிபப்ளிக் மாற்றியமைத்துள்ளது. நேயர்களுக்கு பரவசமூட்டும் ஒரு காட்சி இன்பத்தை (entertainment) வழங்குவதை முதன்மை நோக்கமாக மாற்றியதில் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் பங்கு மிக முக்கியமானது.
செய்திகள் மற்றும் செய்திகளைக் குறித்த விவாதங்கள் முக்கியமல்ல – இரசிகர்களின் பரவச உணர்ச்சியே முக்கியம். அதைத் தூண்டுவதற்கு என்னவெல்லாம் தேவையோ அவையனைத்தையும் செய்யலாம் என்கிறது அர்னாபின் ‘தொழில் தர்மம்’. எனவே இந்தப் புதிய சூழலில் ‘உண்மை’ என்பது பொருளற்றுப் போய் விட்டது; செய்திச் சேனல்கள் ஒரு குறிப்பிட்ட நிகழ்வை பின் தொடர்ந்து அதை தொடர்ச்சியாக நேயர்களுக்கு முன்வைக்கும் போது ஒரு ‘திரைக்கதை’ வந்து விழுகிறது. இந்த திரைக்கதையானது அந்த குறிப்பிட்ட நிகழ்வின் உண்மையான வளர்ச்சிப் போக்கை ஒட்டியும், ஒட்டாமலும், பொய்கள் சேர்ந்தும், அரசியல் உள்நோக்கங்கள் சேர்ந்தும் போகிற போக்கில் வளர்ந்து கொண்டே செல்கின்றது.
முந்தைய பகுதியில் சுஷாந்த் சிங் மரணம் குறித்து செய்திச் சேனல்கள் முன்வைக்கும் சதிக்கோட்பாடு என்னவென்று விவரிக்கப்பட்டிருக்கும் பத்தியை மீண்டும் ஒரு முறை பார்த்து விடுங்கள் – அந்த சதிக்கோட்பாடு ஒரு மெகா சீரியலின் திரைக்கதை ‘வளர்க்கப்படுவதை’ போல், வளர்க்கப்பட்ட ஒன்று.
0o0
“ரிபப்ளிக்கின் செயல்களால் எங்களுக்கும் அழுத்தம் அதிகரித்து விட்டது” என்று ஆஜ்தக் நிருபர் சொன்ன வார்த்தைகளில் பல அர்த்தங்கள் உள்ளன.
ரிபப்ளிக் தொலைக்காட்சி 2017-ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆரம்பித்த முதல் மாதத்திலேயே அர்னாப் கோஸ்வாமி கையிலெடுத்த விவகாரம், முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவில் சுனந்தா புஷ்கரின் மரணம். ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் சுனந்தாவின் மரணத்தில் சசி தரூருக்கு தொடர்பு இருப்பதாக நேரடியாகவும் மறைமுகமாகவும் தனது ஸ்டுடியோவில் இருந்து கூச்சலிட்டார் அர்னாப்.
இரண்டு வாரங்களில் மட்டும் சசி தரூருக்கு எதிராக அர்னாப் துவங்கிய ஹேஷ்டேக் பிரச்சாரங்களின் பட்டியல் இவை : #SunandaMurderTapes #SunandaNoteOut, #SunandaFreshExpose, #FreshSunandaExpose #Tharoorcharged. இவை தவிர ரிபப்ளிக்கின் யூடியூப் பக்கத்தில் சுனந்தா மரணம் தொடர்பாக தனி பிளேலிஸ்ட் ஒன்றும் உள்ளது ( “Sunanda Pushkar’s murder case”).
இதில் உச்சகட்டமாக கேரளாவில் உள்ள சசி தரூரின் வீட்டை தனது நிருபர்கள், கேமராமேன்கள் மற்றும் லைவ் கேரவன் வாகனங்களைக் கொண்டு முற்றுகையிடச் செய்தார் அர்னாப் கோஸ்வாமி. தரூரின் வீட்டிற்கு செல்பவர்களை மறிப்பது, வெளியேறிச் செல்பவர்களை மறித்து மைக்கை முகத்துக்கு நேராய் நீட்டுவது என சில நாட்கள் சென்றது. ஆரம்பத்தில் பொறுத்துப் பார்த்த சேட்டன்கள் கடைசியில் ‘நிருபர்களை’ வசமாக கவனித்து விட்டார்கள்.
அதன் பின் சசி தரூர் தில்லி உயர் நீதிமன்றத்தில் அர்னாபுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். சுனந்தாவின் மரணம் குறித்து ரிபப்ளிக் ஏதும் செய்தி வெளியிட்டால் அதில் தரூரின் தரப்பையும் கேட்டு அதையும் வெளியிட வேண்டும் என்று அந்த வழக்கில் தீர்ப்பானது. தனது தீர்ப்பின் ஒரு இடத்தில் நீதிபதி பின் வருமாறு குறிப்பிடுகிறார்:
The ‘culture of thrusting a microphone’ in the face of a person needs to be deprecated. TV viewers who want to watch action films should not watch TV debates on current affairs on the ground that it contains more action and violence than any action film. (தீர்ப்பை வாசிக்க – https://www.scribd.com/document/366093070/Shashi-Tharoor-v-Arnab-Goswami-Anr-Watermark#from_embed)
சுனந்தா மரணம் தொடர்பாக ரிபப்ளிக் அடித்த கூத்துகள் பற்றி மேலும் வாசிக்க – (https://www.altnews.in/one-month-republic-tv-fare/ & https://scroll.in/article/879066/arnab-goswami-says-its-an-oddity-that-sunanada-pushkar-chargesheet-fails-to-mention-murder )
தனது “இரை” எதுவென்று தீர்மானித்துக் கொண்ட மிருகம் அதை படிப்படியாக வீழ்த்த திட்டமிடுவதைப் போல் தான் ரிபப்ளிக் இயங்குகின்றது. அன்றைய பொழுதில் யாரை வில்லனாக காட்ட வேண்டும் என்று அர்னாப் தீர்மானிக்கிறாரோ அவர் குறிப்பிட்ட நபரை (அல்லது அந்த அபலைக்கு வேண்டப்பட்ட யாராவது அப்பாவியை) பொது இடத்தில் கேமரா சகிதம் சூழ்ந்து கொள்ளும் ரிபப்ளிக் நிருபர்கள் ஏறத்தாழ கெரோ செய்வார்கள். வாய்க்குள் மைக்கை நுழைக்க முயற்சிப்பது, மறித்து நிறுத்துவது, கேள்விக்கு தாங்கள் விரும்பிய பதில் கிடைக்காவிட்டால் தடுத்து நிறுத்துவது என அங்கே அரங்கேறும் வன்முறைக் காட்சிகளை கேமராக்கள் பதிவு செய்து கொள்ளும்.
அன்று மாலை அர்னாப் ஆரவாரத்துடன் அறிவிப்பார் “ரிபப்ளிகின் கேள்விகளைக் கண்டு ஓடி ஒளியும் ______”
ரிபப்ளிக்கின் இந்த கோமாளிக் கூத்துகள் சமூக வலைத்தளங்களில் ஒரு பிரிவினரால் எள்ளி நகையாடப்பட்டன. ஆனால், ஆகப் பெரும்பான்மையான அதன் நேயர்கள் இந்த வன்முறையை இரசித்தனர். இந்த வழிமுறைகளைப் பின்பற்றியதால் ரிபப்ளிக்கின் டி.ஆர்.பி ஆரம்பித்த ஒரு சில வாரங்களிலேயே முதலிடத்திற்கு வந்தது. அதைப் பார்த்த பிற சேனல்களும் உடனடியாக ‘விழித்துக்’ கொண்டன. மெல்ல மெல்ல ரிபப்ளிக்கின் பாணியை நகலெடுக்கத் துவங்கின.
0o0
தேசிய செய்திச் சேனல்கள் என்று சொல்லப்பட்டாலும், அவற்றின் பேசு மொழி ஆங்கிலமாக இருந்தாலும் அவற்றின் நேயர்கள் பெரும்பாலும் வட இந்தியாவைச் சேர்ந்த படித்த மேல் தட்டு வர்க்கத்தினர் தான். இவை தவிற மத்திய தர மற்றும் அடித்தட்டு மக்களின் தேவைகளை இந்தி பேசும் செய்தித் தொலைக்காட்சிகள் பூர்த்தி செய்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன் இந்தி சேனல்களில் இதைப் போன்ற கூத்துகள் சர்வ சாதாரணமாக நடந்து வந்தன.
டைம்ஸ் நௌவில் இருந்து அர்னாப் பிரிந்து வந்து ரிபப்ளிக் தொலைக்காட்சியை ஆரம்பிப்பதற்கு சற்று முன் அளித்த பேட்டி ஒன்றில், ஆங்கில செய்திச் சேனல்கள் இந்தி பேசும் சந்தையின் எதிர்பார்ப்புகளை சரிவர பூர்த்தி செய்யவில்லை எனவும், தனது புதிய சேனல் அந்த பிரிவினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதையே பிரதான நோக்கமாக கொண்டிருக்கும் எனவும் குறிப்பிட்டார். அப்போது அந்த பேட்டியை படித்த போது ரிபப்ளிக் சார்பாக ஒரு இந்தி சேனலை களமிறக்கப் போவதைத் தான் அவர் குறிப்பிடுவதாக நாம் புரிந்து கொண்டோம். ஆனால், உண்மையில் அர்னாப் “இந்தி பேசும் சந்தையின் எதிர்பார்ப்பை” அப்படியே ஆங்கில ஊடகங்களுக்கும் கடத்தி வரத் திட்டமிட்டுள்ளார். இப்போது வெற்றியும் பெற்று விட்டார்.
மாட்டுவளைய மாநிலங்களில் நிலவும் பிற்போக்கான கலாச்சாரம், பார்ப்பனியக் கண்ணோட்டம், இந்துத்துவ ஆதரவு மனப்பாங்கு போன்றவை அந்த சமூகங்களில் இருந்து படித்து வரும் மேல் தட்டுப் பிரிவினரிடையேயும் நிலவுவதில் நமக்கு எந்த ஆச்சரியமும் இல்லை – எனவே அதில் ஒரு தொழில் வாய்ப்பு இருப்பதை அர்னாப் கண்டு பிடித்திருப்பதிலும் ஆச்சர்யம் இல்லை.
எப்படி WWF மல்யுத்தம் என்பது உண்மையில் ஒரு விளையாட்டு அல்லவோ, எப்படி அது சில கதைவரிசைகளை (storyline) மையப்படுத்தி இருக்குமோ அப்படி செய்திச் சேனல்களும் செய்திகளோடு மெகா சீரியல் பாணி சதிக்கோட்பாடுகளை கலந்து கட்டி அடிக்கின்றன.
சுஷாந்த் சிங் மரணத்தை ஒட்டி ரிபப்ளிக் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி கணிசமாக உயர்ந்திருப்பதை எப்படி புரிந்து கொள்வது? இந்தியா போன்ற ஒரு பின் தங்கிய நாட்டில், அதுவும் பார்ப்பனிய கண்ணோட்டம் கலாச்சார ரீதியில் கோலோச்சும் ஒரு சமூகத்தில், மக்களின் அடிப்படை இச்சைகளைத் தூண்டி கல்லா கட்டுவது எளிது. சரியாக சொல்ல வேண்டுமென்றால், எரியத் தயாராக உள்ள வனத்தில் தான் காட்டுத் தீ வேகமாக பரவும்.
தற்போது சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான விவாதங்களின் தரத்திற்கு தங்களை இறக்கிக் கொள்ள தமது நேயர்களை செய்தித் தொலைக்காட்சிகள் மெல்ல மெல்ல பழக்கியுள்ளன. போர்னோகிராபிக்கு பழகுபவர்கள் ஆரம்பத்தில் மெல்லிய உணர்வுகளைத் தூண்டும் படங்களைப் பார்க்கிறார்கள்; ஒரு கட்டத்தில் அது அலுப்பூட்டுகிறது. போதுமான கிளர்ச்சியை அது தராத நிலையில் மேலும் மேலும் வக்கிரங்களை தேடிப் போகிறார்கள். சில ஆண்டுகளில் எல்லா வகையான ஆபாசங்களும் கிளர்ச்சியடைய வைக்காத நிலையில் கடைசியில் குழந்தைகள் வல்லுறவு மற்றும் ஸ்னஃப் எனப்படும் வல்லுறவு-கொலை தொடர்பான வீடியோக்களைப் பார்க்கும் நிலைக்குச் சென்று விடுகிறார்கள்.
இப்போது சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக ’தேசிய’ செய்தித் தொலைக்காட்சிகளில் அரங்கேறி வரும் காட்சிகள், ஸ்னஃப் வகை போர்னோகிராஃபி காட்சிகளுக்கு எந்த வகையிலும் குறைவில்லாதவை. இதை நுகர்பவர்களின் மனநிலையை நன்கு அறிந்திருப்பதால்தான், பொருளாதார பிரச்சினைகளை பேச முற்பட்ட சுமந்த்ராமனைப் பார்த்து ராகுல் சிவஷங்கர் “எனது நேரத்தையும், நேயர்களின் நேரத்தையும், தேசத்தின் நேரத்தையும் வீணடிக்காதே” என்று சொல்ல முடிகிறது.
வட இந்திய செய்திச் சேனல்களின் இவ்வாறான பண்பாட்டுத் தரமும், மாட்டுவளைய மாநிலங்களில் நிலவும் பிற்போக்கான கலாச்சாரம், மேட்டுக்குடி வர்க்கத்தின் பார்ப்பனியக் கண்ணோட்டம் ஆகியவையும் அங்கே நிலவும் இந்துத்துவ ஆதரவும் இயல்பாகவே ஒன்றோடொன்று தொடர்புள்ளவை. எண்பதுகளின் திரைப்பட வில்லன்களைப் போல், அமித்ஷா ஒரு பெட்டி நிறைய பணத்தை அடைத்து, அர்னாபை ஒரு மறைவான இடத்திற்கு வரச் சொல்லி, அவர் கையில் அந்தப் பெட்டியைக் கொடுத்து, இன்னின்ன மாதிரியெல்லாம் மக்களை முட்டாளாக்கும் வேலையைப் பார் – என்று உத்தரவிடத் தேவையில்லை.
அர்னாப்களின் நிகழ்ச்சிகள் மோடி & கோ-வின் எதிர்பார்ப்பை இயல்பாகப் பூர்த்தி செய்கின்றன. இந்தக் கேவலங்களை இயல்பாக அங்கீகரிக்கும் அளவுக்கு நேயர்களும் பழகியிருக்கின்றனர். செய்திச் சேனல்களின் ஆபாசமும் இந்துத்துவ பாசிசமும் இயற்கையான கூட்டாளிகளாக உள்ளனர்.
வடக்கை ஒப்பிட்டால் தெற்கு கொஞ்சம் மேம்பட்டது தான். சங்கிகளின் “கந்த சஷ்டி கவசத்தை” தமிழகம் தோற்கடித்து விட்டது. ஆனால், வனிதா விஜயகுமாரின் வெற்றி? அதை நினைத்தால் கொஞ்சம் அச்சமாகத்தான் இருக்கிறது.
- பா. சாரதி
https://thewire.in/women/rhea-chakraborty-sushant-singh-rajput-trial-by-media
https://thewire.in/media/editorial-rhea-chakraborty-tv-channels