இப்போது பலர் மற்றவர்களை நோக்கிச் “சுய விமர்சனம் செய்” என்று ஆணையிடுகிற தொனியிற் பேசுவதை அறியக் கூடியதாகவுள்ளது. இணையத்தளங்களில் நடக்கிற விவாதங்களில் இதை அடிக்கடி அவதானிக்கலாம்.
எதையாவது யாரேன் கண்டித்தோ விமர்சித்தோ கருத்து வெளியிட்டால் அக் கண்டனத்தையோ விமர்சனத்தையோ திசை திருப்புவதற்காகக், கருத்துக் கூறியவர் மீது ஏதாவது குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. அல்லது அதற்கும் அப்பாற் சென்று நீ முதலிற் சுய விமர்சனம் செய்து விட்டுப் பேசு என்று சொல்லப்படுகிறது.
பொதுவாக மற்றவர்களைச் சுயவிமர்சனம் செய்யுமாறு ஆணையிடுகிறவர் என்றாவது தன்னைச் சுயவிமர்சனம் செய்தவராக இருப்பதில்லை. எனவே, சுயவிமர்சனம் என்பது, ஒருவர், தான் குற்றவாளி என்று உலகறியச் சொல்லுகிற ஒரு காரியமாகவே இவர்களாற் காணப்படுகிறது. இதற்கான காரணங்கள் எவையாயிருந்தாலும், சுயவிமர்சனம் என்கிற மாக்சிய லெனினிய நடைமுறைக்குப் பயிற்றப்படாமை அவற்றுள் ஒன்று என்றே கூற வேண்டும்.
முக்கியமான விவாதங்கள் அவற்றுக்குரிய விடயச்சார்பாக அமையாமல் தனி மனிதர்களது சுய முக்கியத்துவஞ் சார்ந்த மோதல்களாக அமைய மேற்கூறியவாறான அணுகுமுறை வழி செய்கிறது. விவாதங்களில் ஈடுபடுகிற ஒவ்வொருவரும் தன்னையும் தன்னைச் சார்ந்த ஒரு சிலரையும் புனிதர்களாகவும் பிறரைத் தீயோராகவும் காட்ட முற்படுவதையும் நோக்குகிற போது, சுய விமர்சனம் என்ற பதமும் தோழர் என்ற சொல்லைப் போலவே தவறாகப் பயன்படுகிறது எனத் தெரிகிறது.
சுய விமர்சனம் என்பது ஒரு மனிதரோ அமைப்போ தனது கடந்த காலத்திலிருந்து கற்பதற்கான ஒரு நடைமுறை. எந்த ஒருவரும் தவறுகட்கு அப்பாற்பட்டவரல்ல. எந்த அமைப்பும் தவறுகட்கு அப்பாற்பட்டதல்ல. தெரிந்தும் தெரியாமலும் கருதியும் கருதாமலும் தவறுகள் நிகழுகின்றன. தவறுகளிலிருந்து கற்பதன் மூலம் ஒருவர் தன்னை முன்னேற்றிக் கொள்கிறார். கற்க மறுப்போர் முன்னைய தவறுகளை மீண்டும் செய்வதுடன் புதிய தவறுகளையும் தவிர்க்க இயலாதோர் ஆகின்றார்கள்.
சுய விமர்சனம் என்பது சிலர் நினைப்பது போல ஒரு சடங்கல்ல. மதங்கள் பரித்துரைக்கும் பூசை வழிபாடு, தொழுகை என்பன போன்ற காரியமல்ல. பாதிரியாரிடம் போய்ப் பாவ மன்னிப்புக் கேட்கிறது போன்றதுமல்ல. எங்கள் நடுவே உள்ள சில ‘அரசியற் பாதிரிமார்’ தங்களைப் புனிதர்களாகக் கருதுவதாலே தான் பிறர் தம்மிடம் வந்து சுய விமர்சனம் செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்களே தெரியவில்லை.
எனினும் ஆரோக்கியமான சுய விமர்சனம் ஒரு ஆரோக்கியமான சூழலிலேயே இயலுமானது. ஒருவரே ஒரு அமைப்போ மேற்கொண்ட ஒரு பணியோ ஒரு வேலைத் திட்டமோ எதிர்பார்த்த விளைவுகளைத் தராதபோது, அல்லது எதிர்பார்த்ததற்கு மாறான விளைவுகளைத் தருகிறபோது, அது ஏன் என்று அறிவது அவசியமானது. அல்லாமலும் தமது செயற்பாடுகளின் முன்னேற்றத்தைத் தொடர்ந்து அவதானிப்பதும் அவற்றின் சரியான பக்கங்களையும் தவறான பக்கங்களையும் காலத்துக்குக் காலம் கணிப்பெடுத்து நடைமுறையைச் சீர்செய்வதும் அவசியமானவை. எல்லா அமைப்புக்களும் ஏதோ வகையான சுயவிமர்சனத்தைச் செய்கின்றன. தனி மனிதர்களும் செய்கின்றனர். எனினும் தனிமனிதவாதமும் அகங்காரமும் தவறுகளை ஒப்புக் கொள்ள விடாமல் மறிக்கின்றன. மாறாக அவற்றை மூடி மறைக்கப் பிறரைப் பழி சொல்லுமாறு தூண்டுகின்றன.
மாக்சிய லெனினியக் கண்ணோட்டத்திலான சுய விமர்சனம் முற்றிலும் வேறுபட்டது. அது சுயவிருப்பின் அடிப்படையிலானது. அது வற்புறுத்தலுக்காக மேற்கொள்ளப்படுகிற ஒரு சடங்காராசாரமான செயல்ல. அது விமர்சனம்-சுயவிமர்சனம் என்ற அடிப்படையிலேயே பொதுவாக மேற்கொள்ளப் படுவது. அதை விடவும், விமர்சனம் என்பது கண்டனமல்ல. சுய விமர்சனம் என்பது காவல் நிலையத்தில் அளிக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலமுமல்ல. முக்கியமாக எதிர்பாராத அல்ல விரும்பத்தகாத விதமான விளைவுகளின் பின்னணியிலும் ஒரு செயற்பாட்டின் குறைநிறைகளை அறியும் போக்கிலுமே சுய விமர்சனம் மேற்கொள்ளப்படுகிறது.
எனவே அது பிறர் குற்றங்கண்டு தண்டிக்கிறதற்காகவோ அவமதிப்பதற்காகவோ செய்யப்படுவதில்லை. ஒருவர் தனது தவறுகளிலிருந்து தானும் பிறருங் கற்கக் கூடிய விதத்தில் செய்கிற சுய விமர்சனம் ஒரு நல்ல தோழருக்கு மனநிறைவு தருகிற அனுபவமாக அமையலாம்.
சுய விமர்சனம் நீதிமன்ற நடவடிக்கை போன்றதல்ல. ஏனெனில் அமைப்பிலுள்ள அனைவருமே ஒரு விசாரணைக்கு உரியவர்களாகின்றனர். அனைவருமே அதன் போக்கில் நல்ல முடிவுகளை வந்தடைகிறார்கள். ஒரு தோழரின் தவற்றுக்கு அவர் சார்ந்துள்ள அமைப்பும் பிற தோழர்களுங் கூடப் பங்களித்திருக்கலாம். எனவே நேர்மையான சுயவிமர்சனம் மற்றவர்களையும் சுய விமர்சனஞ் செய்யத் தூண்டலாம். எனவே சுய விமர்சனம் என்பது தனியே ஒருவரையன்றி ஒரு அமைப்பையும் கறை நீக்குகிற நடவடிக்கையாகிறது.
இவ்வாறான சுயவிமர்சன மனப்பாங்கு யாருக்கும் தானாகவே வருவதில்லை. அமைப்பின் மீதான நம்பிக்கையும் அமைப்பிலுள்ள பிற தோழர்கள் மீதான நம்பிக்கையும் வலுவடையும் போது அதற்கமைவான சூழல் உருவாகிறது. தனது தவறுகளை ஒப்புக்கொள்வதால் தான் தாழவில்லை உயர்வதற்கான வாய்ப்பையே உருவாக்கிக் கொள்கிறேன் என்ற எண்ணம் தன்னம்பிக்கையின் வெளிப்பாடு. தவறுகளை மூடி மறைத்தாலே பிறர் தன்னை மதிப்பர் என்ற எண்ணம் தன்னம்பிக்கையீனத்தின் அடையாளம் தற்குறிகளாகவும் சுய விளம்பரகாரராகவும் இருப்பவர்கள் உண்மையிற் தன்னம்பிக்கைக் குறைபாடு உடையவர்களே.
ஒரு அமைப்பினுள் ஒருவர் விமர்சனத்திற்கு முகங் கொடுத்துத் தவறுகளைத் திருத்துவது தொடக்க நிலை. தனது தவறுகளைப் பிறர் சுட்டிக்காட்ட முதலே உணரும் ஆற்றலைச் சுயவிமர்சன நடைமுறை வழங்குகிறது.
மேன்மையான இந்தக் கோட்பாடு தமிழ் இளைஞர் இயக்கங்களுக்குள் எவ்வாறு சீரழிக்கப் பட்டுள்ளது என்பதை அறிய வேண்டுமானால் எடுத்ததற்கெல்லாம் இன்னார் இதற்காகத் தன்னைச் சுய விமர்சனம் செய்ய வேண்டும் என்ற விதமான ஆணைகளைக் கவனித்தாற் போதுமானது.
சில இயக்கங்களுடைய அராஜகத்துக்கும் முரட்டுத்தனமான நிறுவனக் கட்டுப்பாட்டுக்கும் அதிகாரப் போட்டிக்கும் தனிமனிதவாதத்துக்கும் பழக்கப்பட்டுப் போனவர்கள் உள்ளனர். தம்மை மிஞ்சிய புரட்சிகரத் தூய்மையோ அறிவோ ஆற்றலோ உள்ளவர் யாரும் இல்லை என்று காட்டிக் கொள்ள அவர்கள் விரும்புவதன் ஒரு வெளிப்பாடு தான், பிறர் சுயவிமர்சனம் செய்ய வேண்டும் என்னும் தொடர் தொடரான ஆணைகள்.
புரட்சிகர அமைப்புக்கள் தம்மைச் சுயவிமர்சனம் செய்கிற போதும் சகோதர அமைப்புக்களை விமர்சனம் செய்கிறபோதும் அந்த விமர்சனங்களின் தேவையும் பயனுங் கருதியே அவ் விமர்சனங்களை அறிய வேண்டியோரிடம் அறியத் தருவர். அமைப்புச் சார்ந்த தனி மனிதர் விடயத்திலும் அவ்வாறே நடக்கிறது. விமர்சனமும் சுய விமர்சனமும் எதிரிகளின் பயன்பாட்டுக்கானவையல்ல. குறிப்பாகச் சுய விமர்சனம் நட்புச் சக்திகட்கு வரையறுக்கப்பட்ட ஒன்று.
சிலர் சில விடயங்கள் பற்றிக் கேள்விகட்கு விளக்கம் வேண்டும் என்றோ தமது உடன்பாட்டின்மையை வெளிப்படுத்தவோ பிறரிடம் சுயவிமர்சனம் கோருவதுண்டு. இது சுயவிமர்சனம் என்றால் என்ன என்று அறியாததன் விளைவு. எனினும் இப்போது நடப்பது என்னவென்றால் தமிழ் மக்களை நட்டாற்றில் விட்டுச்சென்ற விடுதலை இயக்கக்காரர்களும் அவர்களது முகவர்களும் இன்று தாம் எதிர்கொள்ளுகிற கடும் விமர்சனங்களிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புகிற விதமாகச் சுயவிமர்சனம் என்பதை ஒரு கேடயமாக்க முனைகின்றனர். இது பரிதாபமானது.
-புதியபூமி
சுயவிமர்சனம் குறித்து மா-லெ இயக்கங்களின் அடிப்படை நடைமுறை பற்றி சற்று மட்டுமே அறிந்து மிகப் பொதுவாக எழுதப்பட்ட கட்டுரையாகத் தோன்றுகிறது … இது குறித்து மேலும் உரையாட விருப்பம் … கட்டுரையாளர் யாரென்று அறிய பெரிய விருப்பம் இல்லையெனினும் 😉
அரசியல் என்ற போர்வையில் வசைபாடல் சுனாமி புகலிடத்தில் குடிகொண்டுள்ளது. அரசியல் விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாதவர்களுக்கு ஒரு கவசமாக மாறிவிட்டது சுயவிமர்சனம் கோரல். தங்கள் மீது ஆதாரபூர்வமாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை விமர்சனத்தை திசை திருப்ப இது உதவுகிறது. சமீபத்தில் யோகன் கண்ணமுத்துவினால் புகலிடத்தில் ஒருவர் மீது வைக்கப்பட்ட அரசியல் விமர்சனங்கள் கேள்விகள் எல்லாம் திசை திருப்பப்பட்டு அதற்கு சம்பந்தப்பட்டவர் பதிலளிக்காமல் சுயவிமர்சனம் கோரல் என்ற கோசத்தையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. ஆனால் சுயவிமர்சனம் கோரிய அந்த நபர் இதுவரைகாலமும் தன் மீது வைக்கப்பட்ட எந்த விமர்சனத்திற்கும் கேள்விக்கும் பதிலளித்தது கிடையாது தவறுகளை ஒத்துக்கொண்டது கிடையாது. அவரின் அரசியல் என்பது தொடர்ச்சியான சேறடிப்பு கிரிமினல் வகைப்பட்ட பயமுறத்தல்கள் என்று தொடர்கிறது. இந்த நேரத்தில் சுயவிமர்சனம் பற்றிய இந்தக் கட்டுரை வெளிவருவது பொருத்தமானது.ஒவ்வொரு அரசியல் போராளியும் இக் கட்டுரையை படிக்க வேண்டும். நன்றி.
சாரங்கன்.
விமர்சனம்+சுயவிமர்சனம் என்பது> அது கிலோ என்னவிலை என்று கேட்கத் தோன்றுகின்றது! ஒருவரை குற்றவாளிக்கூணடில் ஏற்றிவிட்டு> ஓர் குற்றக்குவியலையே வாசித்துவிட்டு> நீ சுயவிமர்சனம் செய் என்றால்>அதற்குப் பெயர் விமர்சனம் சுயவிமர்சனம் அல்ல. ஒருவரை நோககிய விமர்சனம் என்பது (இடம் பொருள் ஏவல்) அவர் வைக்கும் பாங்கில் > நீங்கள் சொல்வது சரியானது! என மற்றவரை ஏற்கவைக்கவேண்டும்! இப்போது இணையதளங்களில் சிலர் கேட்பது+கோருவது விமர்சனம்-சுயவிமர்சன முறையே அல்ல! அடிபிடிசண்டைதான் நடைபெறுகின்றது! இவர்கள் நேருக்கு நேர் சந்தித்தால் அடிபிடிதான்.?இணையதளத்தின் முன்னால் இருந்து எழுதவே பயமாக இருக்கின்றது! நாங்கள் எழுதுவதை வாசித்துவிட்டு நீ கீப்போட்……….வாதியென அடித்து புறம்தள்ளிவிடுகின்றாhகள்! எனவே தத்துவ மாமேதைகளே! இணையதள ஆசிரியர்களே! ஈகோவை>தத்துவ வித்தகங்களை விடுத்து> அரசியல் அநாதைகள் ஆகியுள்ள எம்மக்களை அநாதைகள் அற்றவர்கள ஆக்க எம்மால் ஆனதைச் செய்வோம்!
சுயவிமர்சனம பற்றிய இக்கட்டுரை இவ்வேளை மிகவும் பயனுள்ளது. உண்மையில்
ஒருவர் எழுதும் அரசியல் விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாதவர்களுக்கு விழுந்த சாட்டை அடி. இக்கட்டுரையானது மாக்சிய லெனினிய கண்ணோட்டம் பற்றி நன்கு பரீட்சயமுள்ள ஒருவரால் மட்டுமே எழுத முடியும் என்பது எண்ணம். இன்றைய காலகட்டத்தில் இவ்விமர்சனக் கட்டுரை அனைவராலும் குறிப்பாக இளம்சமுகத்தினர் படிக்க வேண்டும். இக்கட்டுரை போல சுயநிர்ணய உரிமை என்றால் என்ன? என்பது பற்றியும் எழுதினால் பயனுள்ளதாக அமையும் எனக் கருதுகிறேன். நன்றி- சந்துரு
சுயவிமர்சனம் விமர்சனம் என்பது ஒரு போராட்டப் பாதையில் மிக முக்கியமானது. ஆனால் அதனைப் பற்றிய சரியான புரிதல் இன்றி மேற்கொள்ளப்பட்ட விமர்சனங்களும் சுயவிமர்சனங்களும் எதிர்மாறான விளைவையே தந்திருக்கின்றன.
குறிப்பாக தமிழ் இயக்கங்களில் சுயவிமர்சனம் என்பது சரியாகக் கையாளப்பட்டதாய் நான் அறியவில்லை. அறிந்தவை தனது கடந்தகால தவறுகளை உணர்ந்து திருந்த முற்பட்டவர்கள் அவமதிக்கப்பட்டதும் அவமானப்பட்டதும் தான். சில நண்பர்கள் இதனால் போராட்டமே வேண்டாம் என்று போய் விட்டார்கள்.
அந்தவகையில் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்வதற்கு இக்கட்டுரை சிறிதாவது பயன்தந்தால் நன்று.
எங்கையப்பா தமிழ்மாறனைக்காணையில்லை, ஆரையாவது விட்டு கூப்பிடுங்கோ,
பல்லி சொல்லும் பலனை நம்புவன் நான் ஆகையால் ருக்கு அனுப்பிய ஆள் தேசத்தில் முடங்கியது நல்லதாய்ப் போயிற்றூ.இன்னும் மகிந்தவிடம் இருந்து மணீ ஆடர் வரவில்லை இதனால் டாண் என்றூ அரங்கத்தில் விழுந்து விட்டார் மனுசியின் தகப்பனார்.என்னை சுயவிமர்சனம் செய்தால் வீட்டுக்கு மோர்ட் கேஜ் கட்டுவது யார்? ஏதோ அரசுக்கு வாலாய் இருந்து வாழ்க்கை ஓடுகிறது இதிலும் சுயவிமர்சனம் என்றூ எனது தலையில் நானே மண்ண அள்ளீப் போடுவேனோ?
கட்சிக்கு ஏதோ ஒரு தத்துவம் கேட்பாடுகள் இருந்தாக வேண்டும்.அங்கேயே மத்தியபட்ட
ஜனநாயகம் இருக்கமுடியும். அப்படியிருந்தால் மட்டுமே! விமர்சனம்-சுயவிமர்சனத்தை
வெற்றிகரமாக சாதித்து கட்சியை பிரகாசிக்கச் செய்து பாட்டாளிகளை வழிநடத்திச் செல்ல
முடியும்.
இல்லையேல் விமர்சனம்-சுயவிமர்சனம் செய்ய.. பின்கதவால் வந்து மண்டையில் போட்டு
விட்டு போய்விடுவார்கள். இதற்கு ஈழப்போராட்டம் நல்ல உதாரணம்.இப்படியான இடங்களில் விமர்சனம்-சுயவிமர்சனம் அறவே கூடாது.எதையும் “பிளாக்” காகத் தான்
காரியம் ஆற்ற வேண்டும்.