ஆசிரியர்களின் நலன்கள் தொடர்பில் அரசாங்கம் மற்றும் பொறுப்புவாய்ந்த தரப்புக்கள் கவனயீனமாக இருப்பதனைக் கண்டித்து நாளை-06.10.1014- கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் சர்வதேச ஆசிரியர் தினமான நாளை யாழ்.நகரில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது. மாணவர்களின் ஆளுமையை வளப்படுத்துவது மட்டுமல்லமல், மாணவர்களுடைய எதிர்காலத்திற்கான அத்திபாரத்தையும் இடும் ஆசிரியர்கள் சமகாலத்தில் பல்வேறு விதமான நெருக்குவாரங்களை எதிர் கொள்கின்றார்கள்.
அவர்களுடைய நலன்கள் தொடர்பில் அரசாங்கமும் பொறுப்புவாய்ந்த தரப்பு க்களும் கவனயீனமாகவே இருக்கின்றனர். எனவே சர்வதேச ஆசிரியர் தினமான ஒக்டோபர் 6ம் திகதி யாழ்.பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆசிரியர்களின் உரிமைகளுக்காக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் பிற்பகல் 2மணிக்கு குறித்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.
70 களின் இறுதியில் இலங்கை ஆசிரியர் சங்கம் தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமையை அங்கீகரித்துத் தீர்மானம் நிறைவேற்றியது. இலங்கை தழுவிய சிங்கள ஆசிரியர்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட தொழிற்சங்கத்தின் இத் தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஹெச்.என்.பெர்ணாண்டோ மற்றும் பி.ஏ.காதர் போன்றோரால் தலைமைதாங்கப்பட்ட ஆசிரியர்சங்கத்தின் சுய நிர்ணைய உரிமைக்கான குரல் மீண்டும் ஒலிக்கவேண்டும். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுய நிர்ணைய உரிமை கோரப்போவதில்லை எனச் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது.
போராட்டங்களின் ஊடாக மக்களை அணிதிரட்டுவதும் மக்கள் திரள் அமைப்புக்களைத் தோற்றுவிப்பதும் இலங்கையில் ஒவ்வொரு அரசியல் முன்னணிச் சக்திகளதும் பிரதான கடமையாக இருக்கும் போது, இலங்கை ஆசிரியர் சங்கம் போன்ற அமைப்புக்கள் தன்னார்வ நிறுவன மனோபாவத்திற்கு அப்பால் செயற்பட வேண்டிய தேவை அவசியமானது.
போராட்டம் குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கை:
எந்த ஒரு தேசத்தினதும் எதிர்காலப் பாதுகாப்பிற்கும் முன்னேற்றத்திற்கும் மாணவர்களின் கல்வி முன்னேற்றம் என்பது அடிப்படையானதாகும். மாணவர்கள் கல்வி கற்கும் காலப்பகுதியானது அவர்களது அறிவாற்றலை மட்டுமல்ல அவர்களது பண்பாட்டினையும் வளப்படுத்துகின்றது.
மாணவர்களின் ஆளுமையை வளப்படுத்துபவர்கள் என்ற வகையில் ஆசிரியர்கள் தற்கால சந்ததிக்கும் எதிர்கால சந்ததிக்கும் மிக முக்கியமான பாலமாக விளங்குகின்றனர். அப்படிப்பட்ட ஆசிரியர் சமூகமானது கடந்த பல மாதங்களாக் தங்களுக்கு உள்ள குறைபாடுகள் மற்றும் அவர்களது நலன்கள் தொடர்பிலான பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் எழுப்பி வருகின்ற போதும் இதுவரை ஆக்கபூர்வமான எத்தகைய பலாபலனும் அவர்களிற்கு கிடைக்கவில்லை.
இதன் காரணமாக ஆசிரியர் சமூகத்தின் பிரச்சினைகளை வெளிக்கொணரும் முகமாக உலக ஆசிரியர் தினமான 6.10.2014 திங்கட்கிழமை யாழ்ப்பாணம் பஸ்தரிப்பு நிலையத்தின் முன்பாக பி.ப 2.00 மணியளவில் கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்றினை இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் ஏற்பாடு செய்துள்ளார்கள். இந்த கவன ஈர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஆகிய நாங்கள் எமது பூரண ஆதரவை வழங்குவதோடு, அனைவரையும் இப் போராட்டத்தில் கலந்து கொண்டு இப்போராட்டம் வெற்றிபெற உதவுமாறு கோரிக்கை விடுகின்றோம்.