யுத்தத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள வன்னியில் இடம்பெயர்ந்து அல்லல்படும் மக்களின் நிலைமைகளைக் கண்டறிந்து , உரிய நிவாரணம் மற்றும் உதவிகளை அவர்களுக்கு வழங்குவதற்கு வசதியாக ஐ.நா. தலைமையிலான அவதானிப்பு மற்றும் மதிப்பீட்டுக் குழு ஒன்று அங்கு செல்வதற்கு இலங்கை அரசு அனுமதித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
– இப்படி இலங்கை அரசை பிரிட்டன் தொடர்ந்தும் வற்புறுத்தி வருகின்றது என பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் இராஜாங்க, வெளிவிவகார மற்றும் பொதுநலவமைப்பு அலுவலக அமைச்சர் பில் றம்மெல் நேற்று முன்தினம் தெரிவித்திருக்கின்றார்.
இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை உருவாக்காமல் விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிக்க முனைவது இலங்கையின் இன நெருக்கடிக்கு அடிப்படையாக உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உதவாது என பிரிட்டன் தெரி வித்துள்ளது. அத்துடன் இத்தகைய நிலைமை வடக்கு மக்களின் மனங்களை வென்றெடுக்க அரசுக்கு உதவாது எனக் குறிப்பிட்டுள்ள பிரிட்டன், இலங்கை அரசு பின்பற்றும் வழிமுறைகள் குறித்து ஆழ்ந்த கவலையும் வெளியிட்டுள்ளது.
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பாக வியாழக்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரிட்டனின் இராஜாங்க, வெளிவிவகார, பொதுநலவாய அலுவலக அமைச்சர் பில் றம்மெல் இவ்விடயங்களைத் தெரிவித்தார்.
“இலங்கை அரசுக்கும் உண்மையான கடப்பாடுகள் உள்ளன. அரசியல் தீர்வில் ஆர்வமாக உள்ளதை அது வெளிப்படுத்த வேண்டும். மனித உரிமைப் பாதுகாப்பை அது வலுப்படுத்த வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றனர் எனத் தெரிவித்த அமைச்சர், எனினும் இலங்கையின் தென்பகுதியில் குண்டுத்தாக்குதல்களை மேற்கொள்வதை நிறுத்தியுள்ளமை, அவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கைவிட்டு ஜனநாயக கொள்கைகளில் தமக்குள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் விதத்தில் செயற்படத் தொடங்கியுள்ளமையைப் புலப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கையின் மனித உரிமை, மனிதாபிமான நிலை குறித்தும் ஆழ்ந்த கவலை வெளியிட்ட அவர் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:-
இலங்கையின் மனித உரிமை நிலைவரம் மற்றும் மனிதாபிமான நிலை குறித்து பாரிய கரிசனை நிலவும் நேரத்தில் இது குறித்து விவாதிப்பது பொருத்தமானது.
மோதல் நடைபெறும் பகுதிகளுக்கு அரசசார்பற்ற அமைப்புகளும் ஊடகங்களும் செல்ல முடியாதுள்ளதால் சரியான மதிப்பீட்டை மேற்கொள்ள முடியாதுள்ளது.
இரு தரப்பும் எவ்வாறு சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறுகின்றன என்பது குறித்து பல அச்சம் தரும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வு எது என்பது குறித்து மூன்று சமூகங்களின் மத்தியிலும் முழுமையான விவாதம் இடம்பெறவேண்டும்.