02.04.2009.சுமார் இருபது வருட கால யுத்தத்தின் மூலம் எங்களை நாங்களே அழித்து வந்துள்ளோம். இதற்கு நாம் எவரையும் குறை சொல்ல இயலாது. இதற்கு நாமே காரணமாகும். எனவே, இலங்கை அரசையோ அல்லது இந்திய அரசையோ நாம் குறைகூற வேண்டியதில்லை.
இருபது வருட கால அழிவுகளை எமது மக்களது பங்களிப்புக்களுடன் இரு வருட காலத்திற்குள் மீளக் கட்டியெழுப்ப இயலும் என்று சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத்திற்கான விசேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
வவுனியாவில் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை புதன்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அமைச்சர் மேலும் கூறியதாவது: “”இப் பகுதிகளில் அரசியல் ரீதியில் சாதகமான நிலைமைகளை உருவாக்க வேண்டி இருப்பதால் நிதி தொடர்பிலான கோரிக்கைகளை நிறைவேற்ற மேலும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் தேவைப்படும். ஏனைய கோரிக்கைகளை இனங்கண்டு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
பொது மக்களது கோரிக்கைகள் அøனத்தும் ஒரேயடியாகத் தீர்ந்துபோவதில்லை. அனைத்துக் கோரிக்கைகளும் படிப்படியாக இனங்காணப்பட்டு அவை நிறைவேற்றப்படும். இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் எமது மக்களின் வாழ்க்கையை ஒளிமயமானதாக, நம்பிக்கைக்குரியதாக மாற்றியமைப்பதே எனது நோக்கம்.