சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி முன்னிலையில் ஜனதா தள கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது அழுகிய முட்டைகளையும் வீசி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் கோயில் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு சுப்பிரமணியம் சுவாமி நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். அப்போது திடீரென கோர்ட்டுக்குள் நுழைந்த வழக்கறிஞர்கள், இலங்கை தமிழருக்கு எதிராக பேசுவதால் சுப்பிரமணிய சுவாமியை தாக்கியதாக அவர்கள் கோஷமிட்டனர். தங்கள் கண் முன்னிலையிலேயே தாக்குதலில் ஈடுபட்ட வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலை, தீட்சிதர்கள் பிடியிலிருந்து மீட்கும் வகையில் கோவில் நிர்வாகத்தை அரசே ஏற்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்தது.
தீட்சிதர்களால் கோவிலில் தேவாரம், திருவாசகம் ஆகிய பாடல்களைப் பாட முடியாத நிலையும் இருந்து வந்தது. இதுதொடர்பாக சிவனடியார் ஆறுமுகச்சாமி தலைமையில் நீண்ட காலமாக போராட்டமும் நடைபெற்று வந்தன.
இந் நிலையில், சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு அரசு கொண்டு வந்தது. இதை சென்னை உயர்நீதிமன்றம் அங்கீகரித்தது.
இந்த நிலையில் அரசின் இந்நடவடிக்கையை எதிர்த்து தீட்சிதர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தன்னையும் இந்த வழக்கில் சேர்த்துக்கொள்ளுமாறு கோருவதற்காக டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது சில வழக்கறிஞர்கள், சுப்பிரமணியம் சுவாமியின் இலங்கை கருத்துக்களை ஆட்சேபித்து குரல் எழுப்பியவண்ணம் அவர் மீது அழுகிய முட்டைகளை வீசினார்கள்.
தங்கள் முன்பாகவே இந்த சம்பவம் நடைபெற்றதை கண்டித்த நீதிபதிகள், முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காவல் துறைக்கு உத்தரவிட்டனர்.
அவரைப் பார்த்த, இலங்கைப் பிரச்சினை தொடர்பாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வக்கீல்கள் சிலர் ஆவேசமாக ஓடி வந்தனர்.
சுப்பிரமணியம் சுவாமியை காவல் துறையினர் பாதுகாப்பாக அவரது கார்வரை அழைத்து சென்று விட்டார்கள்.