வடக்கே இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரதேசத்தில் இருந்து வெளியேறி இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கி வந்த பொதுமக்கள் மீது முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு பகுதியில் விடுதலைப்புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 சிவிலியன்கள் கொல்லப்பட்டதுடன், 75 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்தத் தாக்குதலுக்குத் தாம் பொறுப்பல்ல என்றும் இலங்கை இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
போர்ப்பிரதேசத்தில் இருந்து சிவிலியன்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வருவதைத் தடுப்பதற்காகவே இந்தத் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை விடுதலைப்புலிகள் பொதுமக்கள் மீது நடத்தியிருப்பதாகவும் இராணுவ பேச்சாளர் குற்றம் சுமத்தியிருக்கின்றார்..
இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் சடலங்களையும் காயமடைந்தவர்களையும் வவுனியா மற்றும் அநுராதபுரம் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை இராணுவத்தினர் மேற்கொண்டிருந்ததாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது..
புதுமாத்தளன் பகுதியில் எறிகணை வீச்சில் 16 பேர் பலி.
ஆனால், இவ்வாறு 19 பேர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தமக்கு தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறிய சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பேச்சாளர் ஒருவர், எனினும், புதுமாத்தளன் பகுதியில் நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்களை ஏற்றுவதற்காக தமது படகுகள் நேற்று சென்ற வேளை, தமது படகுகள் கரையை அடைவதற்கு முன்னதாக அங்கு கரையில் காத்திருந்த நோயாளிகள் மற்றும் காயமடைந்தவர்கள் மீது எறிகணைகள் வந்து வீழ்ந்து வெடித்ததில் 16 பேர் கொல்லப்பட்டதாகக் கூறினார்..
அந்தத் தாக்குதலுக்கு யார் காரணம் என்பது தமக்குத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்..
இதற்கிடையில் உடையார்கட்டுக்குளம் பிரதேசத்தில் இராணுவத்தினரிடம் 1046 சிவிலியன்கள் வந்து சேர்ந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது