புளட் அமைப்பின் பல உட்கொலைகளுக்குக் காரணமாகவிருந்த அந்த அமைப்பின் முன்னை நாள் பிரதான உறுப்பினர் சிவாராம். எஸ்.ஆர் மற்றும் தராகி ஆகிய பெயர்களில் அறியப்பட்ட சிவராம் புளட் அமைப்பின் பல உட்கொலைகளில் நேரடியாகவே தொடர்புபட்டிருந்தார். புளட் அழிக்கப்பட்ட சில வருடங்கள் தீவிர புலியெதிர்ப்பாளராகத் தன்னை வெளிப்படுத்திய சிவராம், புலிகள் அமைப்பிற்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டார். தனது அரசியல் நிறத்தை மாற்றிக்கொண்ட சிவராம் 90 களின் இறுதிப்பகுதிகள் புலி ஆதரவுக்கட்டுரைகளை எழுதினார். சிவராம் 2005 ஆண்டு கொழும்பில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். சிவராம் புளட் அமைப்பில் உயர் மட்ட உறுப்பினராக அங்கம் வகித்த போது பலரின் எதிர்ப்பைச் சம்பாதித்துக்கொண்டார். இந்த முரண்பாடுகளின் பின்னணியில் இலங்கை அரரச ஆதரவுடன் சிவராம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்தன. கொலையின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் சிவராமிற்கு மாமனிதர் என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது. புலம் பெயர் நாடுகளில் சிவராமின் நினைவு தினம் புலி ஆதரவு அமைப்புக்களால் நிகழ்த்தப்படுகிறது.
2005-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் சடலம் நாடாளுமன்ற வளாகத்துக்கு அருகில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டது.
சிவராம் கொலை தொடர்பில் புளொட் இயக்கத்தைச் சேர்ந்த ஆறுமுகம் ஸ்ரீஸ்கந்தராஜா என்ற சந்தேகநபருக்கு எதிராக சட்டமா அதிபரினால் எட்டு வருடங்களின் பின்னர் வழக்கு தாக்கல்செய்யப்பட்டது. புளொட் இயக்கத்தின் உறுப்பினரான இவர் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நூல் வெளியீடு ஒன்றில் கலந்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.