20.11.2008.
கடந்த சில மாதங்களில் ரி.எம்.வி.பி.யிலிருந்து தப்பியோடிய 70 க்கும் அதிகமானோர் விடுதலைப் புலிகளுடன் இணைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர்களில் சிலர் தப்பிச்செல்வதற்கு முன்னர் தமது சகாக்களை சுட்டுக்கொலை செய்துவிட்டு சென்றிருப்பதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கிழக்கில் ரி.எம்.வி.பி. உறுப்பினர்கள் பலரையும் தங்களுடன் இணைப்பதற்கு விடுதலைப் புலிகள் முயற்சிப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் (சிவநேசத்துரை சந்திரகாந்தன் ) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.
கொழும்பின் புறநகர் பகுதியில் கடந்த வாரம் பிள்ளையான் குழுவின் முக்கிய உறுப்பினரான ரகு என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் தமது பாதுகாப்பினை அதிகரிக்கும் நோக்கத்துடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவை பிள்ளையான் செவ்வாய்க்கிழமை சந்தித்தபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
தம்முடன் இணைத்துக்கொள்வதற்காக எமது குழுவின் பல உறுப்பினர்களுடன் விடுதலைப் புலிகள் தொடர்பு கொண்டு வருவதாக பல உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எமது உறுப்பினர்களுக்கு ஆபத்துகள் அதிகமுள்ளதனால் எமது முக்கிய உறுப்பினர்களுக்கான பாதுகாப்பினை அதிகரிக்க வேண்டும். எமக்கு பல குழுக்களிடமிருந்தும் ஆபத்துகள் தோன்றியுள்ளன.
ரகுவின் கொலை தொடர்பாக விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.
விடுதலைப் புலிகள் கிழக்கில் ஊடுருவ முயற்சித்து வருகின்றனர். அவர்கள் துணை இராணுவக் குழுவினரையும் இணைத்துக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். இதன் பின்னணியிலேயே எமது முகாம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்றார்.
இதனிடையே,அம்பாறை, திருக்கோவில் பகுதிகளிலுள்ள ரி.எம்.வி.பி. (கருணா குழு) முகாமிலிருந்த மூவர் ஆயுதங்களுடன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை இரவு முதல் இவர்கள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் இந்த மூவரும் முகாமிலிருந்து ஆயுதங்களுடன் தப்பிச்சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
ரி.எம்.வி.பி. யின் அம்பாறை மாவட்டப் பொறுப்பாளரும் ஜனாதிபதியின் இணைப்பாளருமான இனிய பாரதியின் நெருங்கிய சகாக்களான அருணகிரி, அருணன் மற்றும் யூட் ஆகியோரே காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் திருக்கோவில் பொலிஸாரும் படையினரும் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.