தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில் சிறிலங்க அரசாங்கம் நடத்திய போர்க்குற்றங்கள் பற்றி முறையான, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்க அரசாங்கத்தால் நடத்தப்பட்ட இனப்படுகொலையின் போது பலியான அப்பாவி பொதுமக்களின் எண்ணிக்கை குறித்து வெளியான தகவல்களில் உண்மை இல்லை என 5 தமிழ் மருத்துவர்கள் கூறியுள்ளதாக சிறிலங்க அரசாங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதிலளிக்கும் விதமாக, சிறிலங்க அரசாங்கத்தின் இனப் படுகொலை குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, சிறிலங்க அரசின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு, தற்போது ராணுவ முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளவர்களிடமும் ரகசிய விசாரணை நடத்தி உண்மையை உலகிற்கு உணர்த்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.
தங்களுக்கு ஆதரவான வகையில் தகவல்களை பெறுவதற்காக சிறிலங்க அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதற்கு பல உதாரணங்கள் உள்ளது. அந்த வகையில் தற்போது 5 தமிழ் மருத்துவர்களும் சிறிலங்க அதிகாரிகளின் மிரட்டலுக்கு பயந்து இறுதிக்கட்ட பலி எண்ணிக்கை பற்றிய செய்திகளை மறுத்துக் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மருத்துவர்களின் கருத்துகளில் எந்தளவு உண்மை உள்ளது எனவும் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.