சிறிலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை த.தே.ம.மு முற்றாக நிராகரிக்கின்றது, அத் தீர்மானம் தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புக்களை அடியோடு அழித்துள்ளது
ஜெனிவாவில் சிறிலங்கா அரசு தொடர்பாக நிறைவேற்றுப்பட்டுள்ள தீர்மானம் தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புக்களை அடியோடு அழித்துள்ளது. என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
இத் தீர்மானம் தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் செயற்பாடு என்பதால் தீர்மானத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி முழுமையாக நிராகரிப்பதாக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் நடைபெற்ற ஜ.நா மனிதவுரிமை கூட்டத் தொடரில் உரையாற்றி நாடு திரும்பிய பின்னர் ஐ.நா தீர்மானம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் வகையில் கடந்த 22-3-2013 அன்று யாழ் ஊடக நிலையத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் நடாத்தப்பட்ட ஊடக மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்.
அமெரிக்காவால் ஜ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் கொண்டுவரப்பட்ட சிறிலங்காவிற்கு ‘எதிரான’ தீர்மானம் என்று சொல்லப்படும் தீர்மானத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி எந்தவிதத்திலும் சொந்தம் கொண்டாடவில்லை. ஏனெனில் தமிழ் மக்களை ஏமாற்றி அழிவின் பாதையில் கொண்டு செல்ல நாம் ஒருபோதும் தயாராக இல்லை. இத் தீர்மானத்தை நாம் எதிர்ப்பதற்கு காரணங்கள் உள்ளது.
கடந்த வருடமும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானம் என்று சொல்லிக் கொண்டு சிறிலங்கா அரசாங்கம் தனக்கு விசுவாசமானவர்களால் தனது யுத்தக் குற்றத்தை மூடி மறைப்பதற்காகவும், சர்வதேச விசாரணையில் இருந்து தப்பிக் கொள்வதற்காகவும் தயாரிக்கப்பட்ட எல்.எல்.ஆர்.சி அறிக்கையினை அமுல்ப்படுத்துமாறு மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தினால் தாயரிக்கப்பட்ட அறிக்கையினை நடைமுறைப்படுத்த ஒருவருட கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஒரு வருட கால அவகாசத்திற்குள் சிறிலங்கா அரச பயங்கரவாதம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மிக மோசமானதாகும்.
குறிப்பாக தமிழ் மக்களுடைய காணிபறிப்பு, பல்கலைக்கழகங்களுக்கு எதிரான பல அடக்குமுறை நடவடிக்கைகள், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் உச்சம், மீள்குடியேற்றம் என்னும் போர்வையில் மக்களை காடுகளுக்குள் தள்ளிவிடப்பட்ட மற்றும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டமை, சிறையிலடைத்து கொடுமைப்படுத்தப்பட்டமை
இவ்வாறான விடயங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறாமலும் சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணையினை கைவிடப்பட்டும் உள்ளதாக இம்முறை அமெரிக்காவல் கொண்டுவரப்பட்ட தீர்மானம் அமைந்துள்ளது.
அது மட்டும் அல்லாமல் எந்தவிதமான பிரியோசனம் இல்லா கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் மீண்டும் கூறப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தல் மூலமாக 13 ஆவது திருத்தத்துடன் தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புக்களை அடியோடு அழிக்கப்பட்டுள்ளது. இதனாலேயே நாம் இத் தீர்மானத்தை முழுமையாக எதிர்க்கின்றோம்.
எமது தமிழ் இனம் அழிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அரசியல் அமைப்பிற்குப் அப்பால் சர்வதேசத்தில் தலையீட்டுடன் அல்லது சர்வதேசத்தின் முழுப் பார்வையில் வடக்கு கிழக்கில் இடைக்கால நிர்வாகம் உருவாக்கப்பட வேண்டும். இன அழிப்புத் தொடர்பாக பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.