03.09.2008.
யாழ்ப்பாணம், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிபெற்ற சிங்கள மாணவர்கள் தமக்குக் கல்வியைத் தொடர அங்கு பாதுகாப்பில்லையென போராட்டம் நடாத்தும்போது எப்படி இம்மாணவர்களை அங்கு செல்லுமாறு கோருவீர்கள் என கேட்கின்றீர்கள். நாம் அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை அவர்கள் கல்வி கற்கும் பல்கலைக்கழகங்கள் மூலம் வழங்க முடியுமென்ற உத்தரவாதம் வழங்கியபோது கிழக்கிலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. இது அவர்களுக்கு அச்சத்தை மேலும் உருவாக்கியது. ஆனால், யாழ்ப்பாணத்தில் இருந்தோ கிழக்கில் இருந்தோ தமிழ் சமூகத்திடம் இருந்தோ இம்மாணவர்களின் அச்ச உணர்வைப்போக்க எந்தக் குரலும் ஊடகங்கள் வாயிலாக வெளிவரவில்லை. இது துரதிர்ஷ்டமானதாகும்.
இவ்வாறு, யாழ்ப்பாணத்துக்கு முதல் தடவையாக உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வருகை தந்திருந்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்கா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் யாழ். பிராந்திய ஊடகவியலாளர்களுடன் நடத்திய சந்திப்பின் போதே பேராசிரியர் இவ்வாறு தெரிவித்தார். இச்சந்திப்பின்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூக விஞ்ஞானத்துறைத் தலைவர் பேராசிரியர் இரா. சிவச்சந்திரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மூதவை உறுப்பினர் கே.ஆர். நவரத்தினம் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
பேராசிரியர் காமினி சமரநாயக்கா ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு தொடர்ந்தும் பதிலளிக்கையில்;
பல்கலைக்கழக அனுமதி வழங்கப்படும்போது, இன,மத, மொழி அடையாளங்களை நாம் கருத்தில் கொள்வதில்லை. மாணவர்களின் இஸற் ஸ்கோர்களை மட்டுமே கருத்திற் கொள்கின்றோம். பல்கலைக்கழக அனுமதி நாற்பது சதவிகிதம் மாணவர்களின் திறமை அடிப்படையிலும், ஐம்பத்தைந்து வீதம் மாவட்ட அடிப்படையிலும் ஐந்து சதவீதம் பின்தங்கிய பகுதிக்குமாக வழங்கப்பட்டு வருகின்றது. மாவட்ட அடிப்படைக்காக யாழ். மாவட்டத்தில் 1981 ஆம் ஆண்டு குடிசனத்தொகையை அடிப்படையாக வைத்து தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர்.
இவ்வருடம் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு 19200 மாணவர்களை அனுமதிப்பதென முடிவு செய்தபோதும் சகல பல்கலைக்கழகங்களிலும் 2007/2008 கல்வியாண்டுக்கு நாட்டிலுள்ள பதின்நான்கு பல்கலைக்கழகங்களிலும் 20,200 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், இஸற் ஸ்கோர் அடிப்படையிலே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இன்று தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்கள் மத்தியில் பல்கலைக்கழக அனுமதியில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றஞ்சுமத்தப்படுகிறது. தமிழ்ச்சமூகம் சிறுபான்மையினராக இருப்பதால் அதிக அனுமதி தரவேண்டுமென்கின்றனர். சிங்கள சமூகம் பெரும்பான்மை சமூகமாகமிருப்பதால் வழங்கப்படும் அனுமதி மக்கள் தொகைக்கு பாதகமாக இருப்பதாக குறைபட்டுவருகின்றனர். இவை சமூக நலனில் அக்கறையுள்ளோரின் ஆதங்கமாக கருதலாம்.
ஆனால், பல்கலைக்கழக அனுமதிக்கான நடைமுறைப்படியே அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது. நான் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவராக இருப்பதால், யாராவது பல்கலைக்கழக அனுமதியில் அநீதியிழைக்கப்பட்டதாக கருதினால் சம்பந்தப்பட்டவர்கள் தமது முறைப்பாட்டை ஆதாரங்களுடன் எழுத்துமூலம் சமர்ப்பிக்குமாறு கோரியிருந்தேன். முறைப்பாடுகளை பரிசீலித்து, கணினிமயப்படுத்தப்பட்டிருக்கும் இஸற் ஸ்கோர் அடிப்படையில் அவர்களது சந்தேகங்களுக்கு விளக்கமளித்தேன்.
இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் அங்கு கல்வியைத் தொடர முடியுமென யாழ்ப்பாண ஊடகங்கள் சார்பான கருத்துக்களை வெளியிட தவறியுள்ளன. நான் இங்குவரும்போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட சிங்கள, முஸ்லிம் மாணவர் எவர் வந்தாலும் அவர்களுடன் கப்பல்மூலம் யாழ்ப்பாணம் செல்லத்தயாராகவிருப்பதாக அறிவித்தேன். யாழ்ப்பாண சமூகத்தின் நல்லாதரவுடன் அவர்கள் பயமின்றி கல்வி நடவடிக்கையைத் தொடரலாம் என்ற கருத்தை இதுவரை யாழ்ப்பாண ஊடகங்கள் தெற்கிற்கு கூறத் தவறிவிட்டன.
ஊடகவியலாளர் ஒருவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் இங்கு வரவில்லையென்றால், அவ் வெற்றிடங்களுக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களை அனுமதிக்கலாமென தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த பேராசிரியர்;
எந்தவொரு மாணவனும் அனுமதி பெறும் பல்கலைக்கழக மாணவனேயொழிய அவர் எங்கு கல்வி கற்றாலும் அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்திலேயே பட்டத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு பொறியியல் பீடத்தை ஆரம்பிக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் பல தரப்பாலும் விடுக்கப்பட்டு வருகின்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பல படிமங்கள் மூலம் சமர்ப்பிக்கின்றபோது, அது சாத்தியமாகும். இலங்கையில் மொறட்டுவ, பேராதனை, றுகுணு பல்கலைக்கழகங்களிலே பொறியியல் பீடம் இயங்குகின்றது. யாழ்ப்பாண மாணவர்கள் மொறட்டுவ பல்கலைக்கழகத்திலே கல்வியைத் தொடர விரும்புகின்றனர். அங்கு பொறியியல் பீட மேம்பாடு அதிகமாகவுள்ளதாக அவர்கள் கருதுகின்றனர். இன்று எமக்குள்ள பிரச்சினை, கல்வியின் மேம்பாட்டு நிலைக்கு வளவாளர்களை உருவாக்குவதுதான். அவர்களுக்கு எட்டுவருட பயிற்சிகளை வழங்க வேண்டியுள்ளது. இதுவரை வெளிநாடுகளுக்கு உயர்கல்வி பெறுவதற்கு சென்ற 550 கல்வியாளர்கள் நாடு திரும்பவில்லை என்பது தான் மிகவும் துயரமான விடயம்.
நாம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மட்டுமல்ல, சட்டபீடம் இயங்குகின்ற பல்கலைக்கழகங்களில் கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றோம். காரணம் இப்பீடத்தில் இருந்து பட்டம் பெற்று வெளியேறுபவர்கள், சுயமாகவே தமது தொழிலை ஆரம்பிக்க வாய்ப்பு அதிகமாகவேயுள்ளது. இவர்களுக்கு வேலைவாய்ப்பு பிரச்சினை இருக்கமுடியாது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டபீடம் எதிர்காலத்தில் உயர்வான நிலையை அடையும் என்ற நம்பிக்கையுண்டு. நான் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவராக இருந்தும், இப்போதுதான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளேன். கிழக்குப் பல்கலைக்கழகம், வவுனியா வளாகம், திருகோணமலை வளாகம், கொழும்பு றுகுணு பல்கலைக்கழகம் எல்லாம் சென்றுள்ளேன். ஆனால், இதுவரை சப்ரகமுவ பல்கலைக்கழகத்துக்குச் செல்லவில்லை.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிய கற்கை நெறிகளை ஆரம்பிப்பது பற்றிய தரவுகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரே பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்க வேண்டும். மக்கள் கருத்துகளும் அதற்கு ஆதரவாக அமையுமானால், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தீர்க்கமான ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கான வளங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளதென கருதும்போது புதிய கற்கை நெறிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கும். இதற்கான பணி முற்றுமுழுதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரையே சார்ந்ததாகும்.