தமிழ் மக்கள் இப்போது ஈழக் கோரிக்கைகளை முன்வைக்கவில்லை எனவும் கடந்த காலங்களில் அவ்வாறான ஓர் நிலைமை காணப்பட்ட போதிலும் தற்போது அவ்வாறான சூழ்நிலை கிடையாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். தாம் அரசியல் தீர்வுத்திட்டத்தையே கோரிவருவதாக அவர் தனது பாராளுமன்ற உரையில் மேலும் தெரிவித்தார். யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும் தமிழ் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
1958 ஆம் ஆண்டிலிருந்து அரசியல் தீர்வுத் திட்டம் குறித்தே பாராளுமன்ற அரசியல் கட்சிகள் பேசி வந்தன. அரசியல் தீர்வை எட்ட முடியாத சூழலில் மக்கள் அரசியல் தீர்வில் நம்பிக்கை இழந்தனர். இந்த நிலயில் 1976 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றியது. மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதனை வாக்குகளாக மாற்றும் நோக்குடன் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வட்டுக்கோட்டைத் தீர்மானம் தனித் தமிழீழம் அமைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. தமிழீழம் அமைக்கப் போவதாகக் கூறி தேர்தலில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி 1977 இல் அமோக வெற்றியீட்டியது.
கூட்டணி இந்த நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டு ஆயுதக் குழுக்கள் உருவாகி இயக்கங்களாக வளர்ச்சிபெற்றன. பல்வேறு இயக்கங்கள் தோன்றின. அனைத்துமே ஏகாதிபத்தியங்களால் இலங்கை அரசிற்கு எதிரான அழுத்தக் குழுக்களாகப் பயன்படுத்தப்பட்டன.
புலிகளால் ஏனைய இயக்கங்கள் அழிக்கப்பட்ட பின்னர் புலிகளை ஏகாதிபத்தியங்கள் இலங்கை அரசிற்கு எதிரான அழுத்தக்குழுக்களாகப் பயன்படுத்தி, தமது தேவை முடிந்ததும் முள்ளிவாய்க்காலில் அழித்தன.
1977 ஆம் ஆண்டு தமிழ் ஈழம் அமைப்போம் என்பதற்குப் பதிலாக பிரிந்து செல்லும் உரிமைக்கான கோரிக்கையை தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வைத்திருந்தால் அது பிரிவினைக்கான போராட்டமாக அன்றி உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டமாக வளர்ச்சி பெற்றிருக்கும்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் கருத்தியல் தொடர்ச்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பிரிந்து செல்லும் உரிமையைக்கூட நிராகரிக்கும் பேரினவாதக் கருத்தியலை முன்வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஒரு தேசிய இனத்தின் பிரிந்து செல்லும் உரிமையை நிராகரித்தல் என்பது பேரினவாதக் கருதியலாகும். இடதுசாரிகள் என்று கூறிக்கொள்பவர்களும் இதே பேரினவாதக் கருத்தியலையே இன்றுவரை கொண்டுள்ளனர்.
வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்கள் தேசிய இனம் என்ற அடிப்படையில் பிரிந்து செல்லும் உரிமையைக் கொண்டவர்கள். இதனையே சுய நிர்ணைய உரிமை என்கிறோம். பிரிந்து செல்லும் உரிமை வழங்கப்பட்டால் வட கிழக்கில் நடத்தப்படும் வாக்கெடுப்பின் ஊடாக பிரிந்து செல்வதா இணைந்து வாழ்வதா என்பதைத் தமிழ்த் தேசிய இனம் தீர்மனித்துக்கொள்ளும்.
சுய நிர்ணைய உரிமைக் கோரிக்கையை நிராகரிப்பதன் ஊடாக தேசிய இனம் என்பதை மக்களின் சார்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரிக்கின்றது. இதனால் திட்டமிட்ட சிங்கள பௌத்தக் குடியேற்றங்களையும், இரணுவக் குடியேற்றங்களையும், ஆக்கிரமிப்பையும் ஏற்றுக்கொள்கிறது.
சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு என்பது பல்தேசிய கோப்ரட்களின் ஆக்கிரமிப்பை இலகுபடுத்துகிறது. இதனால் ஏகாதிபத்திய சார்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனை அங்கீகரிக்கிறது.
இலங்கை உட்பட உலகின் எந்தப்பகுதியிலும் பிரிந்து செல்லும் உரிமைக்கான கோரிக்கை தடை செய்யப்படவில்லை. இந்த நிலையில் சிறீ தரன் உட்பட ஒவ்வொரு வாக்குப் பொறுக்கிகளுக்கும் சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கையை முன்வைப்பதில் என்ன தடையிருக்கிறது?
Since May 18, 2009, things are still in the fluid state. More time is need before we start pointing fingers again.
Are you running out of vocabulary, you keep repeating the same mantra again and again.