இலங்கை அரச சார்பு நிலையை நோக்கிச் செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் திடீரென அரசிற்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
தமிழினம் என்றொன்று இலங்கைத் தீவில் இருக்கக்கூடாது என்ற முனைப்புடனேயே இலங்கை அரசு திட்டமிட்டு சிங்களக் குடியேற்றங்களை தமிழர் தாயகப் பிரதேசங்களில் அரங்கேற்றி வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம்சுமத்தியுள்ளார்.
முல்லைத்தீவு கொக்கிளாய்ப் பகுதியில் நேற்று புதிதாக சிங்களக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன. இந்தக் குடும்பங்களுக்கு புதிதாகக் காணிகளும் வழங்கப்பட்டன. இலங்கைத் தீவில் யார் வேண்டுமானாலும் எங்கும் வாழலாம் என இலங்கை அரசு அறிவித்து ஒருசில நாட்கள் மாத்திரமே கடந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் ஆரம்பமான சிங்களக் குடியேற்றங்கள் இன்று முல்லைத்தீவு வரை படர்ந்து சென்றுள்ளன. இது ஒரு திட்டமிட்ட இன ஒழிப்பு நடவடிக்கை என தமிழ்த் தலைமைகள் விசனம் தெரிவித்துள்ளன.
முல்லைத்தீவு, கொக்கிளாய்ப் பகுதியில் சிங்களக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டது தொடர்பாகக் கருத்து வெளியிடும்போதே சுரேஷ் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தெற்கிலிருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வந்த சிங்களக் குடும்பங்கள் அன்று கடலோரக் கிராமங்களின் தற்காலிகமாகத் தொழில் நிமித்தம் குடியேறின. இது தற்காலிகம்தான்.எனவே, இவர்களை அடிப்படையாகக் கொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்கனவே சிங்களவர் இருந்ததாகக் கூறி இலங்கை அரசு தமிழ் நிலங்களை அபகரிக்க முயற்சிக்கின்றது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அநுராதபுர மாவட்டத்தின் சில பகுதிகளையும், முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளையும் இணைத்து வெலிஓயா பிரதேச செயலகமொன்றை இலங்கை அரசு திட்டமிட்டு நிறுவியுள்ளது. தனித் தமிழ் மாவட்டங்களை சிங்கள கலப்பு மாவட்டங்களாக மாற்றும் அரசின் வியூகங்களுள் இதுவும் ஒன்றுதான்.யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியினுள் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்தன. இப்பொழுது இலங்கைத் தீவில் தமிழினம் என்ற ஒன்று இருக்கக்கூடாது என்ற முனைப்புடனேயே இலங்கை அரசு செயற்படுகின்றது. அதன் செயற்பாடுகளும் இதனை நிரூபிக்கின்றன. இதன் ஓர் அங்கமே தமிழர் பிரதேசங்களில் அரங்கேற்றப்படும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றமாகும்.
இலங்கை அரசின் திட்டமிட்ட இன ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நாம் சர்வதேசத்திடம் முறையிடுவோம். ஏனென்றால், இன ஒழிப்பு நடவடிக்கைகள் கூடாது என்றே ஐ.நா. சாசனத்திலும் உள்ளது என்பதைப் புரிந்து இங்குள்ளவர்கள் செயற்பட வேண்டும்.திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், தமிழர் தாயகப் பிரதேசங்கள் இன்று எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் கூடி ஆராய்ந்து உறுதியான சில முடிவுகளை முன்னெடுக்கவுள்ளது.நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியதொரு நிலை ஏற்பட்டால் அதனையும் செய்ய நாம் தயாராகவே உள்ளோம். அரசின் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கவுள்ள சில முக்கிய விடயங்களைப் பின்னர் அறிவிப்போம் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.