இந்தியாவில் வளர்ந்து வரும் வலதுசாரி பாசிஸ்ட் இயக்கமான இந்துத்துவத்தின் சிந்தாந்த மூலவர் சாவர்க்கர். சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கில அரசுக்கு அடிக்கடி மன்னிப்புக் கடிதம் எழுதியவர் என்ற வரலாற்றுச் சிறப்பை பெற்றவர் அவர்.
அவர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் “காந்தி சொல்லித்தான் சாவர்க்கர் ஆங்கிலேய அரசுக்கு மன்னிப்புக்கடிதம் எழுதினார்”என்று கூறியிருக்கிறார்.
இது காந்தியை அவமதிக்கும் செயல் என பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில் 1911-ஆம் ஆண்டு அந்தமான் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்ட சாவர்க்கர் ஒன்பது ஆண்டுகளில் ஐந்து மன்னிப்புக் கடிதங்களை அனுப்பினார். 1911,1913,1914,1918,1920 என ஐந்து முறை கடிதம் எழுதினார். கடைசியாக எழுதப்பட்ட மன்னிப்புக்கடிதம் அவரது மனைவியால் ஆங்கிலேயே அரசுக்கு அனுப்பப்பட்டது.
1949-ஆம் ஆண்டு காந்தி கொலைவழக்கின் சூத்திரதாரியாக செயல்பட்ட சாவார்க்கர் போதிய ஆதாரங்கள் இல்லாதமையால் விடுதலை செய்யப்பட்டார். சாவர்க்கர் தொடர்பான ராஜ்நாத்சிங்கின் கருத்திற்கு அனைத்திந்திய மஜ்லிக் இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒவைசி கூறுகையில், அவர்கள் (பாஜக) திரித்துக்காட்டப்பட்ட தவறான வரலாற்றை முன்வைக்கின்றனர். இதேநிலை தொடர்ந்து நீடித்தால் மகாத்மா காந்தியை நீக்கவிட்டு சாவர்க்கரை தேசத்தந்தையாக மாற்றிவிடுவார்கள்’ என்றார்.