சார்க் மாநாட்டை முன்னிட்டு ஜூலை 30ஆம் திகதி முதல் விசேட பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனப் பொலிஸார் முன்னர் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்றையதினம் வீதிப் போக்குவரத்து ஒத்திகை நடத்தப்பட்டிருந்தது. இதனால் கொழும்பின் பல்வேறு வீதிகளில் நீண்ட தூரத்துக்கு வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததுடன், வீதிகள் மூடப்பட்டமையால் வாகனங்களில் பயணித்தவர்கள் ஒரு மணித்தியாலத்துக்கு மேல் வீதிகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சார்க் மாநாட்டை முன்னிட்டு தலைநகரின் சில வீதிகள் மூடப்பட்டதால் அந்தப் பகுதிகளிலுள்ள அலுவலகங்களின் செயற்பாடுகள் மந்த கதியில் இடம்பெற்றதுடன், சில வங்கிகளும் மூடப்பட்டிருந்தன.
பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாக மக்கள் தமது சாதாரண நடமாட்டத்தைக் குறைத்துக்கொண்டதால் வீதிகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைவடைந்துள்ளது.
இதேநேரம், சார்க் மாநாட்டை முன்னிட்டு கொழும்பு மற்றும் கம்பஹாவிலுள்ள 35 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அனைத்துப் பாடசாலைகளும் 4ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக மூடப்படவிருந்த நிலையில், கொழும்பு மற்றும் கம்பஹா பகுதியிலுள்ள சில பாடசாலைகள் நேற்றைய தினமே மூடப்பட்டுள்ளன.