மார்க்சிட் கம்யூனிஸ்ட் கட்சி தலித்துக்கள் மீதான தாக்குதல்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தலித்துக்கள் மீதான சமூக விரோதிகளின் வன்முறை அதிகரித்து வருவதும், வர்க்க ஒடுக்குமுறை கூர்மையடைந்து வருவதும் மறுக்க முடியத உண்மைகள்.
அறிக்கை:
சமீப காலமாக தலித் மக்கள் மீது சாதி வெறியர்களின் வன்கொடுமைத் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள பரளிப்புதூர் கிராமத்தில் தலித் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் சாதி வெறியர்கள் புகுந்து பல வீடுகளைத் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர். சில வீடுகளில் இருந்த விலை உயர்ந்த நகைகளை கொள்ளையடித்தும், ஒவ்வொரு வீட்டிற்குள் புகுந்து விலை உயர்ந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியும் அட்டூழியங்களைச் செய்துள்ளனர். போஸ் என்ற கண் தெரியாதவர் வைத்திருந்த மளிகைக் கடையைத் தீ வைத்துக் கொளுத்தி பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளாகாத, சேதமடையாத வீடுகளே இல்லை எனக் கூறுமளவுக்கு கொடூரமான தாக்குதல் நடந்துள்ளது.
தாக்குதல் நடைபெறும்போதே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் காவல்துறை பல மணி நேரமாகியும் வரவில்லை. தாக்குதல் நடந்து முடிந்து வன்முறையாளர்கள் வெளியேறிய பிறகே காவலர்கள் வந்துள்ளனர். தற்போது 64 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ள போதிலும், தாக்குதலில் முன்னின்று ஈடுபட்ட பலரும் இன்னமும் கைது செய்யப்படவில்லை.
ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் அருகேயுள்ள நாமக்கல் பாளையம் கிராமம் கூடுமையானூர் பகுதியில் சாதி வெறியர்கள் நுழைந்து அருந்ததியர் மக்கள் வழிபடும் ஓங்காளியம்மன் கோவிலைச் சுற்றி அந்த மக்கள் உருவாக்கியிருந்த தேர் மற்றும் வழிபாட்டுப் பொருட்களை அடித்து உடைத்துள்ளனர். இது சம்பந்தமாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறையோ தாக்குதல் தொடுத்தவர்கள், தாக்குதலுக்கு ஆளானவர்கள் ஆகிய இரண்டு தரப்பினர் மீதும் வழக்குப் போட்டு அநீதியாக நடந்து கொண்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் இன்னமும் கைது செய்யப்படவில்லை.
தலித் மக்கள் மீது இத்தகைய கொடூரமான வன்கொடுமைத் தாக்குதல்கள் நடத்திய சாதி வெறியர்களை மார்க்சி°ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. திண்டுக்கல் மாவட்டம், பரளிப்புதூரிலும், ஈரோடு மாவட்டம் கூடுமையானூரிலும் இத்தகைய தாக்குதல் நடத்திய வன்முறையாளர்களை உடனடியாகக் கைது செய்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு உரிய நஷ்ட ஈட்டை தாமதமின்றி வழங்குமாறும், பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீதே காவல்துறையினரால் அநீதியாகப் போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறுமாறும் தமிழக அரசை மார்க்சி°ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வற்புறுத்துகிறது.